தமிழ்நாட்டில் இப்படி ஒரு இடமா.. கொடைக்கானலின் அதிசயம்.. யாருக்கும் தெரியாத 'கொட்டிவரை' அருவி
கொடைக்கானல் : கொடைக்கானல் என்றாலே தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா பயணிகளுக்கு பிடித்த மலைப்பிரதேசம் ஆகும். இந்த சுற்றுலா தளத்தில் இப்படி ஒரு அதிசயமா என்று கேட்கும் அளவிற்கு பல இடங்கள் உள்ளது. பலரும் அறியாத கொட்டிவரை அருவியை பற்றி பார்ப்போம்.
கொடைக்கானல் பொதுவாக பலரும் விரும்பும் சுற்றுலா தளம் ஆகும். இங்கு புகழ் பெற்ற சுற்றுலா பகுதிகள் இருக்கின்றன. இரண்டு நாள் அல்லது மூன்று நாட்கள் தங்கி சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன,

இங்கு மஞ்சளாறு அணை தோற்றம், எலிவால் அருவி, வெள்ளிநீர் வீழ்ச்சி, நட்சத்திர ஏரி, டால்பின் ரோஸ், குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு, பேரிஜம் ஏரி, மன்னவனூர் ஏரி, கூக்கால் அருவி, பூம்பாறை முருகன் கோவில், செட்டியார் பூங்கா, பிரைண்ட் பூங்கா, குறிஞ்சி ஆண்டவர் கோவில், பேத்துப்பாறை ஆதிமனிதன் குகைகள், அஞ்சுவீடு அருவி, பாரதி அண்ணாநகர் ஓராவி அருவி என ஏராளமான சுற்றுலா தளங்கள் இருக்கின்றன.
கொடைக்கானலில் ஆண்டு முழுவதும் இதமான காலநிலை நிலவும் என்பதால், விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். கொடைக்கானலில் மக்களுக்கு தெரியாத ஏராளமான சுற்றுலா தளங்கள் இருக்கின்றன. அவை அனைத்தும் உள்ளூர் மக்களுக்கு மட்டுமே தெரியும். அப்படி உள்ளூர் மக்களால் மட்டுமே அறியப்பட்ட சுற்றுலா தளங்கள் எல்லாம் பார்க்க ரம்மியமாகவும் அழகாகவும் இருக்கும். அவற்றை எல்லாம் சுற்றி பார்க்க வேண்டும் என்று கண்டிப்பாக ஒரு வாரமாவது கொடைக்கானலில் தங்கி இருக்க வேண்டும். அந்த அளவிற்கு அற்புதமான இடங்களை மறைத்து வைத்திருக்கிறது கொடைக்கானல். எத்தனை முறை சுற்றுலா வந்தவர்களாக இருந்தாலும் இதுவரை யாரும் கொடைக்கானலின் மொத்த அழகை பார்த்திருக்க மாட்டாரகள்.

கொடைக்கானலில் பலரும் அறிந்திடாத கொட்டிவரை அருவி குறித்து இப்போது பார்ப்போம். கொட்டிவரை அருவி என்பது கொடைக்கானல் நகரில் இருந்து 10 கிமீ தூரத்தில் உள்ள பள்ளங்கியில் அமைந்துள்ளது.. இந்த அருவி பார்ப்பதற்கு ரம்மியாக இருக்கும். நான்கு பக்கமும் மலைகள் இருக்கும். நடுவில பாய்ந்தோடும் இந்த கொட்டிவரை அருவிக்கு வரும் வழிகளில் கொஞ்சம் ஆபத்தானது தான். சிறுவர்கள், குழந்தைகளுடன் வருபவர்கள் கொஞ்சம் கவனமாக வர வேண்டும். பாதை கொஞ்சம் கரடு முரடாக இருக்கும்.

இந்த அருவியை நேரில் பார்த்தால் அப்படியே வடமாநிலங்களில் உள்ளது போல் அற்புதமான தோற்றத்தில் இருக்கும். ஆண்டின் 8 மாதங்களில் இந்த அருவியில் தண்ணீர் ஆர்பரித்துக் கொட்டும். கோடைக்காலம் தவிர மற்ற காலங்களில் பெரும்பாலும் தண்ணீர் கொட்டிக்கொண்டே இருக்கும் என்பதால் இதனை கொட்டி வரை அருவி என்று அழைக்கிறார்கள் உள்ளூர் மக்கள். சுற்றிலும் 4 ஐந்து நீர் வீழ்ச்சிகள், பசுமையான இடங்கள், சுற்றிலும் மலை,பள்ளத்தாக்கு என நம்மை மதிமயக்க செய்துவிடும் இந்த கொட்டி வரை அருவி . இந்த அருவிக்கு செல்ல போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து சுற்றுலா தளமாக மாற்றினால் பலரும் வருவார்கள் என்று சுற்றுலா வழிகாட்டிகள் தெரிவித்தனர். இதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வில்பட்டி ஊராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications