பிளான் 'பி'.. ஊட்டிக்கு பதில் கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்.. எதிர்பார்க்காத ட்விஸ்ட்
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடைவிழா-2025 மற்றும் 62-வது மலர்க்கண்காட்சி அண்மையில் தான் தொடங்கி வைக்கப்பட்டது. நேற்று கிளைமேட் அருமையாக இருந்ததால் பல சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். ஊட்டிக்கு பதில் பலர் கொடைக்கானலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். ஆனால் இன்று நிலைமை தலைகீழாக உள்ளது. காலை முதலே கொடைக்கானல் மலைப்பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை ஆரம்பித்த நிலையில், தமிழ்நாட்டிலும் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கி இருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று காலை வரையிலான நிலவரப்படி, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 21 செ.மீ. மழை பெய்து இருந்தது.

இதன் தொடர்ச்சியாக இன்று தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழையும், கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், நெல்லை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டிருந்தது. இதன்படியே நீலகிரி மாவட்டத்திலும், திண்டுக்கல் மற்றும், தேனி மாவட்டத்தின் மலைப்பகுதிகளிலும், கேரளாவின் இடுக்கி மாவட்டத்திலும் கனமழை வெளுத்து வாங்குகிறது.
இதனிடையே நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டதால், ஊட்டிக்கு பதிலாக பலர் கொடைக்கானலுக்கு இன்று படை எடுத்து வந்திருந்தனர். தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்து குவிந்திருந்தனர். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் கோடை விழாவும் நடந்து வந்ததால், பயணிகள் உற்சாகமாக இருந்தனர்.
ஆனால் சுற்றுலா பயணிகள் உற்சாகத்தை மழை கெடுத்துவிட்டது. கடும் குளிருடன் காலை முதலே மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தந்த போதிலும். ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள் சவாரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. படகு சவாரி நிறுத்தப்பட்டதால், ஏரியில் படகு சவாரி செய்ய முடியாமலும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
படகுகள் இயங்காததால் நட்சத்திர ஏரி வெறிச்சோடிக் காணப்பட்டது. மேலும், கோடை விழாவையொட்டி இன்று நடக்க இருந்த படகு போட்டி மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. காற்றில் ஈரப்பதம் கடுமையாக உள்ளது. இதன் காரணமாக கொடைக்கானலில் கடும் குளிர் நிலவி வருகிறது. கனமழையால் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்திருக்கிறது.
கொடைக்கானலுக்கு சுற்றுலா வர விரும்புவோர் உள்ளூர் நிலவரம் அறிந்தும், வானிலை நிலவரம் அறிந்தும் பயணத்தை திட்டமிடலாம். பொதுவாகவே ஊட்டியை ஒப்பிடும் போது , தென்மேற்கு பருவ மழையால் கொடைக்கானலில் பெரிய பாதிப்பு இருக்காது. அதேநேரம் மழை சற்று அதிகமாகவே இருக்கும்.
கனமழை என்பது சர்வ சாதாரணமாக பெய்யும். பொதுவாக ஜூன் முதல் வாரத்தில் தான் தென்மேற்கு பருவ மழை தொடங்கும். அப்போது தான் கொடைக்கானலில் கிளைமேட் மாறும். ஆனால் இப்போதே பருவ மழை தொடங்கி விட்டதால் கிளைமேட் முற்றிலும் மாறியிருக்கிறது. கொடைக்கானலில் அடுத்த சில நாட்களுக்கு கிளைமேட் நிச்சயம் அருமையாக இருக்கும். அதேநேரம் மழை குறித்த வானிலை நிலவரம் அறிந்து திட்டமிடுங்கள்.












Click it and Unblock the Notifications