கடவுளே வாழ விரும்பும் கனவுப்பாதை.. கொடைக்கானலுக்கு இந்த வழியே ஒரு முறை சென்று பாருங்க
கொடைக்கானல்: கொடைக்கானலுக்கு வத்தலக்குண்டு வழியாக ஒரு பாதை, பழனி வழியாக இன்னொரு பாதை என இரண்டு பாதைகள் உள்ளன. இந்த இரண்டு பாதை இல்லாமல் மூன்றாவதாக தேனி மாவட்டத்தில் இருந்து வருவோருக்கான ஒரு பாதை உள்ளது. பெரியகுளம், கும்பக்கரை அருவி மற்றும் அடுக்கம் வழியாக கொடைக்கானலை அடையலாம். இந்த பாதை பற்றி பார்ப்போம்.
சர்வதேச அளவில் புகழ் பெற்ற சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இங்கு செல்ல இரண்டு பாதைகள் பிரதானமாக உள்ளன. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு வழியாக, காட்ரோடு, ஊத்து, பெருமாள் மலை வழியாக வரும் பாதைதான் மிக முக்கியமான பாதை. அடுத்தபடியாக பழனி வழியாக பெருமாள் மலையை அடைந்து கொடைக்கானல் வர முடியும்.

இது இல்லாமல் வத்தலக்குண்டுவில் இருந்து பட்டி வீரன்பட்டி, பண்ணைக்காடு வழியாக மெயின் பாதையை அடைந்து பெருமாள் மலை வழியாக கொடைக்கானல் செல்லலாம். ஆனால் இந்த பாதை மிகவும் சுற்றிச்செல்லும் பாதை மட்டுமின்றி, மிகவும் சவாலான பாதையும் கூட. இந்த பாதையில் யாரும் பயணிக்க மாட்டார்கள். பண்ணைக்காடு செல்பவர்களும் ஊத்து வழியாகவே செல்வார்கள்.
அதேநேரம் கொடைக்கானலுக்கு பழனி, வத்தலக்குண்டு இல்லாமல் தேனி மாவட்டம் பெரியகுளம் வழியாக, கும்பக்கரை,அடுக்கத்தை கடந்து போக முடியும். கொடைக்கானலை அடைய மிககுறைந்த மலைச்சாலை உள்ள பகுதி என்றால், அது அடுக்கம் சாலை தான். கும்பக்கரையில் இருந்து சரியாக 30 கிலோ மீட்டர் தூரத்திலேயே கொடைக்கானலுக்கு போய்விட முடியும். தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தேவதானப்பட்டியை கடந்து காட்ரோடு, கெங்குவார்பட்டி வழியாக போகாமல் கும்பக்கரை அடுக்கம் வழியாக போனால் மிக வேகமாக சென்றுவிட முடியும்.
பெரியகுளத்தில் இருந்து கொடைக்கானலுக்கு மெயின் பாதையான வத்தலக்குண்டு பாதையில் செல்ல 70 முதல் 75 கிமீ தூரம் பயணிக்க வேண்டும். ஆனால் கும்பக்கரை அடுக்கம் வழியாக சென்றால் வெறும் 45 கிமீ தூரத்திலேயே அடைய முடியும். அதிலும் பெருமாள் மலைக்கு வெறும் 35 கிமீ தூரம் தான். இதில் 10 கிலோமீட்டர் வரை மாமரங்கள் நிறைந்த தோப்புகளாக இருக்கும். அடர்ந்த காடுகள் என்றாலும் சமவெளியில் உள்ள பகுதியாகும். அதன்பிறகு வெறும் 24 கிமீ தூரத்தில் பெருமாள் மலையை அடையலாம்.
இந்த சாலையில் பெரியகுளத்தில் இருந்து பயணிக்கும் போதே புதியதொரு அனுபவம் கிடைக்கும். கும்பக்கரை அருவியில் போய் குளித்துவிட்டு அப்படியே, சாலையில் பயணித்தால், வழிநெடுகிலும் மாமரங்களும், சிற்றோடைகளும் உங்களை வரவேற்கும். அப்படியே சில கிலோ மீட்டர் பயணித்தால், செக் போஸ்ட் வரும். அதை கடந்து பயணிக்க தொடங்கினால் மலை சாலை ஆரம்பிக்கும். முழுக்க முழுக்க நன்கு வாகனம் ஓட்டத்தெரிந்தவர்களே இந்த சாலையில் பயணிக்க வேண்டும். நல்ல அனுபவம் இல்லாதவர்கள் இந்த சாலையில் பயணிக்க வேண்டாம்.
எஸ் வடிவில் வளைந்து வளைந்து செல்லும் இந்த சாலை, மேலே பெருமாள் மலைக்கு போகும் வரை அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகள் இருக்கும். வத்தலக்குண்டு சாலை போல் இருக்காது. இது நீங்கள் அப்படியே செங்குத்தான மலையில் வாகனத்தை இயக்குவது போல் இருக்கும். சாலையின் இருபுறமும் குறிப்பிட்ட தூரத்தை கடந்துவிட்டால் பெருமாள் மலை வரையிலும் விவசாய தோட்டங்கள் தான் இருக்கும். இந்த சாலை சுற்றுலா பயணிகளுக்கு சொர்க்கம் என்றாலும், மிகவும் ஆபத்தான அபாயகரமான சாலையாகும்.
இருசக்கர வாகன ஓட்டிகள் தாராளமாக பயணிக்கலாம். கார்களில் செல்வோர் சாலையின் நிலவரங்களை அடிக்கடி கேட்டு தெரிந்து கொண்டு செல்லுங்கள். தற்போதைய நிலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் செல்வதில் எந்த பிரச்சனையும் இல்லை.. கார்களில் செல்வது நல்லது இல்லை. ஏனெனில் இது மலைக்காலம். மலைக்காலத்தில் நான்கு சக்கர வாகனங்களில் கொடைக்கானலுக்கு அடுக்கம் வழியாக செல்வது என்பது கற்பனையிலும் எட்டாத அளவிற்கு ஆபத்தானதாக இருக்கும்.
ஏனெனில் பெரியகுளம்-அடுக்கம் சாலை போடப்பட்ட சில ஆண்டுகளிலேயே அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டு சாலை சேதமடைந்துவருகிறது. சாலையை ஒட்டி முறையாகத் தடுப்புகள் அமைக்கப்படாததுதான் இந்த நிலச்சரிவுக்குக் காரணம் என்கிறார்கள் பொதுமக்கள். திரில்லான அனுபவம் வேண்டும் என்போர் அடுக்கம் சாலையில் பயணிக்கலாம். சாலை ரீதியாக எந்த பிரச்சனையும் இருக்காது. அதேநேரம் காட்டுமிருகங்கள் மாலை 4 மணிக்குமேல் சர்வ சாதாரணமாக உலாவும் பகுதி. இரவில் இந்த சாலையில் வரக்கூடாது. பகலில் மட்டுமே செல்ல வேண்டும். ஒருமுறை திரில்லான அனுபவத்திற்கு போகலாம்.












Click it and Unblock the Notifications