வடமாநில இளைஞர் வெறிச்செயல்.. நெல்லை ரயில் நிலையத்தில் கோவை பயணி அடித்து கொலை - ஐசியூவில் 2 பேர்
திருநெல்வேலி: திருநெல்வேலி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நேற்று இரவு வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கட்டையை எடுத்து பயணிகளை விரட்டி விரட்டி தாக்கினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் கோவையை சேர்ந்த பயணி பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வடமாநில இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கெண்டு வருகின்றனர்.
திருநெல்வேலி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நேற்று இரவு வழக்கம்போல் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இந்த வேளையில் வடமாநில இளைஞர் ஒருவர் கட்டையை எடுத்து பயணிகளை தாக்கினர். இதை பார்த்து ஷாக்கான பயணிகள் தற்காத்து கொள்வதற்காக ஓடினர்.

ஆனாலும் அந்த இளைஞர் விடவில்லை. பயணிகளை விரட்டி விரட்டி தாக்கினார். இதில் 3 பேர் படுகாயமடைந்தனர். உடலில் இருந்து ரத்தம் சொட்டியது. அதன்பிறகு அந்த இளைஞர் அங்கிருந்து ஓடிவிட்டார்.
இதையடுத்து படுகாயமடைந்த 3 பேரும் மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். கோவை மாவட்டத்தை சேர்ந்த தங்கப்பன், தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சியை சேர்ந்த பாண்டிதுறை கேரளா மாநிலத்தை சேர்ந்த பிரசாத் என படுகாயமடைந்த 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் சிகிச்சை பலனின்றி தங்கப்பன் இறந்தார். இதுதொடர்பான புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். தாக்குதல் நடத்திய வடமாநில இளைஞரை போலீசார் தேடினர். ரயில்வே ஸ்டேஷன் மற்றும் ரயில்வே தண்டவாளத்தை சுற்றி போலீசார் தேடும் பணியை தொடங்கினர். கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனர்.
இறுதியில் தச்சநல்லூர் தண்டவாளத்தின் அருகே உள்ள பாலத்தில் ரத்தக்கறை படிந்த கட்டையுடன் ஒருவர் இருப்பதை கண்டுபிடித்தனர். அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த சூரஜ் என்பதும், அவர் தான் திருநெல்வேலி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணிகளை விரட்டி விரட்டி தாக்கியதும் தெரியவந்தது.
அவரை ரயில்வே போலீசார் ஸ்டேஷன் அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது அவர் சரியாக பதிலளிக்கவில்லை. போலீசாரின் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க மறுத்ததோடு, மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் செயல்பட்டார். இதனால் போலீசார் சிரமத்தை எதிர்கொண்டனர். அதோடு சூரஜ் எதற்காக தமிழ்நாடு வந்தார்? என்ன செய்து வருகிறார்? என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications