வால்பாறை சுற்றுலா செல்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. 40 கொண்டை ஊசி வளைவிலும் நடந்த ஆச்சரியம்

Subscribe to Oneindia Tamil

கோவை: மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வால்பாறைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். கோடைக்காலம் தொடங்கியதில் இருந்தே சீசன் களைகட்டியுள்ளது. வால்பாறை செல்லும் பிரதான வழித்தடமான பொள்ளாச்சி - வால்பாறை மலைப்பாதையில் உள்ள 40 கொண்டை ஊசி வளைவுகளிலும் மாவட்ட காவல்துறை சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக பொருத்தப்பட்டு உள்ளது

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வால்பாறை கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,474 அடி முதல் 3,914 அடி வரை (1,059 மீட்டர் - 1,193 மீட்டர்) உயரத்தில் அமைந்திருக்கிறது. இது ஊட்டி, கொடைக்கானலை விட சற்றே குறைவான உயரம் கொண்ட நடுத்தர மலைப்பிரதேசம். பொள்ளாச்சி, கோவை, உடுமலை போன்ற சமவெளிப்பகுதிகளில் கோடைக்காலத்தில் வெயில் கொளுத்தினாலும், வால்பாறையில் வானிலை மிகவும் இதமாக இருக்கும். பகல் நேர சராசரி வெப்பநிலை 25°C முதல் 30°C வரை இருக்கும். இரவு நேர சராசரி வெப்பநிலை: 15°C முதல் 20°C வரை குறைந்து, நல்ல குளிர்ச்சியான சூழல் இருக்கும்.

Cameras Installed at All 40 Hairpin Bends in Valparai Good News on the Road in Pollachi-Valparai

வால்பாறை என்பது ஊட்டி, கொடைக்கானல் போல வணிக மயமான சுற்றுலா நகரம் அல்ல.. அடர்ந்த காடுகளும் தேயிலைத் தோட்டங்களும் நிறைந்த இடமாக வால்பாறை இருக்கிறது. வால்பாறைக்கு பிரதான வழித்தடம் என்றால், பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை செல்லும் வழி தான். இந்த சாலையில் 40 கொண்டைஊசி வளைவுகள் உள்ளன. இந்த கொண்டை ஊசி வளைவுகள் உலகப் புகழ்பெற்றவை. இங்கிருந்து கீழே உள்ள ஆழியார் அணையைப் பார்ப்பது கொள்ளை அழகு ஆகும். இங்குள்ள சோலையார் அணை ஆசியாவிலேயே மிக ஆழமான அணைகளில் ஒன்றாகும். இதன் பிரம்மாண்டமும், சுற்றியுள்ள பசுமையும் கண்களுக்கு விருந்தளிக்கும்

நல்லமுடி பூஞ்சோலை வியூ பாயிண்ட் பிரம்மிப்பை தரும். இங்கிருந்து தேயிலைத் தோட்டங்களின் நடுவே நடந்து சென்று, மேற்குத் தொடர்ச்சி மலையின் பிரம்மாண்டமான பள்ளத்தாக்குகளையும், நீர்வீழ்ச்சிகளையும் ரசிக்கலாம். அதேபோல் வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆறு தனித்துவம் ஆனது. ஆழம் குறைவான, தட்டையான கூழாங்கற்கள் நிறைந்த இந்த ஆற்றில் குடும்பத்துடன் பாதுகாப்பாகக் குளித்து மகிழ முடியும். இங்குள்ள சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி ( "தென்னிந்தியாவின் சிரபுஞ்சி") என்று அழைக்கப்படும் அளவுக்கு அதிக மழையைப் பெறும் பகுதியாகும். அடர்ந்த காட்டுக்குள் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. அதேபோல் ஆனைமுடி வியூ பாயிண்ட் & லோம்ஸ் வியூ பாயிண்ட் ஆகியவை இயற்கை எழில் கொஞ்சும் மலைகளின் அழகை மொத்தமாக ரசிக்கக்கூடிய இடங்கள் ஆகும்.

வால்பாறைக்கு கேரள மக்கள் அதிக அளவில் விரும்பி செல்கிறார்கள். கேரளாவில் ஏகப்பட்ட மலைப்பிரதேசங்கள் இருந்தாலும், மலையாளிகள் வால்பாறையை நோக்கிப் படையெடுப்பது அதிகமாக உள்ளது. கேரளாவின் திருச்சூர் மாவட்ட எல்லைக்கு மிக அருகில் வால்பாறை உள்ளது. கேரளாவின் புகழ்பெற்ற அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியிலிருந்து மலக்கப்பாரா வழியாக வால்பாறைக்கு வரும் காட்டுச் சாலைப் பயணம் பைக் ரைடர்கள் மற்றும் சுற்றுலாப் பிரியர்களின் சொர்க்கமாகும். அடர்ந்த காடு, காட்டு யானைகள், அருவிகள் என இந்த ரைடு அலாதியானது என்பதால் பலரும் வருகிறார்கள்.

கேரளாவின் மூணாறு, வாகமன், வயநாடு போன்ற இடங்கள் எப்போதும் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும். ஆனால், வால்பாறை இன்னும் இயற்கை மாறாமல், அமைதியாக, நிம்மதியான சூழலைக் கொண்டிருப்பதால் கேரள மக்கள் ஊட்டி, கொடைக்கானலுக்கு அடுத்தபடியாக விரும்பி வரும் இடமாக வால்பாறை இருக்கிறது. பிற முக்கிய ஹில் ஸ்டேஷன்களுடன் ஒப்பிடும்போது வால்பாறையில் தங்கும் விடுதிகளும் உணவும் பட்ஜெட் மிக குறைவு தான். வால்பாறைக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்காகவே பிரத்யேகமான சில விஷயங்களை காவல்துறை செய்துள்ளது.

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் குற்ற சம்பவங்கள் நடப்பதைத் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு வருகின்றன. அதில் பதிவாகும் காட்சிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேன் உருண்டு 10 பேர் உயிரிழந்தனர். எனவே மலைப்பாதையில் கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

அதன்படி கோவை மாவட்ட காவல்துறை சார்பில் பொள்ளாச்சி- வால்பாறை மலைப்பாதையில் உள்ள 40 கொண்டை ஊசி வளைவுகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அதில் பதிவாகும் காட்சிகளை கோவை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இருந்தபடியே போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதுதவிர தமிழக- கேரள எல்லை, மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் பொருத்தப்பட்ட கேமராக்களில் பதிவாகும் காட்சிகளையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், கோவை மாவட்டத்தில் தமிழக-கேரள எல்லையில் 13 சோதனைச் சாவடிகளும், மாவட்ட எல்லையில் 11 சோதனைச்சாவடிகளும் உள்ளன. இதில் மாநில எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் 28 அதிநவீன கேமராக்கள், 34 சாதாரண கேமராக்கள், மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் 8 அதிநவீன கேமராக்கள், 26 சாதாரண கேமராக்கள், 40 போலீஸ் நிலையத்தில் தலா 2 அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. பொள்ளாச்சி-வால்பாறை மலைப்பாதையில் 40 கொண்டை ஊசி வளைவுகளிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அந்த வகையில் கோவை மாவட்டம் முழுவதும் உள்ள 1,500 கேமராக்களும் தற்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள நவீன கட்டுப்பாட்டு அறையில் இணைக்கப்பட்டு உள்ளன.

எனவே அங்கிருந்த படியே போலீசார் அனைத்து கேமராக்களிலும் பதிவாகும் காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் போலீஸ் நிலையங்கள், சோதனைச்சாவடிகளில் உள்ள அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பேசும் வசதியும், பேசுவதைக் கேட்கும் வசதியும் உள்ளது. இதனால் போலீசாருக்கு உடனடியாக உத்தரவுகளை பிறப்பிக்க முடியும்" என்றார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+