விஜய் பொய் சொல்றார்.. ரஜினி.. கமலுக்கே இல்லாத வசதிகள்.. புட்டு புட்டு வைத்த வேல்முருகன்
திருநெல்வேலி: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக தலைவர் விஜயின் அரசியல் வருகை இந்த தேர்தல் போட்டியை தீவிரமாக்கியுள்ளது. தவெக ஆட்சி அமைந்த பிறகு தான் கிராமம்.. கிராமமாக செல்வேன் என்று கூறியிருந்தார். இதற்கு தவாக தலைவர் வேல்முருகன் விஜயை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் நேற்று வேலூர் கூட்டத்தில் பேசும்போது, தமிழ்நாட்டிற்கு தேவையில்லாத ஆட்சி. எங்கள் வாக்குச்சாவடி வெற்றி வாக்கு சாவடியா என்கிறது திமுக. எங்கள் வாக்குச்சாவடி விஜய் வாக்குச்சாவடி என்பதுதான் அதன் அர்த்தம். இந்த தேர்தலில் தவெக தில்லாக நிற்கும். தவெக ஆட்சியமைந்தவுடன் ஒவ்வொரு கிராமமாக சென்று, உங்களை வீடு தேடி வந்து பார்ப்பேன் என்றார்.

விஜய்க்கு சலுகைகள்
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "விஜய் கிராமம் கிராமமாக செல்வேன் என்று சொல்வதை கேட்க சிரிப்பு தான் வருகிறது. தமிழ்நாட்டில் என்ன நடந்தது என உங்களுக்கு தெரியும். தன்னை பார்க்க வந்த ரசிகர்கள், நெரிசலில் சிக்கி பிணமானபோது கூட அவரை பார்க்காதவர் விஜய்.
நான் முதலமைச்சர் அரியணையில் அமர்ந்த பிறகு தான் கிராமம் கிராமமாக மக்களை சந்திக்க வருவேன் என்பது தமிழ்நாடு மக்களை குறைத்து மதிப்பிடுவதாக பார்க்கிறேன். எல்லாவற்றுக்கும் தீர்ப்பு எழுதுபவர்கள் மக்கள் தான். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. விஜய் மாநில அரசு மீது குற்றம் சாட்டுவது தவறு. ஒன்றிய அரசும், மாநிலம் அரசும் அவருக்கு போட்டி போட்டு நிறைய வசதி வாய்ப்புகள், சலுகைகள் தருகிறார்கள்.
பாதுகாப்பு
இந்தியாவில் எந்த ஒரு நடிகருக்கும் இல்லாத பாதுகாப்பு கொடுக்கிறார்கள். தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோருக்கு இல்லாத பாதுகாப்பு, இளைய தலைமுறையினரின் மனங்களை வென்ற அஜித்துக்கு இல்லாத பாதுகாப்பு விஜய்க்கு உள்ளது. இந்தியாவில் எந்த நடிகருக்கும் எப்போது வேண்டுமானாலும் எந்த விமான நிலையத்திற்கும் வரலாம், செல்லலாம் என்கிற நிலை இல்லை.
இந்த சுதந்திரம் விஜய்க்கு மட்டும் தான் உள்ளது. மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் ஒன்றிய அரசின் பாதுகாப்புப் பிரிவில் பாதுகாப்பு வழங்கியுள்ளனர். நான் திமுக கூட்டணி கட்சியில் உள்ள ஒரு தலைவர். மதவாத சங் பரிவார் கும்பல்களை நேருக்கு நேராக எதிர்ப்பவன். தமிழ்நாடு அரசின் காவல்துறை எனக்கு எந்த பாதுகாப்பும் வழங்குவதில்லை. இப்போது கூட திருநெல்வேலியில் எந்த பாதுகாப்பும் இல்லை.
காவல்துறையே
காவல்துறை ஐஜியே சாலைக்கு வந்து விஜய் வாகனத்திற்கு போக்குவரத்து ஒழுங்கு செய்கிறார். காவல்துறை எஸ்பி அவரின் நிகழ்ச்சி மேடையில் நின்று பாதுகாப்பு வழங்குகிறார். அவர் செல்லும் இடமெல்லாம் காவல்துறை பாதுகாப்பு வழங்குகிறார்கள். இதிலிருந்து காவல்துறையும், ஒன்றிய பாதுகாப்புப் பிரிவும் யாருக்கு எப்படி பாதுகாப்பு வழங்குகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்" என்றார்.












Click it and Unblock the Notifications