திரும்பாத ஸ்டியரிங்? நேரா வயலுக்குள் பாய்ந்த அரசு பஸ்.. பலியான ஜெயலட்சுமி.. நெல்லை அருகே சோகம்!
நெல்லை: நெல்லை மாவட்டம் பாபநாசத்திற்கு நேற்று காலையில் ஆலங்குளத்தில் இருந்து அரசு பஸ் ஒன்று 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. இடைகால் அருகே வந்தபோது திடீரென பஸ் ஸ்டியரிங் திரும்பாததால் கட்டுப்பாட்டை இழந்த பஸ் வயலுக்குள் பாய்ந்தது. இதில் பஸ்சுக்குள் இருந்து சாலையில் தூக்கிவீசப்பட்ட ஜெயலட்சுமி என்ற பெண் துடிதுடித்து உயிரிழந்தார். மேலும் 10க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து நெல்லை மாவட்டம் பாபநாசம் மற்றும் அம்பாசமுத்திரத்துக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று காலையில் ஆலங்குளத்தில் இருந்து அரசு டவுண் பஸ் ஒன்று பயணிகளுடன் பாபநாசத்திற்கு வந்துகொண்டிருந்தது.

பஸ்சில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ்சை இடைகால் பகுதியை சேர்ந்த முருகேஷ் என்பவர் ஓட்டி வந்தார். பஸ் இடைகால் அருகே வந்துகொண்டிருந்த போது திடீரென பஸ் கட்டுப்பாட்டை இழந்தது. ஸ்டீயரிங் திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தாறுமாறாக சென்ற அரசு பஸ் சாலையில் இருந்து இறங்கி வயலுக்குள் பாய்ந்தது.
இதனால் பஸ்சுக்குள் இருந்த பயணிகளும் அதிர்ச்சியடைந்து அலறினர். அருகில் தான் இடைகால் விளக்கு பேருந்து நிறுத்தம் என்பதால் சத்தம் கேட்டு அப்பகுதியினர் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் விபத்து பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வேகமாக வந்துகொண்டிருந்த பஸ் திடீரென வயலுக்குள் இறங்கி விபத்துக்குள்ளானதால் பஸ்சில் இருந்து ஜெயலட்சுமி என்ற பயணி உள்பட 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அம்பை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டனர். எனினும் ஜெயலட்சுமி செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார்.
அணைந்தநாடார்பட்டியை சேர்ந்த முத்தப்பா என்பவரின் மனைவி ஜெயலட்சுமி மும்பையில் வசித்து வந்ததாகவும், கோவில் திருவிழாவுக்கு ஊருக்கு வந்த போது இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்ததும் தெரியவந்தது. இவரது ஒரு மகள் பஸ்சில் இருந்து தூக்கு வீசப்பட்டு வயலுக்குள் விழுந்தார். சேறும் சகதியுடன் அந்த சிறுமி கதறி அழுதது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு அம்பை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து வயலுக்குள் கிடந்த பஸ்சை பொக்லைன் எந்திரம் மூலம் மீட்கும் பணி நடந்தது. இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பஸ்சுக்குஇந்த விபத்து குறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications