தமிழ்நாட்டின் “டாப் டெஸ்டினேஷன்”.. ஆகஸ்டில் டூர் செல்ல 5 சூப்பர் டூப்பர் தலங்கள் - இது வேற மாதிரி
சென்னை: 2 வது சம்மர் என்று சொல்லும் அளவுக்கு சூடானதாக மாறி இருக்கும் இந்த ஆகஸ்டு மாதத்தில் தமிழ்நாட்டில் சுற்றிப்பார்க்க வேண்டிய முக்கிய 5 தலங்களை ஏற்கனவே பார்த்த நிலையில் மேலும் 5 இடங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
ஆகஸ்டு மாதம் என்றாலே வெயில் குறைந்து இதமான காற்றும் அவ்வப்போது லேசான மழையும் இருக்கும் என்றே நாம் நினைப்போம். ஆனால் இப்போதே மே மாதத்திற்கு நிகராக ஆகஸ்டில் மக்களை அடித்து காயப்போட்டு வருகிறது சூரியன். இதிலிருந்து தப்பிக்க மீண்டும் சுற்றுலா தலங்களை தேட தொடங்கி உள்ளார்கள் மக்கள். அவர்களுக்காகவே தமிழ்நாட்டில் ஆகஸ்டில் சுற்றிப்பார்க்க வேண்டிய 5 சுற்றுலா தலங்களின் முதல் பட்டியலை வெளியிட்டோம்.

வெளுக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க குளிர் பிரதேசங்கள், குற்றாலம் போன்ற அருவிகள் நிறைந்த பகுதிகளை வெளியிட்டு இருந்தோம். அனைத்தும் மலைப்பகுதியாகவே உள்ளதே.. வெயிலாக இருந்தாலும் பரவாயில்லை, ஆகஸ்டில் செல்ல வேண்டிய மற்ற பகுதிகளை சொல்லுங்கள் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று எதிர்பார்ப்பவர்களும் இருப்பார்கள். அவர்களுக்காகவே இந்த லிஸ்ட்.
1. தஞ்சாவூர்: என்ன... சுற்றுலா என்றாலே ஒரே மலை, அருவி, குளிர் பிரதேசம் மட்டும்தானா? சமவெளியில் ஏதுமில்லையா என்று ஏங்குவோருக்கு இருக்கவே இருக்கிறது நம்ம தஞ்சாவூர். சோழனின் பெருமைமிகு அடையாளமான பெரிய கோயில், தஞ்சாவூர் அரண்மனை, கல்லணை, ஆர்ட் கேலரி, அங்கிருந்து அதிராம்பட்டினம் நோக்கி வந்தால் புதுப்பட்டினம் டெல்டா பீச், மல்லிப்பட்டினம் மனோரா, அடர்ந்த தென்னை தோப்புகள், பரந்து விரிந்த பச்சை வயல்வெளிகள் என உங்கள் கண்ணுக்கு குளிர்ச்சி தரும் பல அம்சங்கள் இங்கு உண்டு.
2. மதுரை: சோழ நாடு மட்டுமில்ல. பாண்டிய நாடும் ஆகஸ்டில் சுற்றிப்பார்க்க உகந்ததுதான். ஆம், நம்ம மதுரையை பற்றிதான் சொல்கிறோம். சுவையான உணவும், சுற்றிப்பார்க்க சூப்பரான இடமும் வேண்டும் என்றால் தாராளமாக மதுரைக்கு செல்லலாம். குளிர்ச்சிக்கு ஜிகர்தண்டா, சூடான பரோட்டா சால்னா என சாப்பாட்டுடன், சங்ககால இலக்கியங்களில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ள பகுதிகளை பிரம்மிப்பாக நோக்கலாம். மீனாட்சியம்மன் கோயில், திருமலை நாயக்கர் மாளிகை, காந்தி மண்டபம் என வரலாற்று சிறப்புமிக்க பல்வேறு தலங்களை உள்ளடக்கி இருக்கிறது மதுரை.
3. ராமேஸ்வரம்: மதுரை வந்தால் அதே வழியில் மறக்காமல் ராமேஸ்வரத்துக்கு சென்றுவிடுங்கள். இருபக்கமும் கடல் சூழ, பாம்பன் பாலத்தின் மீது செல்வதே ஒருவிதமான பிரம்மிப்புதான். உங்கள் நேரம் சரியாக இருந்தால் நீலக்கடலில் நீந்தி வருவதைபோல் வரும் ரயிலையும் பார்க்கலாம். இது அல்லாமல், இந்தியாவின் இறுதி புள்ளி என்று சொல்லப்படும் தனுஷ்கோடியும், அங்குள்ள சிதைந்த கட்டிடங்களும் உங்களை வேறொரு உலகிற்கு கொண்டு செல்லும். ஏராளமான பவளப்பாறைகள் நிறைந்த குட்டி குட்டி தீவுகளுக்கு படகு சவாரி செய்தும் மகிழலாம்.
4. கன்னியாகுமரி: முக்கடல் சங்கமிக்கும் இந்தியாவின் வால் பகுதியான கன்னியாகுமரியும் ஆகஸ்டில் சுற்றிப்பார்க்க சூப்பரான இடம். இந்திய பெருங்கல், வங்காள விரிகுடா, அரபிக் கடல் என முக்கடல்களும் கூடும் எந்த அதிசய காட்சியை காண கண்கோடி வேண்டும். அத்தனை அழகு அது. கடலோரத்தில் சூரியன் உதிக்கும் காட்சி, மறையும் காட்சி போன்றவை உங்கள் மனதை சாந்தப்படுத்தும். திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம் போன்றவை முக்கிய சுற்றுலா தலங்களாக உள்ளன.
5. தூத்துக்குடி: அடுத்து நாம் பார்க்கப்போவதும் ஒரு தென் மாவட்டம்தான். எது தூத்துக்குடியில் சுற்றிப்பார்க்க இடம் இருக்கா என்று கேட்கலாம். ஏன் இல்லை? தூய்மையான தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் முத்து நகரமான தூத்துக்குடியின் கடல் அழகு ஈடு இணையற்றது. காயல்பட்டினம் கடற்கரை முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது. ஏராளமான கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளை கொண்ட மத நல்லிணக்க மண்ணாக தூத்துக்குடி திகழ்ந்து வருகிறது.
இதில் ராமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி என 3 மாவட்டங்களுக்கும் சேர்த்து சுற்றுலா செல்லலாம். அல்லது தஞ்சாவூர் அதன் கடலோர பகுதிகளை பார்வையிட்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக ராமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி அல்லது, தஞ்சாவூர், ராமேஸ்வரம், மதுரைக்கு செல்லலாம்.
அல்லது மதுரை, ராமேஸ்வரம், தூத்துக்குடி கன்னியாகுமரி செல்லலாம். அல்லது மதுரையிலிருந்து புதுக்கோட்டை வழியாக தஞ்சாவூர் செல்லலாம். இதில் மதுரையிலிருந்து நேராக தஞ்சை செல்லாமல் காரைக்குடி, அறந்தாங்கி வழியாக ஈசிஆர் சாலையோரம் அதிராம்பட்டினம் கடற்கரை பகுதிகளை பார்த்துவிட்டு பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு வழியாக தஞ்சை சென்றால் அலைச்சல் குறைவு












Click it and Unblock the Notifications