"நாடார் - தேவர்" ஜாதிக்கு அதிக வாய்ப்பு.. தொகுதி வாரியாக நெல்லை - தென்காசி வேட்பாளர்களின் பின்னணி
திருநெல்வேலி: திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் தலா 5 சட்டசபை தொகுதிகள் என்று மொத்தம் 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, சீமானின் நாம் தமிழர், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நாடார் மற்றும் தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜாதி சார்ந்த பிரச்சனைகள் தொடர்ந்து அரங்கேறி வரும் திருநெல்வேலி மாவட்ட தொகுதிகளில் பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த 4 கட்சிகளும் வாய்ப்பு வழங்கவில்லை. அதுபற்றிய முழு விவரம் வருமாறு:
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. மே 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் மேடைகளில் ஜாதிகளுக்கு எதிராக பேசினாலும் கூட தேர்தல் என்று வந்துவிட்டால் ஒரு தொகுதியில் எந்த சமுதாயத்தினர் அதிகமாக இருக்கிறார்களே? அந்த சமுதாயத்தை சேர்ந்தவருக்கு தான் போட்டியிட அதிக வாய்ப்பு வழங்குவது காலம் காலமாக நடந்து வருகிறது.

இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, சீமானின் நாம் தமிழர், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் இடையே நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. இப்படியான சூழலில் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நாடார், தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பட்டியலினத்தவர்களுக்கு வாய்ப்பில்லை
குறிப்பாக திருநெல்வேலியில் சமீபகாலமாக பட்டியலினத்தவர்கள் மீதான தாக்குதல், அடக்குமுறைகள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன ஆனால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளிலும் பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த 4 கட்சிகளும் ஒரு சீட் கூட வழங்கவில்லை.
நாடார் - தேவர் சமுதாயத்துக்கு அதிக சீட்
திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, பாளையம்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம் என்று மொத்தம் 5 தொகுதிகள் உள்ளன. இந்த 5 தொகுதிகளில் திமுக கூட்டணி 3 நாடார் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. ஒரு பிள்ளைமார், ஒரு முஸ்லிம்க்கு வாய்ப்பு வழங்கி உள்ளது.
அதிமுகவை எடுத்து கொண்டால் 3 தேவர் சமுதாய வேட்பாளர்களையும், ஒரு நாடார் மற்றும் ஒரு முஸ்லிம் வேட்பாளர்களையும் களமிறக்கி உள்ளது. நாம் தமிழர் கட்சியில் 2 தேவர், ஒரு நாடார், ஒரு பிள்ளைமார், ஒரு கோணார் சமுதாய வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தை எடுத்து கொண்டால் 3 நாடார், ஒரு தேவர், ஒரு கோணார் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.
8 நாடார் - 6 தேவர்
மொத்தமாக பார்த்தால் இந்த 4 கட்சிகள் சார்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் 5 தொகுதிகளில் மொத்தம் 20 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இதில் 8 பேர் நாடார்கள், 6 பேர் தேவர்கள், 2 பேர் கோணார், 2 பிள்ளைமார், 2 முஸ்லிம்கள் உள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் தனி தொகுதிகள் எதுவும் இல்லை. இதனால் பட்டியலினத்தவர்கள் யாருக்கும் இந்த கட்சிகள் வாய்ப்பு வழங்கவில்லை.
திருநெல்வேலி - பாளையங்கோட்டை
தொகுதி வாரியாக பார்த்தால் திருநெல்வேலி திமுக வேட்பாளர் சுப்பிரமணியன் பிள்ளைமார் சமுதாயத்தை சேர்ந்தவர். அதிமுக வேட்பாளர் தச்சை கணேசராஜா, தவெக வேட்பாளர் ஆர்எஸ் முருகன் ஆகியோ் தேவர் (மறவர்) சமுதாயத்தை சேர்ந்தவர். நாம் தமிழரின் சத்யா கோணார் சமுதாயத்தை சேர்ந்தவர்.
பாளையங்கோட்டை தொகுதியை எடுத்து கொண்டால் சிட்டிங் எம்எல்ஏவும், திமுக வேட்பாளருமான அப்துல் வஹாப் மற்றும் அதிமுக வேட்பாளர் சையத் சுல்தான் சம்சுதீன் ஆகியோர் இஸ்லாமியர் ஆவார்கள். நாம் தமிழர் வேட்பாளர் சங்கரநாராயணன் தேவர் (மறவர்) சமுதாயத்தை சேர்ந்தவர். தவெக வேட்பாளர் மரிய ஜான் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்.
நாங்குநேரி - ராதாபுரம் - அம்பை
நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சிட்டிங் எம்எல்ஏ ரூபி மனோகரன் போட்டியிடுகிறார். அதேபோல் தவெக சார்பில் வி நாராயணன் போட்டியிடுகிறார். இவர்கள் 2 பேரும் நாடார். அதிமுக கூட்டணியில் அமமுகவில் களமிறங்கி உள்ள இசக்கி முத்து, நாம் தமிழர் வேட்பாளர் செல்வம் ஆகியோர் தேவர் (மறவர்) சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.
ராதாபுரம் தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவான திமுக வேட்பாளர் அப்பாவு (சபாநாயகர்), அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளர் பாலகிருஷ்ணன், நாம் தமிழர் வேட்பாளர் கிரிஜா தாமரைபாண்டியன்,தவெக வேட்பாளர் சதீஷ்கிறிஸ்டோபர் என அனைவரும் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.
அம்பாசமுத்திரம் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் விபி துரை நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர். சிட்டிங் எம்எல்ஏவாக இருக்கும் அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா தேவர் (மறவர்) சமுதாயத்தை சேர்ந்தவர். நாம் தமிழர் வேட்பாளர் சிவசங்கரன் பிள்ளைமார் சமுதாயத்தை சேர்ந்தவர். தவெக வேட்பாளர் ராஜகோபால் கோணார் சமுதாயத்தை சேர்ந்தவர்.
தென்காசி வேட்பாளர்களின் பின்னணி
அதேபோல் தென்காசி மாவட்டத்தை எடுத்து கொண்டால் ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர் (தனி), சங்கரன்கோவில் (தனி) என்று மொத்தம் 5 தொகுதிகள் உள்ளன. 2 தனித்தொகுதிகள் இருப்பதால் 4 கட்சிகளிலும் சேர்த்து மொத்தம் 8 பட்டியலின வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக 7 நாடார், 3 தேவர், 2 இஸ்லாமியர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
தொகுதி வாரியாக பார்த்தால் தென்காசி தொகுதியை எடுத்து கொண்டால் திமுக வேட்பாளர் கலைகதிரவன், அதிமுக வேட்பாளர் செல்வமோகன் தாஸ் பாண்டியன், தவெக வேட்பாளர் ராஜபிரகாஷ் ஆகியோர் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர். நாம் தமிழர் வேட்பாளர் புஷ்பலதா தேவர் (மறவர்) சமுதாயத்தை சேர்ந்தவர்.
ஆலங்குளம் - கடையநல்லூர்
ஆலங்குளம் தொகுதியை எடுத்து கொண்டால் திமுகவின் மனோஜ் பாண்டியன், அதிமுகவின் கேஆர்பி பிரபாகர், நாம் தமிழரின் பால்ராஜ், தவெகவின் விபின் சக்கரவர்த்தி என அனைத்து வேட்பாளர்களும் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்.
கடையநல்லூர் தொகுதியை எடுத்து கொண்டால் திமுக கூட்டணியின் மதிமுக வேட்பாளர் ராஜேந்திரன், சிட்டிங் எம்எல்ஏவும், அதிமுக வேட்பாளரருமான கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா ஆகியோர் தேவர்(மறவர்) சமுதாயத்தை சேர்ந்தவர். நாம் தமிழர் கட்சியின் அபுபக்கர் சித்திக், தவெகவின் அப்துல் ஜலில் ஆகியோர் இஸ்லாமியர்கள் ஆவார்கள்.
வாசுதேவநல்லூர் - சங்கரன்கோவில்
வாசுதேவநல்லூர் (தனி) தொகுதியை எடுத்து கொண்டால் திமுக வேட்பாளர் ராஜா, பாஜக வேட்பாளர் ஆனந்தன் அய்யாசாமி, நாம் தமிழரின் இசை மதிவானன், தவெகவின் அமுதா ராணி ஆகியோர் பட்டியலினத்தை சேர்ந்தவர்.
அதேபோல் சங்கரன்கோவில் (தனி) சட்டசபை தொகுதியை எடுத்து கொண்டால் காங்கிரஸின் சங்கை கணேசன், அதிமுகவின் திலிபன் ஜெய்சங்கர், நாம் தமிழரின் கவிதா, தவெகவின் ராமராஜன் ஆகியோர் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை போட்டி இல்லை! கோவை வடக்கில் வானதி, மயிலாப்பூரில் தமிழிசை.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு -
3 எம்பிக்கள் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டி.. யாரெல்லாம் தெரியுமா? லிஸ்ட் இதோ.. பின்னணி -
களத்தில் தலைவரை காணோம்.. தேர்தல் ஹீட்டிலும் பனையூரில் ரெஸ்ட்? தவெக தொண்டர்களையே கதறவிடும் விஜய்! -
சென்னையில் 13 தொகுதிகளில் 'திமுக' வெல்லும் ! - வாயை விட்ட ஆதவ் அர்ஜூனா! என்னங்க நடக்குது? -
அண்ணாமலைக்கு இந்த பவர்ஃபுல் போஸ்ட்டிங் தர்றாரா மோடி.. கோவை பிடிவாதம் உடைந்ததா? லாபமா? நஷ்டமா -
பென்னாகரத்தில் ஒரே சத்தம்.. சூத்திரதாரி திமுக தானே மணி.. ராமதாஸின் பிளானையே ஓவர்டேக் செய்தாச்சா -
“நான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவன்..” திருமாவளவன் அறிவித்த வேட்பாளர் பேச்சால் குழப்பம்! -
வேட்புமனுவை கரெக்டா நிரப்பி கொடுங்க.. தவெக வேட்பாளரை திருப்பி அனுப்பிய தேர்தல் அதிகாரி! -
தவெக தலைவர் வயது 51ஆ, 52ஆ? திருத்தப்பட்ட பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்த விஜய்.. பலே -
டைம் ட்ராவல் செய்த விஜய்? பெரம்பூர் மனுவில் 52 வயது.. திருச்சி வேட்புமனுவில் 51 வயது! வெரி ராங் ப்ரோ -
அண்ணாமலைக்கு புதிய ‘ரோல்'..தேர்தல் நெருங்கும் வேளையில் பாஜக கொடுத்த முக்கிய ‘அசைன்மென்ட்' -
திருத்தணி தவெக நிர்வாகியின் அலப்பறை.. தனித்து விடப்பட்டதற்கு காரணம் இதுதான்! புலம்பும் நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications