ஊட்டி மக்களால் நம்பவே முடியாத சம்பவம்.. கனவாய் இருக்கக் கூடாதா? 30 ஆண்டுகளில் இதுதான் முதல் முறை
ஊட்டி: 30 ஆண்டுகளுக்குப் பின் முழுமையாக வறண்டுள்ளது நீலகிரி மாவட்டம் குந்தா அணை. நீலகிரியில் நிலவும் கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக நீர் நிலைகளில் குடிநீர் இருப்பு வேகமாக சரிந்து வருகிறது.
தமிழ் நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள நீலகிரி நீல மலைத் தொடரில் அமைந்துள்ள நகரம் உதகமண்டலம் என்கிற ஊட்டி. இங்கு தட்பவெப்ப நிலை மற்றும் வானிலை ஆண்டு முழுவதும் இதமாக இருக்கும் என்பதால் மக்களின் விருப்பமான விடுமுறைப் பயணத்திற்கு ஊட்டி தான் சிறந்த தேர்வாக உள்ளது.

சராசரி வெப்பநிலையின் காரணமாக, ஆண்டு முழுவதும் பார்வையிட ஏற்ற சில மலைவாசஸ்தலங்களில் ஒன்றாக ஊட்டி இருக்கிறது. குளிர்காலங்களில் 0 டிகிரி அளவிற்கு வெப்பநிலை இங்கு சரியவும் செய்யவும்.. ஊட்டியில் கடந்த ஆண்டு உறைபனி காலம் எப்படி இருந்ததோ, அதற்கு அப்படியே எதிர்மாறாக தற்போது கோடையில் கடுமையான வெயில் கொளுத்துகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை இந்த மாத தொடக்கத்தில் இருந்தே கோடை வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. கோவை உள்பட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகிறது. எப்போதும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. பகல் நேரங்களில் வீட்டுக்கு வெளியே செல்ல முடியாத நிலை தமிழகம் முழுவதுமே ஏற்பட்டுள்ளது.
ஊட்டியை பொறுத்தவரை 1951-ம் ஆண்டுக்கு பிறகு (73 ஆண்டுகள்) ஊட்டியில் நேற்று முன்தினம் அதிக வெப்பநிலை பதிவாகி உள்ளது. இதுவரை ஊட்டியில் அதிகபட்சமாக 27.5 டிகிரி செல்சியஸ் (81.5 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலை பதிவாகி இருந்த நிலையில், தற்போது 28 டிகிரி செல்சியஸ் (82.4 டிகிரி பாரன்ஹீட்) பதிவாகி உள்ளது.
ஊட்டியில் இரவில் ஸ்வட்டர் போடாமல் தூங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஊட்டியில் மின்விசிறியே இருக்காது. மின்விசிறி வாங்க வேண்டிய நிலைக்கு இந்த ஆண்டு தள்ளப்பட்டுள்ளனர். நீலகிரியில் வீட்டில் உள்ள முதியோர்கள், கர்ப்பிணிகள் உஷ்ணம் தாங்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். இதேபோல் கோடைவிடுமுறை காரணமாக வீடுகளில் உள்ள பள்ளி மாணவர்கள் பலர் பரிதவிக்கிறார்கள்.

இதனிடையே ஊட்டியில் போய் குளுகுளுவென இருக்கலாம் என்று வந்த சுற்றுலா பயணிகள் அதிக வெயிலால் அவதிப்படும் நிலை இருக்கிறது. குளிர்காலத்தில் நடுங்க வைத்த ஊட்டி, வெயில் காலமான தற்போது நோகடித்து வருகிறது. ஊட்டியில் கோடை மழை பெய்ய தொடங்கினால் மட்டுமே இயல்பான சீசன் உருவாகும். தற்போது தமிழ்நாட்டின் மற்ற ஊர்களைவிட குறைவான வெப்பநிலை உள்ளது. அவ்வளவுதான் மற்றபடி, மலைகளில் அடிக்கும் ஊமை வெயில் இங்கும் கொளுத்துகிறது.
மழை இந்த ஆண்டு ஊட்டி உள்ளிட்ட நீலகிரி மாவட்டத்தை பெரிய அளவில் கைவிட்டது. இதன் காரணமாக குடிநீருக்கும் பிரச்சனையாக உள்ளது.30 ஆண்டுகளுக்குப் பின் முழுமையாக வறண்டுள்ளது நீலகிரி மாவட்டம் குந்தா அணை. நீர் மின்உற்பத்தியில் முக்கிய பங்கு வகித்து வரும் குந்தா அணை 30 ஆண்டுகளுக்கு பின்னர் தண்ணீர் இன்றி முழுமையாக வறண்டு காணப்படுகிறது. இந்த காட்சியை கண்டு ஊட்டி மக்கள் கலங்கி போய் உள்ளார்கள். தென்மேற்கு பருவ மழை ஜூன் மாதத்தில் தான் ஊட்டியில் தொடங்கும். அதற்குள் கோடை மழை பெய்ய தொடங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது. அப்போது குடிநீர் பிரச்சனையை ஓரளவு சமாளிக்க முடியும் என்கிற நிலை உள்ளது.












Click it and Unblock the Notifications