கொடைக்கானல் டூர் போறீங்களா? புதிய ஒருவழிப்பாதை திட்டம் அமல்.. தெரிஞ்சுக்காம போய் திணறாதீங்க
திண்டுக்கல்: கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக புதிய ஒரு வழிப்பதை திட்டம் இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, கொடைக்கானலுக்கு வரும் டூரிஸ்ட் வாகனங்கள் அனைத்தும் கோக்கர்ஸ் வாக் வழியாக, பாம்பார்புரம் சாலை, தூண் பாறை, குணா குகை, பைன் மரக்காடுகள், மோயர் பாயிண்ட் வழியாக வெளியேறி, அப்சர்வேட்டரி சாலை வழியாக கொடைக்கானல் ஏரி பகுதியை அடையும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
தமிழகத்தில் உள்ள மிகச்சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்று கொடைக்கானல். மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் மிகச்சிறந்த கோடை வாசஸ்தலமாக உள்ளது. இந்தியாவில் இருந்து மட்டும் இன்றி வெளிநாடு சுற்றுலாப்பயணிகள் கூட தமிழகத்திற்கு வந்தால் மறக்காமல் விசிட் அடிக்கும் இடமாக கொடைக்கானல் இருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்து இருக்கும் கொடைக்கானல் கடல் மட்டத்திலிருந்து 2133 மீட்டர் உயரத்தில் உள்ளது.

இங்குள்ள சீதோஷ்ண நிலையும் இயற்கை அழகுகளும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து இழுக்கும் இடமாக உள்ளது. கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பெரும் பிரச்சினையாக இருப்பது இங்குள்ள டிராபிக்தான். போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டு பல மணி நேரம் வீணாகிவிடுதால், பல இடங்களுக்கு போக திட்டமிட்டு செல்ல முடியாமல் கூட சுற்றுலா பயணிகள் பலரும் திரும்பி வருவதை காண முடியும்.
குறிப்பாக கொடைக்கானல் வனப்பகுதியில் பில்லர்ராக், பைன்மரக்காடு, மோயர் பாயிண்ட், குணாகுகை, பேரிஜம் ஏரி உள்ளிட்ட புகழ்பெற்ற இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்களுக்கு அப்சர்வேட்டரி வழியாக செல்ல அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. அதாவது, கொடைக்கானலுக்கு வரும் வாகனங்கள், ஏரிச்சாலை பகுதியில் வலது புறமாக திரும்பி அப்சர்வேட்டரி வழியாக மோயர் பாயிண்ட் சென்று, அங்கிருந்து பைன் மரக்காடுகள், குணா குகை, தூண் பாறை, வழியாக வந்து பாம்பார்புரம் சாலை வழியாக கொடைக்கானல் கோக்கர்ஸ் வாக், கொடைக்கானல் ஏரி சாலையில் முடிவடையும் வகையில் இருந்தது.
போக்குவரத்து நெரிசல் அதிகம் இருந்ததால், இதில் மாற்றம் செய்வது குறித்து போலீசார் பல்வேறு தரப்பினரிடமும் ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில் தான், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் வனப்பகுதி சுற்றுலா இடங்களுக்கு செல்ல ஒருவழிப்பாதை திட்டம் இன்று முதல் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் கோக்கர்ஸ் வாக் வழியாக, பாம்பார்புரம் சாலை, தூண் பாறை, குணா குகை, பைன் மரக்காடுகள், மோயர் பாயிண்ட் வழியாக வெளியேறி, அப்சர்வேட்டரி சாலை வழியாக கொடைக்கானல் ஏரி பகுதிக்கு செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா இடங்களுக்கு பஸ்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. கனரக வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், பஸ்கள் மற்றும் லாரிகளுக்கு அனுமதி கிடையாது என போலீசார் தெரிவித்து இருக்கிறார்கள்.
மேல்மலை பகுதிக்கு செல்லும் கனரக வாகனங்கள் மட்டும் அப்சர்வேட்டரி வழியாக செல்லலாம் என்றும் போலீசார் கூறியுள்ளனர். வாகன ஓட்டிகளுக்கு இதுபற்றி போலீசார் தரப்பில் ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பேருந்துகள் அனைத்தும் பழைய அப்சர்வேட்டரி சாலை பகுதியில் நிறுத்திக் கொள்ள வேண்டும். கொடைக்கானலில் இருந்து பூம்பாறை, மன்னவனூர் உள்ளிட்ட மேல்மலை பகுதிகளுக்கு பஸ்களில் செல்லலாம்.












Click it and Unblock the Notifications