இஸ்ரோ போடும் மெகா பிளான்! ரெடியாகும் குலசேகரப்பட்டினம்! கூடவே தூத்துக்குடிக்கு மற்றொரு ஜாக்பாட்
சென்னை: சந்திரயான் 3 வெற்றி என்பது இஸ்ரோவுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்துள்ள நிலையில், இஸ்ரோவின் அடுத்த ஏவுதளம் அமையும் குலசேகரப்பட்டினம் குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
சந்திரயான் 3 சாட்டிலைட் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.. நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் சாட்டிலைட் என்ற பெயரையும் சந்திரயான் 3 இந்தியாவுக்குப் பெற்றுத் தந்துள்ளது.

இதற்கிடையே இஸ்ரோ இப்போது அடுத்தகட்ட மிஷன்களில் கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி, ஸ்ரீ ஹரிகோட்டாவுக்கு அடுத்ததாக குலசேகரப்பட்டினத்தில் புதிய ஏவுதளம் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.
இஸ்ரோ: இப்போது இஸ்ரோவின் அனைத்து ராக்கெட்களையும் ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து தான் விண்ணில் செலுத்தி வருகிறது. வரும் காலத்தில் இஸ்ரோ அனுப்பும் சாட்டிலைட்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கவே உள்ளது. ஏனென்றால் உலகின் எந்தவொரு நாட்டை காட்டிலும் குறைந்த செலவில் சாட்டிலைட்களை விண்ணுக்கு அனுப்புவதில் இஸ்ரோ சிறந்து விளங்குகிறது. இதனால் அமெரிக்கா, பிரான்ஸ் என உலகின் பல நாடுகளும் கூட தங்கள் சாட்டிலைட்களை அனுப்ப இந்தியாவிடம் தான் வருகிறார்கள்.
இதைக் கருத்தில் கொண்டு இஸ்ரோ ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருப்பதைப் போலவே புதிய ஏவுதளம் ஒன்றை அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்காக அவர்கள் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினம் என்ற இடத்தை தேர்வு செய்தது. பல்வேறு ஆய்வுப் பணிகளுக்குப் பிறகு குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகளைத் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
பணிகள்: இது தொடர்பாக இப்போது சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவின் 2வது விண்வெளி நிலையத்தை குலசேகரப்பட்டினத்தில் அமைக்க மத்திய அரசு இப்போது இறுதி ஒப்புதல் அளித்துள்ளது.. 2,300 ஏக்கர் பரப்பளவில் இந்த ஏவுதளம் அமையவுள்ள நிலையில், இதற்குத் தேவையான நிலம் கையகப்படுத்தும் பணிகளில் 99% முடிந்துவிட்டது. கையகப்படுத்த நிலமும் இப்போது இஸ்ரோ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து இப்போது பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி எனப் பல அதிநவீன ராக்கெட்கள் ஏவப்பட்டு வருகிறது. ஆனால், குலசேகரப்பட்டினத்தில் இருந்து தொடக்கத்திலேயே இதுபோன்ற பெரிய ராக்கெட்கள் ஏவப்படாது. முதலில் இங்கு அமையும் ஏவுதளத்தில் இருந்து சிறிய ரக சாட்டிலைட்களை அனுப்ப மட்டும் இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்த ஏவுதளம் அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவடைய சுமார் 2 ஆண்டுகள் வரை ஆகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மற்றொரு ஜாக்பாட்: மேலும், இதன் அருகிலேயே விண்வெளி தொழில் பூங்காவையும் அமைக்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் அமையும் போது சுற்றியுள்ள விண்வெளி தொழில் பூங்காவும் பெரியளவில் நிச்சயம் பயன்பெறும். இது தூத்துக்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு நிச்சயம் எடுத்துச் செல்லும்.
ஏன் முக்கியம்: குலசேகரப்பட்டினம் ஏன் முக்கியமானது என்பதை விளக்கும் அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்ரீநாத் ரவிச்சந்திரன், "குலசேகரப்பட்டினம் சிறிய சாட்டிலைட்களை விண்ணில் செலுத்த பெஸ்ட் இடம்.. குலசேகரப்பட்டினத்திற்கும் அண்டார்டிகாவிற்கும் இடையில் எந்தவொரு நிலமும் இல்லை.. இது ஏவுவதற்கு ஒரு அழகான பெல்ட்டை அமைக்கிறது.. நீங்கள் சுற்றுப்பாதையில் இல்லையென்றால் நிலத்தின் மீது பறக்கக் கூடாது என்ற விதி இருக்கிறது. இதனால் இப்போது நமக்கு எரிபொருள் அதிகம் செலவாகிறது.
அதேநேரம் குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் வந்தால் இந்தப் பிரச்சினை இருக்காது. அப்பால் கடல் மட்டுமே இருப்பதால் பிரச்சினை இருக்காது. அடுத்து அண்டார்டிகா மீது செல்வதற்குள் நாம் சுற்றுப்பாதையில் இருப்போம், இதனால் எரிபொருள் செலவு கணிசமாகக் குறையும். மேலும், இது பூமத்திய ரேகைக்கு அருகிலேயே இருப்பதும் நமக்குச் சிறந்த முடிவைத் தரும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications