கடவுளின் தேசத்தில் கண்டிப்பாக போக வேண்டிய இடம்.. வாயடைத்து போக வைக்கும் வயநாடு
ஊட்டி: ஊட்டி, கொடைக்கானல் , ஏற்காடு உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு சென்று வந்தவர்கள் என்றால், தாராளமாக ஒருமுறை வயநாடு போய் பார்த்து வாருங்கள்.. அங்குள்ள இயற்கை அழகுக்கு மயங்காதவர்கள் யாருமே இல்லை.. கடவுளின் தேசத்தில் கண்டிப்பாக போக வேண்டிய இடமாக வயநாடு இருக்கிறது.
கடவுள் கேரளாவிற்கு அள்ளிக் கொடுத்த வரம் என்றால், இயற்கை தான்.. அதனால் தான் கேரளாவை கடவுளின் தேசம் என்று அழைக்கிறார்கள். ஒருபக்கம் மலையும் மறுபக்கம் கடலும் அமைந்துள்ள பகுதியாக கேரள மாநிலம் விளங்குகிறது. கேரளாவின் சமவெளி நுழைவு வாயில் என்றால் தொடக்கத்தில் உள்ள திருவனந்தபுரத்திலும், கடைசியில் உள்ள காசர்கோட்டிலும் தான் இருக்கிறது. கோவையிலும், பொள்ளாச்சியிலும் நுழைவுகள் இருக்கிறது என்றாலும் மலையை ஒட்டிய பகுதிகளாகவே இருக்கும்.

கொல்லம் முதல் கோழிக்கோடு, வயநாடு வரை, கேரளாவின் கிழக்கு பகுதி முழுமையாக மலையில் தான் அமைந்திருக்கிறது. கேரளாவில் தமிழ்நாட்டின் எல்லையை ஒட்டியுள்ள இடுக்கி மாவட்டமும், வயநாடு மாவட்டமும் ஏராளமான சுற்றுலா தளங்களை கொண்ட பகுதிகள் ஆகும். இடுக்கியை பொறுத்தவரை கேரளாவின் மிகப்பெரிய மாவட்டம் என்று சொல்லலாம். ஆனால் எல்லாமே மலையில் அமைந்திருக்கிறது.
தமிழகத்தின் தேனி மாவட்டத்தை ஒட்டியுள்ள இடுக்கியை பொறுத்தவரை, வாகமன், தேக்கடி, இடுக்கி அணை, மூணாறு, பூம்பாறை, டாப் ஸ்டேசன் (தமிழக பகுதி), கொழுக்குமலை (தமிழக பகுதி), மறையூர், சாந்தாம்பாறை என பல இடங்களில் அற்புதமாக இருக்கும். குறிப்பாக குமுளியில் இருந்து பேருந்தில் அல்லது காரில் அல்லது பைக்கில் மூணாறு சென்றால், சொர்க்கமே தோற்றுப்போகும் பல இடங்களை பார்க்க முடியும்.
இதேபோல் தான் வயநாடும். நீலகிரி மாவட்டத்தை ஒட்டியுள்ள வயநாடு வாழ்நாளில் ஒருமுறையாவது போக வேண்டிய இடம் ஆகும். வயநாடு மாவட்டம் என்பது நம்ம ஊர் நீலகிரி மாவட்டத்தை போன்றே தட்ப வெப்ப நிலை உள்ள பகுதியாகும். நீலகிரியில் என்னவெல்லாம் இருக்கிறதோ, அதேபோல் வயநாட்டிலும் இருக்கிறது. வயநாட்டிற்கு கோவையில் இருந்து புறப்பட்டால் நீலகிரி மாவட்டம் ஊட்டி, கூடலூர் வழியாக போய் வரலாம். இந்த வழி கோவையில் ஆரம்பிக்கிறீர்கள் என்றால், மேட்டுப்பாளையம் கடந்த உடன் முற்றிலும் மலையிலேயே செல்லும். வயநாடு வரை முழுமையாக மலையிலேயே செல்லும்.

அடுத்ததாக கோவை, பாலக்காடு, மன்னார்காடு, மஞ்சேரி, ஆரிகோடு, முக்கம் வழியாக வயநாடு போகலாம். இந்த பாதையும் அருமையாக இருக்கும்.. வயநாட்டில் ஏராளமான சுற்றுலா தளங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.
செம்பரா சிகரம் கடல் மட்டத்திலிருந்து 2100 மீட்டர் உயரத்திலிருக்கிறது. வயநாட்டின் தென்பகுதியிலுள்ள மேப்பாடி அருகில் அமைந்திருக்கிறது. இது மலையேற விரும்புவோருக்கு அற்புதமான இடம் ஆகும். வயநாட்டின் மொத்த அழகையும் ரசிக்கும் இடம் ஆகும்.சிகரத்தின் உச்சியில் தங்குபவர்களுக்கு அது மறக்க முடியாத அனுபவமாக உங்களுக்கு இருக்கும். அங்கு தங்க விரும்புகிறவர்கள் வயநாட்டிலுள்ள கால்பெட்டா பகுதியில் அமைந்துள்ள மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தை அணுகி அனுமதி பெற வேண்டும் என்று கேரளமாநில சுற்றுலாத்துறை தெரிவித்துள்து.
நீலிமலை: வயநாட்டின் தென்கிழக்குப் பகுதியில் கல்பேட்டாவிற்கு அருகில் அமைந்துள்ளது நீலிமலை. நீலிமலை வெவ்வேறு மலையேறு வழிகளைக் கொண்டுள்ளதால் மலையேறுபவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் சூப்பர் இடமாக இருக்கும். நீலிமலை உச்சியிலிருந்து மீன்முட்டி அருவிகள் மற்றும் அருகிலுள்ள பள்ளத்தாக்குகளை பார்த்தால் உங்களை மெய்சிலிர்க்க வைத்துவிடும்.
மீன்முட்டி நீர்வீழ்ச்சி: நீலிமலையில் அமைந்துள்ள மனதை கவரும் மீன்முட்டி நீர்வீழ்ச்சி ஊட்டியையும் வயநாட்டையும் இணைக்கும் பகுதியில் இருக்கிறது. இந்த நீர் வீழ்ச்சிக்கு முக்கிய சாலையிலிருந்து 2 கிமீ நடந்து சென்று அடையலாம். சுமார் 300 மீட்டர் உயரத்திலிருந்து விழும் இந்த அருவி வயநாடு மாவட்டத்தின் மிகப்பெரிய அருவியாகும்.
செதலயம்: வயநாட்டில் வருவோரை ஈர்க்கும் மற்றுமொரு நீர்வீழ்ச்சி செதலயம் நீர்வீழ்ச்சி. இது வயாநாட்டின் சுல்தான் பத்தேரிக்கு அருகில் அமைந்திருக்கிறது. இது சிறிய நீர்வீழ்ச்சியாகும். நீர்வீழ்ச்சி மற்றும் அதனையொட்டிள்ள இடங்கள் நடந்தபடி இயற்கையை ரசிப்போருக்கு பிடிக்கும்.
Early morning positive vibes. Gentle gaints crossing the roads of Wayanad. pic.twitter.com/YaaP0QOYdK
— மேகமலைக்காதலன் ( A true lover of Megamalai ) (@MegamalaiS) January 17, 2024
பக்ஷிபாதாளம்: பக்ஷிபாதாளம் கடல் மட்டத்திலிருந்து 1700 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பிரம்மகிரி குன்றுகளில் உள்ள அடர்ந்த காடுகளின் நடுவே அமைந்திருக்கிறது. இந்தப் பகுதியில் பாறைகளும் மிகப்பெரிய குன்றுகளும் அதிகமாக காணப்படுகிறதுது. இங்குள்ள மிகவும் ஆழமான குகைகள், காட்டுப் பறவைகள், விலங்குகள் மற்றும் வெவ்வேறு வகையான தாவரங்கள் ஆகியவற்றின் வாழிடமாக இருக்கிறது. பக்ஷிபாதாளம் மானந்தவாடிக்கு அருகில் அமைந்திருக்கிறது. திருநெல்லி என்ற பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் 7 கிமீ நடந்து செல்ல வேண்டும். பக்ஷிபாதாளம் செல்வதற்கு வடக்கு வயநாடு மாவட்ட வனஅலுவலரிடம் ஏற்கனவே முன் அனுமதி வாங்க வேண்டும்.
பான்சுரா சாகர் அணை: பான்சுரா சாகர் அணை இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்று. இந்த அணை வயநாடு மாவட்டத்தில் தென்பகுதியில் கரலாடு ஏரிக்கு அருகில் அமைந்திருக்கிறது. பான்சுரா சாகர் அணை பகுதிதான் பான்சுரா சிகரத்திற்கு ஏறுவதற்கான தொடக்க புள்ளி ஆகும்.. இது முற்றிலும் நீர்த்தேக்கங்களால் சூழப்பட்ட தீவு போன்ற பகுதியாகும். வயநாட்டில், காபி, தேயிலை, மூங்கில் போன்றவை அதிகமாக இருக்கும். வயநாட்டின் அழகை இந்த செய்தியில் உள்ள வீடியோவில் பாருங்கள்.. நிச்சயம் உங்களுக்கு புரியும்.












Click it and Unblock the Notifications