கலங்கிப்போன கனிமொழி.. நாங்குநேரி மாணவன் கையை பிடித்து ஆறுதல்.. மருத்துவமனையில் கண்ணீர்!
திருநெல்வேலி: நாங்குநேரியில் ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்த பள்ளி மாணவர் வேறு சமூகத்தை சேர்ந்த மாணவர்களால் சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாக்குதலுக்கு உள்ளான மாணவரை திமுக எம்பி கனிமொழி நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர் வேறு ஒரு சாதியை சேர்ந்த மாணவர்களால் கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டின் மனசாட்சியையே உலுக்கியுள்ளது. இதற்கு முன்னரும் சாதிய மோதல் சம்பவங்களில் 12-17 வயது சிறார்கள் ஈடுபட்டிருந்தாலும், அது பள்ளியின் மூலமாக உருவாகி இருக்கவில்லை. ஆனால் இந்த சம்பவம் முழுக்க முழுக்க பள்ளியிலிருந்துதான் வெடித்து கிளம்பியிருக்கிறது.

தாக்குதலுக்கு உள்ளான ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்த மாணவன் கடந்த சில நாட்களாக பள்ளிக்கு செல்வதை தவிர்த்து வந்திருந்தார். இது குறித்து அவரது தாய் விசாரிக்கையில், வேறு சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் இந்த மாணவனை சாதிய வன்கொடுமை செய்திருந்தது தெரியவந்திருக்கிறது. எனவே இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளிக்கையில், எங்கள் மீதே புகார் கொடுக்கிறாயா? என ஆத்திரமடைந்த மற்ற சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்த மாணவனை வீடு புகுந்து வெட்டி சாய்த்துள்ளனர். இதை கண்டு பதறி தடுக்க வந்த அவரது தங்கையையும் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதையெல்லாம் பார்த்த இவர்களது தாத்தா சம்பவ இடத்திலேயே அதிர்ச்சியில் உயிரை விட்டிருக்கிறார். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சிறார்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில் சோகம் என்னவெனில் சம்பவத்தில் ஈடுபட்ட சிறார்கள் கைது செய்யப்பட்ட பின்னரும் தாங்கள் செய்தது குறித்து எவ்வித குற்ற உணர்வும் இன்றி ஜாலியாக இருந்திருக்கின்றனர். இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் இந்த சம்பவத்திற்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்றன.
இதில் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கான சிகிச்சை செலவு, கல்வி செலவு என அனைத்தையும் அரசு ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்தது. அதேபோல அமைச்சர் மாணவனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவனையும், அவரது சகோதரியையும் இன்று நேரில் சந்தித்து இந்த துயரத்திலிருந்து மீண்டு வர அனைத்து உதவிகளையும் செய்வதாக ஆறுதல் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications