ஊட்டி, கொடைக்கானலை விடுங்க.. தமிழ்நாட்டில் காதலர் தினத்தை கொண்டாட சூப்பர் சுற்றுலா தலங்கள்
சென்னை: காதலரே.. காதலரே.. பூமி உங்கள் பூஞ்சோலை... காலமெல்லாம் வாழட்டும் சூடிக்கொண்ட பூமாலை.. காதலை கொண்டாடும் இந்த பாடலில் சொன்னது போல் பூமி என்பது காதலர்களின் பூஞ்சோலைதான்.. தமிழ்நாட்டில் காதலர் தினத்தை கொண்டாட சிறந்த சுற்றுலா தளங்ளை பார்ப்போம்.
தமிழ்நாட்டில் எத்தனையோ பிரபலமான சுற்றுலா தளங்கள் இருக்கின்றன. வாழ்க்கையில் மறக்க முடியாத இடம் என்று சொல்கிற அளவிற்கு காதலர் தினம் இருக்க வேண்டும் என்று நினைப்போருக்கும், காதலியுடன் இயற்கையை நேசிப்போருக்கும் நாம் பரிந்துரைக்க போகும் இடம் நிச்சயம் பிடிக்கும்.

கொடைக்கானல், ஊட்டியை தாண்டி பிற இடங்களை பற்றித்தான் இப்போது பார்க்க போகிறோம். ஏன் எனில் தமிழ்நாட்டில் காதலை கொண்டாட ஊட்டி கொடைக்கானல் தான் சிறந்த இடங்கள். ஆனால் அங்கு அதிகம் செலவு ஆகும். அதேநேரம் செலவு குறைவாக அதேநேரம் ஜோடியாக சூப்பராக பயணிக்க விரும்புவோருக்கு அவரவர் ஊர் அருகில் உள்ள அருமையான இடங்களை பற்றி பார்ப்போம்.
மேகமலை: எந்த ஊரில் உள்ளவர்கள் என்றாலும் முதல் சாய்ஸ்.. தேனிமாவட்டம் மேகலை.. ஆம்.. இயற்கை இன்னமும் அப்படியே இருக்கும் இடம்.. இயற்கையோடு காதலியுடனும் நேரத்தை கழிக்க விரும்புவோருக்கு மேகமலை அற்புதமான இடம்.. ஏனெனில் பெரிய அளவில் கூட்டம் கூட்டமாக மக்கள் வரமாட்டார்கள். அளவான மக்கள் தான் வருவார்கள். மேகமலையில் மேகங்களுக்கு நடுவில் உங்கள் காதலியுடன் நேரத்தை செலவிட முடியும். வயல் வெளிகளையும், திராட்சை தோட்டங்களையும் கடந்து மலைக்குள் நுழைந்தால் ரம்மியான தேயிலை தோட்டங்களும், அணைகளும், கால நிலையும் நிச்சயம் பிடிக்கும். மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ளோருக்கு இது அற்புதமான இடம்.
மகாபலிபுரம்: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த காதலர்களுக்கு மிக அற்புதமான இடம் என்றால் அது மகாபலிபுரம். மகாபலிபுரத்தின் கடற்கரைகளும், சிற்பங்களும், அங்குள்ள பூங்காக்களும் பல காதலர்களின் நினைவிடங்களாக இன்று வரை உள்ளன.. சென்னை பகுதியில் உள்ளவர்கள் ஒரு நாள் முழுக்க காதலர்கள் நேரத்தை செலவிட நல்ல சுற்றுலாதளம் என்றால அது மகாபலிபுரம் தான்..
குன்னூர்: கோவை, திருப்பூர், ஈரோடு பகுதியில் உள்ளவர்களுக்கு அந்த பகுதியில் ஏராளமான சுற்றுலா தளங்கள் இருக்கிறது என்றாலும், நீலகிரி மாவட்டம் குன்னூர் காதலர்கள் பலருக்கு பிடித்த சுற்றுலா தளம் ஆகும். குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்கா காதலர்களின் சொர்க்க பூமியாகும். அதேநேரம் குன்னூர் சிம்ஸ் பூங்கா தவிர நீலகிரியல் உள்ள டால்பின் நோஸ், காட்டேரி பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் காதலர்களுக்க பிடித்த சுற்றுலா தளங்கள் ஆகும்.
கன்னியாகுமரி: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த காதலர்கள் காதலை கொண்டாட சிறந்த இடம் என்றால் அது கன்னியாகுமரி கடற்கரைதான். கன்னியாகுமரி கடற்கரையில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலிதுறை கடற்கரை பகுதியில் உள்ள சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான பொழுது போக்கு பூங்கா.
சன்செட் பாயிண்ட் கடற்கரைப்பகுதி, கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்ளிட்ட இடங்கள் காதலர்களுக்கு மிகவும் பிடித்த இடங்கள் ஆகும். இங்கு எப்போதுமே காதலர் தினத்தின் போது காதலர்களின் கூட்டம் அலைமோதும்.
திருச்சி: மற்ற ஊர்களில் எல்லாம் காதலர்கள் காதலை கொண்டாட தனியான இடம் பார்ப்பார்கள்.. ஆனால் திருச்சியில் அப்படி இல்லை.. மொத்த திருச்சியும் காதலர்களின் சொர்க்கபூமி தான்...ஏனெனில் திருச்சியில் உள்ளவர்கள் மட்டுமின்றி திருச்சி அருகில் உள்ள கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த காதலர்களும் மலைக்கோட்டை மாநகர திருச்சியைத்தான் காதலர் தினத்தை கொண்டாட விரும்புவார்கள். வடமாநிலங்களில் தஞ்மஹால் காதல் கோட்டை என்றால், திருச்சியில் உள்ளவர்களுக்கு காதல் கோட்டை என்றால் அது நம்ம மலைக்கோட்டைதான். மலைக்கோட்டை உச்சியில் உள்ள விநாயகர் கோயிலுக்கு கீழே, உள்ள திறந்த வெளி முழுவதும், காதலர் தினத்தன்று காதலர்களால் நிரம்பி வழியும். அங்கு காதலர்கள் ஜோடியாக அமர்ந்து, மாநகரின் அழகை ரசித்தபடியே தங்களது காதலையும் வளர்த்துக் கொள்வார்கள். காதலர் தினத்தில் மட்டுமல்ல.. எல்லா நாளுமே காதல் ஜோடிகளை மலைக்கோட்டையில் காண முடியும்.
ஏற்காடு: சேலம், தர்மபுரி, நாமக்கல் பகுதியில் உள்ள காதலர்கள் அதிகம் விரும்பும் இடம் என்றால் அது ஏற்காடு தான்.ஏற்காட்டை விட அற்புதமான இடத்தை காதலர்களுக்கு அந்த பகுதியில் இல்லை.. காதல் ஜோடிகளின் சங்கமமாய் சேலம் ஏற்காடு இருக்கும். பசுமையான வனத்திற்கு நடுவே ஊசி போல் ஊருவி செல்லும் சாலையில் பயணித்து செல்வது உண்மையில் அற்புதமான அனுபவமாக இருக்கும்..
வேலூர் கோட்டை: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை பகுதியில் உள்ள காதலர்கள் அதிகம் சங்கமிக்கும் இடம் என்றால் அது வேலூர் கோட்டை தான். வேலூர் கோட்டை என்பதை வேலூர் காதல் கோட்டை என்று என்றோ காதலர்கள் மாற்றிவிட்டார்கள். காதலர் தினத்தில் இங்கு பல காதலர்கள் ஒவ்வொரு ஆண்டும் சங்கமிப்பார்கள்.












Click it and Unblock the Notifications