தேனிக்கு டூர் போறீங்களா.. வழக்கமான இடங்களை விடுங்க..இதபோய் பாருங்க! கவனம் பெறாத வாவ் ஸ்பாட்
தேனி: பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் மக்கள் தங்கள் குழந்தைகளுடன் டூரிஸ்ட் ஸ்பாட்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். இப்படி கோடை விடுமுறையை கழிக்க தேனிக்கு செல்லும் மக்கள் பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்த இடங்களுக்கு சென்றுவிட்டு திரும்பிவிடுகின்றனர். ஆனால், இம்மாவட்டத்தில் அறியப்படாத பல இடங்கள் இருக்கின்றன.
மேகமலை, சுருளி அருவி ஆகியவை பொதுவாக அறியப்பட்ட இடங்களாகும். ஆனால் இதைத்தாண்டி குரங்கணி, கும்பக்கரை அருவி, டாப் ஸ்டேஷன் வியூ பாயிண்ட், சேரன் வேடிக்கை பூங்கா, புலி அருவி, சோத்துப்பாறை அணை, எலிவால் அருவி என பல இடங்கள் சுற்றிப்பார்க்க ஏற்ற இடங்களாக இருக்கிறது. இதில் சுருளி அருவி குறித்து பலருக்கும் நன்றாக தெரிந்திருக்கும். மேற்குத்தொடர்ச்சி மலையில் நீரோடைகள் ஆறுகளாக மறி சுருளி அருவியாக பாய்கிறது. கம்பத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த அருவி இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது.

முதல் அருவியில் 140 அடி உயரத்திலிருந்து நீர் விழுகிறது. அதேபோல இரண்டாவது அருவியில் 50 அடி உயரத்திலிருந்து நீர் விழுகிறது. இந்த இடத்தில் மக்கள் குளிப்பதற்கு என பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் தைரியமாக குளிக்கலாம். ஜூன் முதல் அக்டோபர் மாதம் வரை இந்த அருவியில் தண்ணீர் போதுமான அளவுக்கு வரும். அதேபோல இந்த இடத்தில் சுருளி வேலப்பர் கோயில் மற்றும் தர்கா என இரண்டு வழிபாட்டு தலங்கள் இருக்கின்றன.
சுருளி அருவிக்கு அடுத்து காண வேண்டிய மிக முக்கியமான இடம் மேகமலை. பெயர் மட்டும்தான் மலை. ஆனால் இது அமைந்துள்ள இடம் ஒரளவுக்கு சமவெளியான பகுதிதான். தேனி சின்னமனூரிலிருந்து பேருந்து வசதி இருக்கிறது. 5 மலை சிகரங்களுக்கு நடுவே அமைந்திருக்கும் மேகமலை கோடை காலத்தை இனிமையாக கழிக்க ஏற்ற இடம்தான். ஏராளமான அரிய வகை உயிரினங்கள், நீர் நிலைகள், குளுமையான கால நிலையம் என அனைத்தும் நிச்சயம் நம்மை மெய்மறக்க செய்துவிடும்.
இங்கு ஏராளமான காட்டு உயிரினங்கள் இருப்பதால் இந்த இடத்தில் சரணாலயம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. புலி, சிறுத்தை, யானை தொடங்கி, புள்ளி புறா, வெள்ளை வயிறு மரங்கொத்தி என பல்வேறு உயிரினங்களை நம்மால் இங்கு காண முடியும். இதற்கடுத்து நாம் பார்க்க வேண்டிய மற்றொரு இடம் குரங்கணி மலை. மலையேற்றம் செய்ய விரும்புவோருக்கு இது ஒரு சொர்க்கமாகும். போடிநாயக்கனூரிலிருந்து 12 கி.மீ சென்றால் குரங்கணியின் அடிவாரத்தை அடைந்துவிடலாம். இங்கு சுமார் 6 சிற்றோடைகள் இருக்கின்றன. ஒருபக்கம் கொல்லிமலையும், மறுபக்கம் குரங்கணி மலையும் நம்மை மெய் சிலிர்க்க வைத்துவிடும்.
இந்த மலை வழியாக நடந்து சென்றால் அப்படியே கேரளாவின் மூணாறுக்கு சென்றுவிடலாம். குரங்கணியிலிருந்து சுமார் 12 கி.மீ நடந்து சென்றால் டாப் ஸ்டேஷன் வியூ பாயிண்ட் வந்துவிடும். தேயிலை தோட்டம், அடர்த்தியான மரங்கள் என இந்த இடம் நிச்சயம் மனநிறைவை கொடுத்துவிடும். அதேபோல குழந்தைகளுக்கு ஏற்ற இடம் சேரனின் வேடிக்கை பூங்கா என்றால் அது மிகையாகாது. குழந்தைகள் பூங்கா, படகு சவாரி என குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்த அனைத்தும் இங்கு இருக்கிறது.

அதேபோல புலி அருவியும் மிகவும் முக்கியமான இடமாகும். இந்த அருவி குறித்து பலருக்கும் தெரியாது. எனவே உள்ளூர் மக்களை தாண்டி பெரியதாக இங்கு யாரும் வருவதில்லை. அளவிலும் சிறிய அருவியாகும். குழந்தைகளுடன் தேனிக்கு செல்பவர்கள் தைரியமாக குளிக்க ஏற்ற இடம்தான் இந்த புலி அருவி. அதேபோல மற்றொரு பேமஸான அருவி எலிவால் அருவி என அழைக்கப்படும் தலையாறு அருவியாகும். தமிழ்நாட்டின் மிகவும் உயரமான அருவி இதுவாகும். சுமார் 297 மீ உயரத்திலிருந்து இந்த அருவி பாய்கிறது. இந்த அருவியின் உச்சிக்கு செல்வது மிகவும் கடினமான காரியமாகும்.
அதேபோல மங்களதேவி ஸ்ரீகண்ணகி திருக்கோயில், பென்னிகுவிக் மணிமண்டபம், சனீஸ்வரர் கோயில் அமைந்துள்ள குச்சனூா் கிராமம், போடி மெட்டு மற்றும் ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் ஆகியவையும் நிச்சயம் பார்க்க வேண்டிய இடமாகும்.












Click it and Unblock the Notifications