தமிழ்நாட்டின் தனித்தீவு .. நீலகிரியின் ஒரே சமவெளி.. வெளியாட்கள் நுழைய முடியாத அழகிய தெங்குமரஹாடா
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரே சமவெளிப்பகுதி என்றால் அது தெங்குமரஹாடா கிராமம் தான். தமிழ்நாட்டின் வனப்பகுதியில் உள்ள ஒரு தனித்தீவாக இந்த கிராமம் இருக்கிறது. கிராமத்திற்கு செல்ல எந்த பக்கம் வந்தாலும் ஆற்றை கடந்து தான் வர வேண்டும். அற்புதமான மலை அடிவார கிராமத்திற்கு வெளியாட்கள் போகவே முடியாது.
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தெங்குமரஹாடா கிராமத்துக்கு செல்ல நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டங்களை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த கிராமத்திற்கு செல்ல வேண்டும் என்றால், மேட்டுப்பாளையத்திலிருந்து சத்தியமங்கலம் வழியாக பவானிசாகர் சென்று, அங்கிருந்து சுமார் 25 கி.மீ.,அடர்ந்த வனப்பகுதி வழியாக தெங்குமரஹாடா கிராமத்துக்குச் செல்லலாம். இந்த கிராமத்துக்குச் செல்ல, கோத்தகிரி, மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் காலை, மாலை என 2 அரசுப் பேருந்துகள் இயங்குகின்றன.

ஆனால் அடர்ந்த வனத்துக்குள் பயணிக்கும் இந்தப் பேருந்துகள் தெங்குமரஹாடா கிராமத்துக்குள் நுழையமுடியாது. ஆற்றின் முன்பாக இறக்கிவிட்டுவிடுவார்கள. இங்கு எப்போதுமே தண்ணீர் பாய்ந்தோடும் மாயாறு குறுக்கிடுகிறது. ஆற்றில் தண்ணீர் வரத்து குறைவாக இருந்தால் மட்டுமே பரிசல் மூலமாக மக்கள் கிராமத்துக்குள் செல்ல முடியும் என்கிற நிலை இருக்கிறது. சாலை வசதியும் சூப்பராக எல்லாம் இருக்காது. அடர்ந்த வனப்பகுதிக்குள் சுமார் 25 கி.மீ. தூரம் செல்ல வேண்டும். ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் இருந்து வருவது எளிதான பாதையாக இருக்கும்.
கோத்தகிரியில் இருந்து வனப்பகுதி வழியாக டிரக்கிங்காக தெங்குமரஹாடா கிராமத்துக்கு எளிதாக போக முடியும். ஆனால் வனவிலங்குகள் அதிகம் நிறைந்த மிக அடர்ந்த வனப்பகுதியில் அந்த பாதை இருப்பதால் வனத்துறை யாரையும் அனுமதிப்பது இல்லை.. தெங்குமரஹாடா கிராமத்துக்கு செல்லும் வழியில் உள்ள மாயாறு மிக ஆபத்தான நீர் நிலையாகும். இங்கு ஏராளமான முதலைகள் வசிக்கின்றன. அதேபோல் தெங்குமரஹாடா கிராமத்தை சுற்றித்தான் யானை, புலி, சிறுத்தை உள்பட பல்வேறு உயிரினங்கள் வாழ்கின்றன.. கடந்த 2022ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, தெங்குமரஹாடா கிராமத்தை சுற்றிலும் 33 புலிகள் இருப்பதாக வனத்துறையினர் கண்டறிந்திருக்கிறார்கள்.

தெங்குமரஹாடா கிராமம் சுதந்திரம் அடையும் முன்பே உருவான பகுதியாகும். அதேநேரம் 1952ல் தான் தெங்குமரஹாடா அதிகாரப்பூர்வமாக உருவானது. அங்கு தெங்குமரஹாடா கூட்டுறவு சங்கம் உருவாக்கப்பட்டு, நீலகிரியின் படுகர் இன மக்கள் மற்றும் பழங்குடியின மக்கள் விவசாயம் செய்து வாழ்வாதாரத்தை பாதுகாக்க தொடங்கினர். அப்போது அரசு 100 ஏக்கர் நிலத்தை தெங்குமரஹாடா கூட்டுறவு சங்கத்துக்கு வழங்கியது. பின் மீண்டும் விளைநிலத்தின் பரப்பை அதிகரித்து, 500 ஏக்கர் வன நிலத்தை குத்தகையாக வழங்க அரசு உத்தரவிட்டது. இந்த நிலத்தில் பயிரிட்டபடி தான் அங்கு மக்கள் வாழ்கிறார்கள்.
அங்கு நிலத்தை குத்தகைக்கு பெற்றவர்கள், நிலத்தில் கூலி வேலை செய்வோர் என, பலரும் தெங்குமரஹாடாவில் குடியேறியதால் கடந்த 2023ம் ஆண்டு கணக்குப்படி 497 குடும்பங்கள் இந்த கிராமத்தில் வாழ்கின்றன. இந்த கிராமம் வனவிலங்குகள் வாழும் வனப்பகுதி என்பதுடன் யானைகளின் வழித்தடத்தில் உள்ளதால் உள்ள மக்களை வெளியேற்ற அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகளை கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது..

இயற்கையின் சொர்க்கமான இந்த கிராமத்திற்கு வெளியாட்கள் யாருமே போக முடியாது. அந்த ஊரைச் சேர்ந்தவர்கள், அந்த ஊரில் தெரிந்தவர்களுடன் மட்டுமே தற்போது போக முடியும். அதேபோல் தெங்குமரஹாடா கிராமம் சுற்றுலா தலம் அல்ல.. அந்த கிராமத்திற்கு வெளியூர் மக்களை வர அனுமதித்தால் வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தல் என்பதை தாண்டி, இயற்கை அழிக்கப்படும் அபாயம் உள்ளதால் வனத்துறை அனுமதிப்பது இல்லை..












Click it and Unblock the Notifications