நீலகிரி மாவட்டத்தில் இப்படி ஒரு திட்டமா.. சத்தமே இல்லாமல் தமிழக அரசு சூப்பர் முயற்சி.. ஊட்டி ஹேப்பி
ஊட்டி: அழகிய நீலகிரி மாவட்டத்தில் இயற்கை பேரிடராகிய நிலச்சரிவினால் ஏற்படும் ஆபத்துகள் அதிகம். இத்தகைய நிலச்சரிவுகளைத் தடுக்க மண் ஆணி முறையை பயன்படுத்தி மேம்படுத்தும்பணி நடந்து வருகிறது.. எனவே , மழைக்காலங்களில் நிலச்சரிவு அபாயத்தை தவிர்க்கும் காலம் விரைவில் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: "நீலகிரி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகும். மலைவாழிடங்களின் ராணியான ஊட்டி, இந்த மாவட்டத்தின் தலைநகராக அமைந்துள்ளது. குன்னூர் மற்றும் கோத்தகிரி ஆகிய முக்கிய மலை வாழிடங்கள் இந்த மாவட்டத்தில் அமைந்துள்ளன.

'நீலகிரி' என்ற சொல் 'நீலநிறம் + கிரி (மலை)' எனப் பொருள்படும். தமிழ் இலக்கியத்தில் 'இரணியமுட்டம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மலை குறிஞ்சி மலர்கள் நிறைந்த பகுதியாதலால் இப்பெயர் பெற்றது. நீலகிரி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்குத் தொடர்ச்சி மலை ஆகியவற்றின் சந்திப்பில் அமைந்துள்ளது.
தனிச் சிறப்பு என்ன?: கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரம் மீட்டர் (6,600 அடி) உயரத்தில் அமைந்துள்ள பெரிய பீடபூமி பகுதியாகும். நீலகிரி மலைகளின் சிகரங்களில் குறைந்தது 24 சிகரங்கள் 2 ஆயிரம் மீட்டர் உயரம் கொண்டவை. தென்னிந்தியாவின் உயரமான சிகரம் தொட்டப்பெட்டா 2,637 மீட்டர் (8,652 அடி) ஊட்டியில் இருந்து 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.நீலகிரியில் உள்ள எண்ணற்ற சுற்றுலாத் தலங்கள், அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக் கூடியதாக அமைந்திருப்பது இந்த மாவட்டத்தின் தனிச் சிறப்பு.
அழகிய நீலகிரி மாவட்டத்தில் இயற்கை பேரிடராகிய நிலச்சரிவினால் ஏற்படும் ஆபத்துகள் அதிகம். இத்தகைய நிலச்சரிவுகளைத் தடுக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆணைக்கு இணங்க பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி - கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் கோடப்பமந்து அருகில் நிலச்சரிவை தடுக்கும் புதிய தொழில்நுட்பமான மண் ஆணி அமைத்து, நீர் விதைப்பு முறை மேற்கொண்டு ஜியோ கிரிட் முறையில் மண்ணின் உறுதித்தன்மையை அதிகப்படுத்தி வலிமையூட்டும் முறை 22-12-2021 அன்று புதிதாகத் தொடங்கப்பட்டது.
மண் ஆணித் திட்டம்: நிலச்சரிவைத் தடுப்பதற்காகத் தற்போது பயன்படுத்தப்படும் முறைகளைக் காட்டிலும் மண் ஆணி அமைப்பதால் ஏற்படும் செலவினம் பாதியாக குறைக்கப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த முறை வெற்றிகரமாக அமைந்தால் கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலைப்பகுதிகளிலும் நிலச்சரிவைத் தடுப்பதற்காகப் பயன்படுத்தப்படும். நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவை ஏற்படுத்தும் காரணிகள், நிலச்சரிவைத் தடுக்கும் புதிய முறையான சுற்றுச்சூழலுக்கு உகந்த மண் ஆணி முறையை பயன்படுத்துவது சாலச் சிறந்ததாகும்.
பாதிக்கப்படும் பகுதிகள்: தமிழ்நாட்டில் இயற்கை பேரிடரால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் என 4,170 இடங்கள் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை துறையினரால் கண்டறியப்பட்டுள்ளன. இதில், மிக அதிக பாதிப்புக்குள்ளான பகுதிகள் 321, அதிக பாதிப்புக்குள்ளான பகுதிகள் 801, மிதமான பாதிப்புக்குள்ளான பகுதிகள் 1102, குறைந்த பாதிப்புக்குள்ளான பகுதிகள் 1,946 ஆகும்.
நீலகிரி மாவட்டத்தில் இயற்கை பேரிடரால் குறிப்பாக நிலச்சரிவினால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் எனக் கண்டறியப்பட்டுள்ள பகுதிகளின் மொத்த எண்ணிக்கை 284 ஆகும். இதில் மிக அதிக பாதிப்புக்குள்ளான பகுதிகள் 68, அதிக பாதிப்புக்குள்ளான பகுதிகள் 89, மிதமான பாதிப்புக்குள்ளான பகுதிகள் 79, குறைந்த பாதிப்புக்குள்ளான பகுதிகள் 48 ஆகும்.
மண்ணின் உறுதித்தன்மை: மலையின் செங்குத்தான சரிவில் மண் அரிப்பைத் தடுத்து நிலச்சரிவு ஏற்படாமல் இருக்க புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மண் ஆணி அமைத்து, ஜியோ கிரிட் மூலம் மண்ணின் உறுதித்தன்மையை அதிகரித்து, ஹைட்ரோ சீடிங் முறையில் புற்கள் வளர்க்கப்படுகிறது.
பொதுவாக மண் சரிவைத் தடுக்க கான்கிரீட் தாங்கு சுவர்கள் கட்டப்படுவதால், மலையின் மேற்பரப்பில் தாவரங்கள் வளராத சூழ்நிலை ஏற்படுகிறது. அதற்கு மாற்றாக ஜியோ கிரிட் எனப்படும் பாலிமர் பொருள்களால் செய்யப்பட்ட அல்லது பின்னப்பட்ட முப்பரிமான இரும்புக் கம்பிகள் மூலம் வலுவூட்டபட்ட பாய்கள் பயன்படுத்தப்படுகிறது.
இந்த ஜியோ கிரிட் பாய்கள் செங்குத்தான மலையில் புல்விதைகள் விதைக்கப்பட்ட மேல்பகுதியில் பரப்பப்பட்டு, மண் ஆணிகளுடன் இணைக்கப்படுகிறது. வால்பாறை மலை, கொல்லி மலை, ஏற்காடு மலை ஆகிய இடங்களில் புதிய தொழில்நுட்பத்தில் மண் ஆணி முறையைச் செயல்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நீலகிரி வாழ் மக்களுக்கும், சுற்றுலா செல்லும் அன்பர்களுக்கும், வர்த்தகப் பொருள்கள் மலைப்பகுதிகளுக்குக் கொண்டு செல்வோர்களுக்கும், மலைபடு பொருள்களைச் சமவெளிப் பகுதிகளுக்குச் கொண்டு செல்வோர்க்கும் பெரிதும் பயன்படும். எல்லாவற்றையும் விட மனித உயிழப்புகளையும் வனவிலங்குகள் உயிரிழப்பையும் தடுத்து நிறுத்த மிகவும் முக்கியமாகப் பயன்படும்.
விரைவில் நடைமுறை: நீலகிரி மாவட்டத்தில் மலைப் பாதைகளில் மண் அரிப்பைத் தடுக்க, நிலச்சரிவைக் கட்டுப்படுத்த சுற்று சூழலுக்கு இணக்கமான, செலவு குறைந்த, பாதுகாப்பான புதிய வழிமுறைகள் கண்டறிந்து விரைந்து செயல்படுத்துவது இன்றியமையாதது. இவற்றையெல்லாம் உயரிய நோக்கங்களாகக் கொண்டு, நெடுஞ்சாலைத்துறையின் மூலம் தற்போது நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தி புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு மழைக்காலங்களில் நிலச்சரிவு அபாயத்தைத் தவிர்க்கும் காலம் விரைவில் நடைமுறைக்கு வரும்" இவ்வாறு தமிழக அரசின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications