சீக்கிரமே பணக்காரர் ஆகணும்! தென்காசி பட்டதாரி மணிகண்டனுக்கு வந்த வில்லங்க ஐடியா.. கடைசியில் ட்விஸ்ட்
தென்காசி: பணம் சம்பாதித்து முன்னேற வேண்டும் என நினைப்பது இயல்பு தான். ஆனால் சிலர் சீக்கிரமாக முன்னேற வேண்டும் என்பதற்காக குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைத்து கடைசியில் போலீசில் சிக்கிவிடுவார்கள். அப்படித்தான் தென்காசியை சேர்ந்த பட்டதாரி வாலிபர் மணிகண்டனும் சீக்கிரமாக பணம் சம்பாதிக்க நினைத்து யூடியூப் பார்த்து வில்லங்க செயலை செய்துள்ளார். தற்போது அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அழகாபுரிபட்டணம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்ட பிரபு (வயது 26). பி.ஏ பட்டதாரி. பட்டப்படிப்பை முடித்த இவர் தென்காசியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் பகுதி நேர மேலாளராக வேலை பார்த்து வந்தார்.

பி.ஏ பட்டதாரி வாலிபர்
இந்த நிலையில் மணிகண்ட பிரபு கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடித்து புழக்கத்தில் விட்டு பணம் சம்பாதித்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் ஆலங்குளம் போலீசார் மணிகண்ட பிரபுவை ரகசியமாக கண்காணித்து வந்தனர். மேலும் அவரது வீட்டில் சென்றும் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, அவரது வீட்டில் உள்ள அறையில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்ட நிலையில் கிடந்தன.
அருகே ஜெராக்ஸ் எந்திரம் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மணிகண்ட பிரபுவை கைது செய்த போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் பல்வேறு தகவல்களை தெரிவித்தார். அதாவது கல்லூரி படிப்பை முடித்த பிறகு கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக அவர் சமூகவலைதளம் மூலம் ஆர்டர் செய்து கலர் ஜெராக்ஸ் எந்திரம் ஒன்றை வாங்கியிருக்கிறார். அதில் பிரிண்ட் அவுட் எடுப்பது தொடர்பான பணிகளை பகுதி நேரமாக செய்து வந்தார்.
கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கம்
இது ஒரு வேலையாகவும், தென்காசியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் மேற்பார்வையாளராக பகுதி நேரமாகவும் பணிபுரிந்து வந்தார். வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வரும் போது இரவு நேரங்களில் தனது செல்போனில் 'யூடியூப்' வீடியோக்களை பார்த்து வந்தார். அதைப் பார்த்து தனது அறையில் வைத்திருந்த ஜெராக்ஸ் எந்திரத்தில் 500, 200 ரூபாய் நோட்டுகளை அப்படியே ஸ்கேன் செய்து கலர் ஜெராக்ஸ் எடுத்து கள்ள ரூபாய் நோட்டுகளாக புழக்கத்தில் விட்டு உள்ளார்.
இந்த கள்ள ரூபாய் நோட்டுக்களை மருந்துக்கடை, டீக்கடை போன்ற கடைகளில் புழக்கத்தில் விட்டுள்ளார். மேலும் இவருக்கு துணையாக வேறு யாரும் இதில் ஈடுபட்டனரா என்று விசாரித்ததில், அதே பகுதியை சேர்ந்த மேலும் 4 பேர் இதற்கு உதவி புரிந்தது தெரியவந்தது என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து மணிகண்ட பிரபுவை கைது செய்தனர்.
ஜெராக்ஸ் எந்திரம் பறிமுதல்
தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். மேலும் அவரது வீட்டில் இருந்த கள்ள ரூபாய் நோட்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட கலர் ஜெராக்ஸ் எந்திரம், பிரிண்ட் அவுட் பேப்பர்கள், கலர் ஜெராக்ஸ் மூலம் எடுக்கப்பட்ட 500, 200 ரூபாய் கள்ளநோட்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். சீக்கிரமாக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு குறுக்கு வழியில் செயல்பட்ட வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications