நெல்லையில் தூத்துக்குடி என்ஜினீயர் கவின் வெட்டி கொலை.. தங்கையை காதலித்ததால் எஸ்ஐ மகன் வெறிச்செயல்
நெல்லை: நெல்லை பாளையங்கோட்டையில் பட்டப்பகலில் தூத்துக்குடி என்ஜினீயர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். பழங்குடியின வாலிபர் தன் தங்கையை காதலித்ததற்காக போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மகன் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தார். இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகர் பகுதியில் வசித்து வருபவர் சரவணன். இவரது மனைவி கிருஷ்ணகுமாரி. கணவன் மனைவி இருவரும் மணிமுத்தாறு பட்டாலியன் போலீசில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்கள். இந்த தம்பதிக்கு சுர்ஜித் என்ற 24 வயது மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர்.

இதில், சரவணன் தூத்துக்குடியில் வசித்து வந்தபோது, இவரது மகளுக்கும், ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயியின் மகனான கவின் குமாரும் (26) காதலித்துள்ளனர். தற்போது கவின் குமார் சென்னையில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இதையடுத்து அவர் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது சப் இன்ஸ்பெக்டர் சரவணனின் மகளும், கவின் குமாரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர்.
இதற்காக கவின் குமார் ஏரலில் இருந்து பாளையங்கோட்டைக்கு வந்து காதலியை சந்தித்துவிட்டு செல்வார் என கூறப்படுகிறது. இவர்களது காதல் விவகாரம் சமீபத்தில் சரவணன் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. கவின் குமார் பழங்குடியின சமூகம் என்பதால் சரவணன் குடும்பத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே கவின்குமாரின் தாத்தாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதனால் கவின்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார். நேற்று இதுபற்றி தகவல் தெரிந்ததும் காதலியின் சகோதரர் சுர்ஜித் கவின்குமாரை சந்தித்து பேசுவதற்காக வந்துள்ளார். அதன்படி ஆஸ்பத்திரிக்கு வெளியே வந்த கவின்குமாரிடம் காதலை கைவிடுமாறு பேசியதாக கூறப்படுகிறது. இதில் அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கவின் குமாரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதில் துடிதுடித்து கவின்குமார் அங்கேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார் கவின் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், சப் இன்ஸ்பெக்டர் சரவணனின் மகன் சுர்ஜித் தான் கவின் குமாரை அரிவாளால் வெட்டியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சுர்ஜித்தை கைது செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருவரும் வேறு வேறு சமூகம் என்பதால், ஆணவக்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications