ஏலகிரியில் ஜில் ஜில்.. ஏழைகளின் ஊட்டியை வந்து பாருங்க மக்களே.. இத்தனை நாள் இதெல்லாம் தெரியாம போச்சே
சென்னை: தமிழ் நாட்டில் மலைவாழிடம் என்றாலே ஊட்டி, கொடைக்கானல் இடங்கள்தான் ஞாபகம் வருகிறதே தவிர, ஏலகிரியை மறந்துவிடுகிறோம்.. அப்படி என்ன இருக்கிறது ஏலகிரியில்??
வேலூரிலிருந்து 100 கி.மீ தூரத்திலும், சென்னை விமான நிலையத்தில் இருந்து 220 கி.மீ தூரத்திலும், பெங்களூரிலிருந்து 200 கி.மீ தூரத்திலும், ஏலகிரி மலை உள்ளது.
ஏலகிரி கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1200 மீ உயரத்தில் நான்கு மலைகளால் சூழப்பட்டுள்ளது... இங்கு சுற்றிப்பார்க்க ஏகப்பட்ட இடங்கள் இருக்கின்றன. குறிப்பாக, இயற்கைப்பூங்கா, முருகன் ஆலயம், தொலைநோக்கி இல்லம், போன்ற இடங்கள் ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகளுக்கேற்ற இடமாகும்.

அட்டாறு நதி : திருப்பத்தூர் அருகில் உள்ள ஏலகிரி மலையில் அட்டாறு நதி உள்ளது.. சடையனூர் என்னுமிடத்தில் 15 மீட்டர் உயரத்தில் இருந்து அருவியாக இது கொட்டி கொண்டிருக்கிறது.. மலையில் காணப்படும் பல்வேறு வகையான மூலிகைத் தாவரங்கள் ஊடாக நதி வருவதால் அருவியில் நீராடுவது நோய்களை நீக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு. நீர்வீழ்ச்சியின் அருகில் முருகன் கோயில் உள்ளது. சுவாமிமலை என்ற பெயரில் அழகிய சிவன் கோயில் ஒன்றும் ஏலகிரி மலையில் அமைந்துள்ளது.
இயற்கைப்பூங்கா இங்குள்ள இடங்களில் மிகப்பிரமாதமாக இருக்கும்.. காரணம், இந்த பூங்காவில் செயற்கை நீர்வீழ்ச்சிகளும் சிறுவர் விளையாட்டு பூங்காவும், மீன் கண்காட்சியும், மலர்த்தோட்டங்களும் மக்களை சுண்டி இழுக்கின்றன.. அதிலும், இசைக்கு ஏற்ப நடனமாடும் செயற்கை நீருற்று இதன் ஸ்பெஷாலிட்டியாகும்.
பூங்கானூர் ஏரி: செயற்கை நீர்வீழ்ச்சி போலவே, செயற்கை ஏரி இங்குண்டு. அதன்பெயர் பூங்கானூர் ஏரி.. இந்த ஏரியில் சுற்றுலாத் துறையின் படகுகள் மூலம் படகு சவாரி செய்யலாம்... ஏரியின் நடுவே செயற்கை நீருற்றும், ஏரியின் அருகே குழந்தைகள் பூங்காவும் உள்ளன. இதைதவிர, நிலாவூர் ஏரி மற்றும் பூங்கா, மங்கலம் தாமரைக்குளம், படகு குழாம் போன்றவற்றை தவறாமல் கண்டுகளித்துவிட வேண்டும். மலை மீது அமைந்திருக்கும் நீண்ட நடைப்பாதை, நிலாவூர் தம்புரான் குளம், தேவ நாச்சியம்மன் கோயில், பரண் பார்வை மையம் போன்றவை இங்கு காண வேண்டிய இடங்கள்.
இங்கு வரும் பயணிகள் கண்டிப்பாக செல்லக்கூடிய கோயில் வேலவன் கோவில்.. இது முருகன் கோவிலாகும்.. மிகப்பெரிய கடோத்கஜன் சிலை இங்கிருக்கிறது.. ஆடி மாதம் திருவிழா காலங்களில் இந்த கோயில் களைகட்டும்.

மூலிகைப் பண்ணை: தமிழக அரசு வனத்துறை சார்பில் புங்கனூர் ஏரி அருகே மூலிகைப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்துக்கு பயன்படும் அரிய மூலிகைகள் பயிரிடப்படுகிறது. அரசு பழப் பண்ணை ஒன்றும் உள்ளது. இதில் மலையில் விளையும் பழங்களை பயணிகள் வாங்கிச் செல்லலாம். ஏலகிரி நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள டெலஸ்கோப் வழியாக மலையின் எழிலையும், மலைச்சரிவு மற்றும் பள்ளத்தாக்குகளையும் காண முடியும்.
தென்னிந்தியாவிலேயே ஏலகிரி மலையில்தான் பாராகிளைடிங் பயிற்சி அளிக்கப்படுகிறது. வருடந்தோறும் ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில் புங்கனூரில் இருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அத்தனாவூரில் பாராகிளைடிங் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஏலகிரியில் சுற்றிபார்ப்பதற்கான இடங்களும் குறைவு, இருந்தாலும் மலையேற்ற பயிற்சிக்கு சிறந்த இடம்.
எப்படி செல்லலாம்: சென்னையிலிருந்து அடுக்கடி பேருந்து வசதி இருக்கும் ஏலகிரிக்கு 4 மணி நேரத்தில் சென்று விடலாம். சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் ரயிலில் ஜோலார்பேட்டையில் இறங்கி அங்கிருந்து ஏலகிரி செல்லலாம். திருப்பத்தூர், வாணியம்பாடி பகுதிகளில் இருந்து நகர பேருந்துகளும் ஒரு மணி நேர இடைவெளியில் இரவு 9 மணி வரை ஏலகிரி மலைக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பொன்னேரி கூட்டுச் சாலையில் இருந்து ஏலகிரி மலைக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
திருப்பத்தூருக்கு செல்லும் வழியில் பொன்னேரி கூட்டுச் சாலை அமைந்துள்ளது. இச்சாலை திருப்பத்தூரில் இருந்து 12 கி.மீ. தொலைவிலும், வாணியம்பாடியில் இருந்து 9 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. அத்துடன் மிகப் பழமையான ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
தங்கும் வசதி: இச்சாலை வரை பஸ் வசதி எப்போதும் உண்டு. மலையில் ரூ.300 முதல் ரூ.3 ஆயிரம் வரை வாடகையில் விடுதிகள் உள்ளன. அரசு சார்பில் யாத்திரை நிவாஸ் என்ற விடுதி உள்ளது. ஒரு நாளுக்கு ரூ.250 முதல் ரூ.700 வரை கட்டணம். ஏலகிரியில் 30க்கும் மேற்பட்ட அசைவ, சைவ ஓட்டல்கள் உள்ளன.












Click it and Unblock the Notifications