சிறைக்கு போன உரிமையாளர்.. 15 நாட்களாக உணவின்றி பலியான விலையுயர்ந்த நாய்கள்.. நெல்லையில் சோகம்!
திருநெல்வேலி: நாய் உரிமையாளர் சிறைக்குச் சென்றதால், வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாய்கள் 15 நாட்களாக உணவு, தண்ணீர் இன்றி தவித்துள்ளன. அதில் சில வகை நாய்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாய்களை உரிய முறையில் பராமரிக்கத் தவறிய உரிமையாளர் மீது போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
நாய்கள் என்றாலே பெரும்பாலானோருக்குப் பிடிக்கும். இருப்பினும், நாய்களை வளர்ப்பது அவ்வளவு ஈஸியானது இல்லை. யாராவது ஒருவர் நாய்களைக் கவனிக்க வீட்டில் இருந்து கொண்டே இருக்க வேண்டும். நாயை மனதில் வைத்தே எந்தவொரு விஷயமாக இருந்தாலும் திட்டமிட வேண்டும். இருப்பினும், நம்ம ஊரில் பலரும் நாய்களை ஆசையாக வாங்கிவிட்டு, பிறகு அதை உரிய முறையில் பராமரிக்க மாட்டார்கள். இதனால் சில மோசமான சம்பவங்கள் நடக்கிறது.

நாய்கள்
அப்படியொரு சோகமான சம்பவம் தான் நெல்லையில் நடந்துள்ளது. அங்கு உரிமையாளர் சிறைக்குச் சென்றதால், வீட்டில் பூட்டி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த நாய்கள் 15 நாட்களாக உணவு, தண்ணீர் இன்றி உயிரிழந்த சம்பவம் நெல்லை அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது வள்ளியூர் பகுதியைச் சேர்ந்தவர் அழகேசன். 50 வயதான இவர், நெல்லை ராமையன்பட்டி அருகே உள்ள கம்மாளங்குளம் பகுதியில் ஒரு வீட்டில் விலை உயர்ந்த நாய்களை வளர்த்து வந்துள்ளார். பழைய வழக்கு ஒன்றில் அழகேசன் மீது பிடிவாரண்டு இருந்துள்ளது. இதன் காரணமாகக் கடந்த 15 நாட்களுக்கு முன்பு, மானூர் போலீஸ் அவரை கைது செய்தனர்.
உயிரிழப்பு
இருப்பினும், கைது செய்யப்பட்டபோது அவர் தான் வளர்த்து வந்த நாய்கள் பற்றியோ, அவற்றைப் பராமரிப்பது குறித்தோ யாரிடமும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அந்த வீட்டில் இருந்த நாய்கள் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்துள்ளன. இதில் சில நாய்கள் பரிதாபமாக உயிரிழந்தன. இதனால் அந்தப் பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியுள்ளது.
துர்நாற்றம் வந்ததைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் விலங்கு நல ஆர்வலர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள் போலீஸ் உதவியுடன், அந்த வீட்டில் நுழைந்துள்ளனர். அப்போது தான் நாய்கள் உணவும் தண்ணீரும் இல்லாமல் பரிதாபமாக உயிரிழந்தது தெரிய வந்தது. அதில் தப்பி, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சில விலை உயர்ந்த நாய்களை மீட்கும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டனர்.
விலங்கு நல ஆர்வலர்கள்
இது குறித்து விலங்கு நல ஆர்வலர்கள் கூறுகையில், "அந்த வீட்டில் ராட்வீலர், பெல்ஜியம், ஹஸ்கி, லேப்ரடார் மற்றும் கோல்டன் ரெட்ரீவர் போன்ற விலை உயர்ந்த வெளிநாட்டு ரக நாய்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதில் பெல்ஜியம் வகை நாய் மட்டும் அதிகபட்சமாக 1.25 லட்சம் ரூபாய் மதிப்புடையது. இவ்வளவு விலை உயர்ந்த நாய்கள் அங்கே உணவின்றித் தவித்துள்ளன.
நாய்களை வளர்க்கும்போது அதைப் பராமரிக்க வேண்டியது அதன் உரிமையாளருடைய முழுப் பொறுப்பு. ஆனால் அவர் ஜெயிலுக்கு செல்லும்போது நாய்களை இப்படித் தவிக்கவிட்டது மிகப் பெரிய தவறு. அதனால் உரிமையாளர் அழகேசன் மீது கண்டிப்பாக போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்து, தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.
தவிப்பு
போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்ததால் உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்து நாய்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் கைது செய்தபோதே அவர் நாய்களைப் பற்றிச் சொல்லி இருந்தால் இந்த மோசமான சம்பவம் நடந்திருக்காது என்கிறார்கள் சமூக நல ஆர்வலர்கள்!












Click it and Unblock the Notifications