Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மூணாறு, தேக்கடியில் நடந்த உண்மை சம்பவம்.. கடவுளின் தேசம் த(க)ண்ணீரில் மிதக்க இதுதான் காரணம்

Subscribe to Oneindia Tamil

தேனி: கடவுளின் தேசம் அழகானது.. ஆனால் அழகு மிகவும் ஆபத்தானது என்பதை நிரூபிக்கும் வகையில் கேரளாவின் தேக்கடி, மூணாறு ஆகிய பகுதிகளில் நடந்த உண்மை சம்பவங்களை பற்றி பார்ப்போம். சென்னைக்கு மட்டுமல்ல, மொத்த கேரளாவிற்கும் தண்ணீரில் தான் கண்டம் என்பதே எதார்த்தம். தண்ணீரால் பல முறை பாடங்கள் கற்றாலும் அங்கு எதுவுமே மாறவில்லை என்பதே கசப்பான உண்மை.

ஒவ்வொரு டிசம்பரும் சென்னை மாநகரம் தண்ணீர் தேசமாகவும் கண்ணீர் தேசமாகவும் எப்படி மாறுகிறதோ, அதேபோல் ஒவ்வொரு ஜூலையும் கேரளா மாநிலம் தண்ணீர் தேசமாகவும், நிலச்சரிவில் சிக்கி சரியும் மாநிலமாகவும் தொடர்கிறது. கேரளாவை பொறுத்தவரை ஒரு பக்கம் முழுவதும் அரபிக்கடலும் மறுபக்கம் முழுவதும் மேற்கு தொடர்ச்சி மலையும் அமைந்துள்ளது.

tour Wayanad Munnar

மலைகளின் மாநிலமாக இருக்கும் கேரளாவில் திருவனந்தபுரம் மாவட்டம் தொடங்கி கடைசியில் காசர்கோடு வரை பெரும்பாலான மாவட்டங்கள் மலைகளை எல்லைகளாக கொண்ட மாவட்டங்கள் ஆகும். இதனால் இயல்பாகவே ஆறுகள் அதிக அளவில் உற்பத்தியாகி அது அப்படியே அரபிக்கடலை நோக்கி பாய்ந்து செல்லும். இதில் இடுக்கி, வயநாடு,கோட்டயம், பத்தினம் திட்டா உள்ளிட்ட மாவட்டங்கள் 70 சதவீதம் முதல் 100 சதவீதம் அளவிற்கு மலை மாவட்டங்கள் ஆகும்.

இதில் இடுக்கி, வயநாடு ஆகிய மாவட்டங்கள் முற்றிலும் மலை மாவட்டங்கள் ஆகும். இந்த இரண்டு மாவட்டங்களும் கேரளா, கடவுளின் தேசம் என்று புகழப்படுவதற்கு காரணம் ஆகும்.இந்த இரண்டு மாவட்டங்களும் சர்வதேச அளவில் புகழ் பெற்ற சுற்றுலா தலங்களை கொண்ட மாவட்டடங்கள் ஆகும். அங்கு வாழ உண்மையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பார்கள். தேனி, தென்காசி மாவட்டங்களை விட இரண்டு மடங்கு இயற்கை அங்கு அழகை கொட்டிக் கொடுத்துள்ளது. ஆனால் அதைவிட அதிகமான ஆபத்தையும் அந்த அழகு கொண்டுள்ளது

வயநாடு, இடுக்கி மாவட்டத்தை பொறுத்தவரை செங்குத்தான மலைகளை கொண்ட பகுதிகள் ஆகும். அங்கு இயற்கையான காட்டுமரங்கள் அழிக்கப்பட்டு, அதற்கு பதில் தேயிலை தோட்டங்களும், தோட்டப்பயிர்களும் அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன. வனப்பகுதிகள் அங்கு குறைந்து ரப்பர் உள்ளிட்ட தோட்டங்கள் அதிக அளவில் உருவாகி அடையாளமே மாறிவிட்டன. இதன் காரணமாக அதீத கனமழை பெய்யும் போது, மணல் அரிப்பு ஏற்படுகிறது. ஈரப்பதம் மிக அதிகமாகும் போது மண், தண்ணீரில் கரைந்த உருண்டு ஓடுகிறது. காட்டு மரங்கள் மணலில் அடியாழம் வரை வேர் பரப்பி இறுகப் பற்றிக்கொள்ளும் என்பதால் அதீத கனமழை பெய்யும் போது நிலச்சரிவு ஏற்படாமல் தடுக்கப்படும். ஆனால் வயநாடு மற்றும் இடுக்கி மாவட்டங்களில் அப்படி இல்லை. அதிகப்படியான தோட்டப்பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளதால் மண்ணை தாங்கி பிடிக்க முடியாமல் மரங்கள் விட்டுவிடுகின்றன. இதனால் கனமழை பெய்யும் போது, காட்டற்று வெள்ளத்துடன், செங்குத்தான மலை மேடுகளும் சரிந்துவிடுகின்றன.

அப்படித்தான் வயநாட்டில் நேற்று முன்தினம் அதீத கனமழை பெய்த போது, நிலச்சரிவு ஏற்பட்டது. வயநாடு மாவட்டம் முண்டக்கை பகுதியில் நேற்று அதிகாலை 2 மணியளவில் திடீரென பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அத்துடன் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. வெள்ளத்தில் மரங்களும், பாறைகளும் அடித்து வரப்பட்ட நிலையில், ஆறுகள் ஒரு கட்டத்தில் திசை மாறியது. இதனால் கட்டுக்கடங்காத வெள்ளம், அங்கிருந்த வீடுகளையும், சாலைகளையும், பாலங்களையும் மூழ்கடித்தவாறு சென்றன.

இது ஒருபுறம் எனில், அதிகாலை 4 மணியளவில் அருகில் உள்ள சூரல்மலை மற்றும் மேப்பாடி பகுதியிலும் காட்டாற்று வெள்ளத்துடன் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் கிராமங்கள் மண்ணில் புதைந்தன. அதிலும் ஏராளமான மக்கள் சிக்கினர். மொத்தமாக 3 இடங்களில் ஏற்பட நிலச்சரிவில் 170க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 1000 பேர் சிக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், உயிரிழப்பு இன்னமும் அதிகரிக்கும் என்றே தெரிகிறது.

வயநாட்டில் இப்படி என்றால், 2020ம் ஆண்டு ஆகஸ்ட் தேதி இடுக்கி மாவட்டம் மூணாறு ராஜமலை அருகே உள்ள பெட்டிமுடி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பு, கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கியது. இதில், 25 வீடுகளில் வசித்த 82 பேர் மண்ணில் புதையுண்டார்கள். இது பெரிய சம்பவம் ஆகும். இதேபோல் ஏராளமான முறை சிறிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இடுக்கி வயநாட்டில் ஏராளமானோர் நிலச்சரிவு மற்றும் கனமழைக்கு கடந்த 50 வருடங்களில் இறந்துள்ளனர்.

அதீத கனமழை வந்தால் குமுளி கோட்டயம் சாலையில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு தான் வாகனத்தில் செல்ல வேண்டும். இதேபோல் தான் மழைக் காலத்தில் தேனியில் இருந்து மூணாறுக்கோ அல்லது கொச்சினுக்கோ சென்றால், மிகவும் சவாலான பயணமாக இருக்கும். ஒருமுறை நடந்த ஒரு உண்மை சம்பவத்தை பற்றி பார்ப்போம். கேரளாவிற்கு புயல் என்று அறிவித்திருந்தார்கள்.

இடுக்கி மாவட்டம் முழுவதும் மழை வெளுத்து வாங்கி வந்தது. தேனி மாவட்டத்தில் இருந்து குமுளிக்கு சென்றுள்ளார்கள் நண்பர்கள். அங்கு தேக்கடியில் ஒரு ஓட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். மிகசிறிய ஓட்டல் தான் அது. அந்த ஓட்டல் என்பது நீர்வழிப்பாதையின் கரையை ஒட்டி அமைந்திருந்தது. அங்கு அதுபோல் நீர்வழித்தடத்தை ஒட்டிய பகுதிகளில ஏராளமான கடைகள் வணிக நிறுவனங்கள் அமைந்திருந்தன. அதீத மழை பெய்து கொண்டிருந்தது. ஓட்டலை விட்டு சற்று வெளியே கால் வைத்தால் அப்படியே தண்ணீர் இழுத்து சென்று விடும். அப்படித்தான் இருந்தது.

செங்குத்தான மலையில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்த வந்து கொண்டே இருந்தது. நிலைமை தெரியாமல் யாராவது வந்தால் அந்த பகுதியில் அப்படியே அடித்து சென்றுவிடும். அப்படித்தான் நிலைமை இருந்தது. உயிரை கையில் பிடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி தேனிக்கு வந்தார்கள். இன்னொரு முக்கியமான விஷயம், கேரளாவின் தேக்கடி மலைப்பகுதிகளில் சர்வ சாதாரணமாக 10 மாடி,. 8 மாடியில் நட்சத்திர ஓட்டல்களை பார்க்க முடியும். அப்படி எல்லாம் கொடைக்கானல் அல்லது ஊட்டியில் பார்க்க முடியாது. நீர் வழிப்பாதைகள் மற்றும் செங்குத்தான மலையின் அடிவாரங்களில் வீடுகள் அதிகமாகவே இருக்கும். இதனால் அதீத மழை பெய்யும் போதெல்லாம் இடுக்கியும் வயநாடும் அதிகமாக பாதிக்கப்படுகின்றன.

இரண்டு மாவட்டங்களுமே மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ளன. இங்கு வணிக நோக்கத்துக்காகத் தோட்டப்பயிர்கள் பெருமளவில் விளைவிக்கப்படுவதுடன், சொகுசு விடுதிகளும் கண்டபடி அமைக்கப்பட்டுளளன. இதனால் அடிக்கடி கனமழை பெய்யும் போது, நிலச்சரிவு ஏற்படுவது தொடர்கிறது. இதற்கு நிரந்தர தீர்வை கேரள அரசு தான் உருவாக்க வேண்டும். அப்போது தான் கடவுளின் தேசம் காப்பற்றப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+