Courtallam | குற்றாலத்தில் விருந்து காத்திருக்கிறது.. குவிந்த சுற்றுலா பயணிகளுக்கு இயற்கை தந்த இன்ப அதிர்ச்சி
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தென்மேற்கு பருவ மழை காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களைகட்டும். சில சமயம் செப்டம்பர் வரையிலும் சீசன் இருக்கும். தற்போது குற்றால அருவிகள் குளிப்பதற்கு அற்புதமான நிலையில் இருக்கிறது. மேலும் வெயில் இல்லாமல் குளிர்ந்த காற்று வீசுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஏராளமானோர் குற்றாலத்தில் குவிந்து வருகிறார்கள். இதமான குளிரில், லேசான மழை சாரலில், அருவியில் குளித்து மகிழ்கிறார்கள்.
பொதுவாக ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள குற்றால அருவிகளில் மழை பெய்தால் தண்ணீர் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும். மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் குளிப்பதற்கு பலரும் விரும்புவார்கள். காரணம் கிளைமேட் தான். வெயில் சுத்தமாக தெரியாது. மலையில், மழையில், மாலையில், அருவிகளில் நனைந்திடும் சுகம் அலாதியானது.

குற்றாலம் சீசன்
எப்போது லேசான மழை மற்றும் குளிர்ந்த காற்று குற்றலா அருவிகளில் சீசன் காலத்தில் வீசும். இதனால் குற்றால அருவிகளில் அப்போது வந்து குளிப்பது நிஜமாகவே அருமையாக இருக்கும். அந்த வகையில் தற்போது குற்றால சீசன் களைகட்டியுள்ளது. ஏனெனில் கடந்த சில நாட்களாக குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் குற்றாலம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று வெயில் இல்லாமல் குளிர்ந்த காற்று வீசியது.
மெயின் அருவி
கடந்த ஆண்டு சீசன் ஜூலை மாதம் வரை தள்ளிப்போனது. ஆனால் இப்போதே சீசன் களைகட்டியுள்ளது. விடுமுறை தினம் என்பதால் நேற்று சுற்றுலா பயணிகள் பலர் தங்களது குடும்பத்துடன் வந்தனர். குற்றால அருவிகளில் குளிப்பதற்காக தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து மட்டுமல்லாமல் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். சுற்றுலா பயணிகள், மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் அவர்கள் ஆரவாரமாக குளித்து மகிழ்ந்தனர்.
குற்றலாத்தில் குவிந்த மக்கள்
மெயின் அருவி பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சுற்றுலா பயணிகள் வருகையால், குற்றலாத்தையே வாழ்வாதாரமாக நம்பியுள்ள மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விடுதிகள் நிரம்பி வருகின்றன. கறிவிருந்துடன், பலர் குற்றாலத்தில் குளித்து மகிழ விரும்புகிறார்கள். பலர் அறை எடுத்து தங்கி, கறி விருந்துடன் குளித்து மகிழ்கிறார்கள். குற்றாலம் செல்ல இப்போது அருமையான நேரம் ஆகும். தாராளமாக வரலாம் என்கிறார்கள் உள்ளூர் மக்கள்..












Click it and Unblock the Notifications