நிதானம் இழந்த தென்காசி லாரி டிரைவர்.. வேலைக்கு போக சொன்ன மனைவிக்கு நடந்த கொடூரம்! நிர்கதியான பிள்ளைகள்
தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கணவரை வேலைக்கு போக சொல்லிய மனைவிக்கு கனவிலும் நடக்கக் கூடாத சம்பவம் நடந்துள்ளது. அடிக்கடி வேலைக்கு போக சொல்லியதால் ஆத்திரமடைந்த கணவர் மனைவியை வெட்டி கொலை செய்த சம்பவம் அம்மாவட்டத்தையே அதிரவைத்துள்ளது. பெற்ற மகன்கள் முன்பாகவே இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.
மனைவி வேலைக்கு போக கூறியதால் கோபம் அடைந்த கணவன், தாலி கட்டிய மனைவி என்றும் பாராமல் கொடூரமாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் தென்காசி அருகே நடைபெற்றுள்ளது. தென்காசியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

தென்காசி லாரி டிரைவர்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஆண்டிப்பட்டியை அடுத்த மேலக்காட்டூர் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் முருகப்பெருமாள் (வயது 38). இவரது மனைவி மகாலட்சுமி. இவர் கடையம் அருகே உள்ள புங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த மகாலட்சுமி..இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். முருகப்பெருமான் சென்னையில் லாரி டிரைவராக வேலை செய்து வந்துள்ளார்.
இவரது வருமானம் வீட்டிற்கு போதுமானதாக இல்லை என்பதால், மகாலாட்சுமி வீட்டின் முன்பாக கூரை அமைத்து செயற்கையாக காளான் அமைத்து விற்பனை செய்து வந்துள்ளார். மேலும் பக்கத்து கிராமமான கூலாங்குளத்தில் டெய்லர் கடை வைத்தும் தொழில் நடத்தி வந்தார். இதில் ஓரளவு வருமானம் கிடைத்ததாக சொல்லப்படுகிறது. இதனால், மகாலட்சுமி சிலரிடம் கடன் வாங்கியதாக சொல்லப்படுகிறது.
2 மாதங்களாக வேலைக்கு செல்லவில்லை
கடந்த சில மாதங்களுக்கு முன் முருகப்பெருமாள் ஊருக்கு வந்தார். கடந்த 2 மாதங்களாக அவர் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால், மகாலட்சுமிக்கு கடன் கொடுத்தவர்கள் போன் செய்து பணத்தை கேட்டனர். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததுநேற்று முன்தினம் வீட்டில் இருந்த முருகப்பெருமாளிடம் வேலைக்கு சென்று கடனை அடைக்குமாறு மகாலட்சுமி கூறினார்.
இதனால் அவர் மீது முருகப்பெருமாள் கடும் ஆத்திரத்தில் இருந்தார். நேற்று காலையில் வழக்கம்போல் மகாலட்சுமி தனது வேலைகளை செய்து கொண்டு இருந்தார். அவர் அருகில் 2 மகன்களும் நின்று கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.அப்போது கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
மகன்கள் கண்முன்னே
இதில் ஆத்திரம் அடைந்த முருகப்பெருமாள் வீட்டில் இருந்த அரிவாளால் மகன்கள் கண்முன்னே மகாலட்சுமியின் முகம், கை ஆகிய இடங்களில் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. அவரிடம் இருந்து தப்பிக்க வெளியே வந்த மகாலட்சுமி நிலை தடுமாறி ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த 2 மகன்களும் கதறி துடித்தனர்.
இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட முருகப்பெருமாள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இந்த கொலை குறித்து உடனடியாக ஆலங்குளம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மகாலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகப்பெருமாளை வலைவீசி தேடி வந்தனர். இதை அறிந்த அவர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications