ஊட்டி, கொடைக்கானல் போகலைன்னு ஏங்கி ஏற்காடு வந்தவர்கள்.. மலை ஏறியவர்களுக்கு மறக்க முடியாத தரிசனம்
சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பிப்ரவரி மாத தொடக்கத்திற்கு பின்னர், இப்போதுவரை வெயில் அங்கு அதிகமாகவே இருக்கிறது. இந்நிலையில் கோடை மலை காரணமாக, ஏற்காட்டில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. வெயிலின் தாக்கம் குறைத்து குளுகுளுவென மாறியதால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஊட்டி, கொடைக்கானலுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் அதிக மக்களால் விரும்பப்படும் கோடைவாசல் தலம் என்றால் அது ஏற்காடு தான். ஏற்காட்டை பொறுத்த வரை ஊட்டி, கொடைக்கானல் போல் கடுமையான குளிர் உள்ள பகுதி கிடையாது. ஏற்காட்டில் கிளைமேட் ஓரளவே குளிராக இருக்கும்.. சேலத்தில் எவ்வளவு கடுமையான வெயில் அடித்தாலும், ஏற்காட்டில் அது எதிரொலிக்காது. ஆனால் இந்த ஆண்டு கோடை சீசன் தொடங்கும் முன்பே ஏற்காட்டில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஏற்காட்டில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் வற்ற தொடங்கிவிட்டன. இதனால் சுற்றுலா பயணிகள் வருகையும் கடந்த ஒரு மாதமாக குறைவாகவே இருந்தது.

ஆனால் இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் குறைந்து ஏற்காடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடும் பனிமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. கோடை மழை காரணமாக கிளைமேட் சூப்பராக மாறியிருந்தது. இதன் காரணமாக ஏற்காடு முழுவதும் இன்று கடும் குளிர் நிலவியது. ஏற்காடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் கடும் பனி சூழ்ந்து பக்கத்தில் தள்ளி வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு பனிமூட்டம் இருந்தது. . இதனால் வாகன ஓட்டிகள் சாலை சரியான அளவில் தெரியாததால் வாகனத்தின் முகப்பு விளக்கை எறியவிட்டவாறு சென்றார்கள்.
பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழையும் இன்று காலை முதலே அடிக்கடி பெய்து வந்தது. இதனால் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதேநேரம் ஏற்காட்டிற்கு இன்று வந்த சுற்றுலாப் பயணிகள் இந்த வானிலை மாற்றத்தால் மகிழ்ச்சி அடைந்தனர். வெயில் இல்லாமல் கிளைமேட் மாறியிருந்த நிலையில், அதனை ரசித்தபடி, சுற்றுலா பயணிகள் விரும்பிய இடத்திற்கு சென்று வந்தனர்.
இதேபோல் ஏற்காடு படகு இல்லம் பகுதியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படகில் சவாரி செய்தவாறு பனிமூட்டத்தைக் கண்டு மகிழ்ந்தனர். பூங்காவில் சாகச விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்த சுற்றுலா பயணிகள், விரும்பிய இடங்களுக்கு சென்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அடுத்தடுத்து மழைக்கு வாய்ப்பு உள்ளதால் தற்போது ஏற்காடு சென்றால் அருமையான காலநிலையை அனுபவிக்கலாம்.












Click it and Unblock the Notifications