ஊட்டி போறவங்களுக்கு பெரிய நிம்மதி.. இ பாஸ் சோதனையில் திடீர் மாற்றம்! இனி இந்த 5 இடங்களில் மட்டுமே
நீலகிரி: நீலகிரியில் இ பாஸ் நடைமுறை இனி 4 முக்கிய சோதனை சாவடிகளில் மட்டுமே கடைபிடிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கல்லாறு, குஞ்சப்பனை, மேல் கூடலூர் ஆகிய செக்போஸ்ட்டில் மட்டுமே இ பாஸ் நடைமுறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இ பாஸ் நடைமுறையால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்பதால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி மலைகளின் ராணி என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் மிகவும் புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக ஊட்டி உள்ளது. இங்குள்ள குளுமையான இயற்கை சூழல் சுற்றுலா பயணிகளை மெய்சிலிர்க்க வைக்கும். இதனால் கோடை காலங்களில் சுற்றுலா பயணிகள் விரும்பி செல்லும் இடமாக ஊட்டி உள்ளது.

இ பாஸ் கட்டாயம்
கோவைக்கு அருகில் உள்ள ஊட்டிக்கு ஆண்டு முழுவதும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். கோடை சீசனான ஏப்ரல், மே மாதங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஊட்டியை நோக்கி படையெடுக்கின்றன. இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் ஊட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் போன்ற இடங்கள் ஸ்தம்பிக்கின்றன.
இதையடுத்து நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாகவும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதன்படி, கடந்த ஆண்டு மே 7 ஆம் தேதி முதல் நீலகிரி மற்றும் கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டது,
14 இடங்களில் சோதனை
இதன்படி கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஜூன் இறுதி வரை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்களும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8 ஆயிரம் சுற்றுலா வாகனங்களை மட்டுமே நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்தது. இதன்படி இ பாஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது . இதற்காக நீலகிரி வரும் வாகனங்களுக்கு மொத்தம் 14 இடங்களில் இ பாஸ் சோதனை நடைபெற்று வருகிறது.
இனி 5 இடங்களில் மட்டும் சோதனை
இ பாஸ் சோதனை காரணமாக அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சிக்னல் சரியாக கிடைக்காததால் கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்வதில் எற்படுவதில் தாமதம் ஆகியவற்றால் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் சூழல் இருந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். குறிப்பாக அத்தியாவசிய பணிக்காக செல்லும் உள்ளூர் மக்களும் இதில் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் தான், இன்று முதல் 5 இடங்களில் மட்டுமே இ பாஸ் சோதனை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசல், சிக்னல் பிரச்சினை ஆகியவை காரணமாக சோதனை சாவடிகளை 5 ஆக குறைத்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். கல்லாறு, குஞ்சப்பனை, மசினகுடி, மேல் கூடலூர், கெத்தை ஆகிய 5 சோதனை சாவடிகளில் மட்டும் இனி இ-பாஸ் சோதனை நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட ஆட்சியரின் இந்த அறிவிப்பினால் ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications