உடுமலைப்பேட்டை வழியாக மூணாறு 'டூர்' போக திட்டமா? தப்பித்தவறி கூட இப்படி மட்டும் திட்டம் போடாதீங்க
மூணாறு: உடுமலைப்பேட்டை வழியாக மூணாறு டூர் போக பிளான் பண்றீங்களா? கண்டிப்பாக இதை பாருங்கள்.. குறிப்பாக மாலை அல்லது இரவில் கார் அல்லது இருசக்கர வாகனத்தில் செல்ல விரும்புவோர் அவசியம் பாருங்கள்.
கடவுளின் தேசமான கேரளாவில் அழகுகள் கொட்டிக்கிடக்கும் இடம் என்றால், அதுவும் கேரளாவிற்கே பொக்கிசமான இடம் என்றால் அது நிச்சயம் மூணாறு தான். கொச்சினில் இருந்து சில மணி நேரத்தில் போய்விட முடியும். தமிழ்நாட்டில் இருந்து செல்பவர்கள் தேனி வழியாக எளிதாக மூணாறு போகலாம்.

அதேபோல் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக கோவை பகுதியைச் சேர்ந்தவர்கள் உடுமலைப்பேட்டை வழியாகவும் போகலாம். அதேநேரம் உடுமலைப்பேட்டை வழியாக மூணாறுக்கு மலை நேரங்களில் அல்லது இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் செல்லவே கூடாது. ஏனெனில் வனவிலங்குகள் அதிக அளவில் சாலைகளில் சுற்றும். எனவே முடிந்த வரை பகலில் செல்வது நல்லது. இல்லாவிட்டால் பேருந்துகளில் செல்லலாம்.
வனவிலங்குகள் என்று குறிப்பிட்டு சொல்ல காரணம்.. மூணாறு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில மாதங்களாக படையப்பா என்ற காட்டு யானை அட்டகாசம் செய்து வந்தது. அவை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து உலா வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். படையப்பா யானை தோட்டங்களுக்குள் நுழைந்து பயிர்களை நாசப்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளது.
மூணாறு அருகே நயமங்காடு எஸ்டேட் பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் படையப்பா யானை கடந்த திங்கள்கிழமை காலையில் சுற்றியது. அதன் பின்னர் மூணாறு-உடுமலைப்பேட்டை சாலையில் உலா வந்தது. அப்போது உடுமலையில் இருந்து மூணாறு நோக்கி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த யானை ஓடி சென்று லாரியை வழிமறித்து ஆக்ரோசமாக முன்பக்க கண்ணாடியை உடைக்க முயன்றது. இதற்கிடையே அந்த வழியாக வந்தவர்கள் கூச்சல் போட்டதால் யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.
இதனால் லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளார். இதனிடையே மாலை 5 மணி அளவில் அதே பகுதிக்கு மீண்டும் படையப்பா யானை வந்தது. அப்போது அந்த வழியாக மூணாறில் இருந்து மறையூர் நோக்கி கார் ஒன்று வந்தது. அந்த காரை நோக்கி யானை வேகமாக வந்தது. இதைக்கண்டதும் காரில் இருந்தவர்கள் அதில் இருந்து இறங்கி தப்பி ஓடியிருக்கிறார்கள்.
பின்னர் அங்கு வந்த யானை தும்பிக்கையால் காரை உடைத்து சேதப்படுத்தியதுடன் பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. மூணாறு-உடுமலை சாலையில் படையப்பா யானை அட்டகாசம் செய்து வருவதால் வனத்துறையினர் நயமங்காடு பகுதியில் முகாமிட்டுள்ளனர்.
இதனிடையே உடுமலைப்பேட்டை அருகே மறையூர் - மூணாறு சாலையில் கன்னிமலை எஸ்டேட் பகுதியில் நேற்று இரவு மூணாறில் இருந்து இரண்டு பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக சாலையில் சுற்றித்திரிந்த ஒற்றை காட்டு யானை, ஆட்டோவை கடுமையாக தும்பிக்கையால் தாக்கியது. இதில் ஆட்டோ ஓட்டுனர் சுரேஸ்குமார் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். ஆட்டோவில் பயணம் செய்த ஐசக்ராஜா, ரெஜினா தம்பதியர் இருவர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். எனவே காரில் அல்லது இருசக்கர வாகனத்தில் இரவு அல்லது மாலை நேரங்களில் உடுமலைப்பேட்டை வழியாக செல்வதை தவிர்ப்பது நல்லது என்கிறார்கள் அந்த பகுதி மக்கள்.












Click it and Unblock the Notifications