கொடைக்கானலில் இரவில் வண்டி பிரேக் டவுன்.. சிக்னல் இல்லை.. சூழ்ந்த காட்டெருமைகள்..திக் திக் சம்பவம்
கொடைக்கானல்: கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள மோயர் பாயிண்ட் பகுதியை மாலையில சுற்றி பார்த்த சுற்றுலா பயணிகள், வாகனம் பழுதானதால் இரவில் சிக்கி கொண்டனர். கும்மிருட்டில், காட்டெருமைகள் அவர்களை சூழ்ந்த நிலையில், கதி கலங்கியபடி இருந்த 6 பேரை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
மயிலாடுதுறையை சேர்ந்த 9 பேர் சிங்கப்பூரில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் ஒரு வேனில் கடந்த மே 25ம் தேதி அதாவது சனிக்கிழமை இன்று கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார்கள். கொடைக்கானலில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தவர்கள், மாலையில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர் பாயிண்ட், பைன்மரக்காடு, பில்லர்ராக் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா சென்றுள்ளார்கள். மாலை 6 மணி அளவில் மோயர் பாயிண்ட் பகுதிக்கு வந்த போது, அப்போது அவர்கள் வந்த வேன் பழுதாகி நின்றுவிட்டது.

எனினும் இரவு பொழுதாகும் வரை வேனில் இருந்து இறங்கிய சுற்றுலா பயணிகள், மோயர் பாயிண்ட் பகுதியை சுற்றி பார்த்தனர். அதன்பிறகு வேனுக்கு வந்தார்கள்.. ஆனால் வேனை டிரைவரால் நகர்த்த முடியவில்லை. வேன் பழுதாகியதை சரி செய்யவும் முடியவில்லை. செல்போன் சிக்னலும் வேலை செய்யவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனிடையே எல்லாருமே போய்விட்டார்கள். இவர்கள் தான் மோயர் பாய்ண்டை கடைசியாக சுற்றிபார்த்தவர்கள் என்பதால் யாரிடம் உதவி கேட்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இதனிடையே சுற்றுலா பயணிகள் 9 பேரில் 3 பேர் மட்டும், உதவிக்கு ஆட்களை அழைத்து வருவதாக கூறி அங்கிருந்து வனப்பகுதி வழியாக நடந்து சென்றுள்ளார்கள். மீதியுள்ள 6 பேர் மட்டும் மோயர்பாயிண்ட் பகுதியில நின்று கொண்டிருந்தார்கள்.
மறுபக்கம் வேனில் உள்ள பழுதை எப்படியாவது நீக்கி தங்களை வேனில் அழைத்து செல்வார்கள் என்று மீதமுள்ள 6 சுற்றுலா பயணிகளும் காத்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இரவு நேரமாகியும் வேன் பழுதை சரி செய்ய முடியவில்லை.. போனவர்களை பற்றி எந்த தகவலும் அவர்களுக்கு தெரியவில்லை. ஒரு கட்டத்தில் இருள் சூழ்ந்து கும்மிருட்டாக மாறியதுடன் காட்டெருமைகள் அந்த பகுதிகளில் இறங்கி வர தொடங்கின.
ஒரு பக்கம் காட்டெருமைகளிடம் சிக்கினால் உயிர் தப்ப முடியாது என்று பயந்த அவர்கள். மோயர் பாயிண்ட் பகுதியில் உள்ள நுழைவுச்சீட்டு கொடுக்கும் கவுண்ட்டரில் தஞ்சம் அடைந்தனர். சுற்றுலா பயணிகள் 6 பேரும் வனவிலங்குகளிடம் சிக்கிவிடுமோ என்று உயிரை கையில் பிடித்து கொண்டு பரிதவித்து கொண்டிருந்தார்கள்.
இதனிடையே உதவிக்கு ஆட்களை அழைத்து வருவதாக நடந்து சென்ற சுற்றுலா பயணிகள் 3 பேரும் ஒருவழியாக கொடைக்கானல் பேருந்து நிலையத்தை வந்தடைந்தனர். பின்னர் அங்கு இருந்த வாடகை கார் டிரைவர்களிடம் தங்களுடன் வந்த சுற்றுலா பயணிகள் 6 பேர் வனப்பகுதியில் சிக்கி தவிப்பதாக கூறியிருக்கிறார்கள். இதனையடுத்து டிரைவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் மோயர் பாயிண்ட் பகுதிக்கு ஜீப்பில் வனத்துறையினர் இரவு 11 மணி அளவில் விரைந்து சென்று சுற்றுலா பயணிகளை தேடும் பணியில் ஈடுபட்டார்கள். இந்தநிலையில் தாங்கள் இருக்கும் இடத்தை அடையாளம் கண்டுபிடிக்கும் வகையில், நுழைவுச்சீட்டு கொடுக்கும் கவுண்ட்டரில் இருந்த சுற்றுலா பயணிகள் செல்போனில் லைட் அடித்து உதவி கேட்டனர்.
இதனை பார்த்து வனத்துறையினர் அங்கு சென்று, சுற்றுலா பயணிகள் 6 பேரையும் பத்திரமாக மீட்டனர் பின்னர் வனத்துறையின் ஜீப் மூலம் அப்சர்வேட்டரியில் அவர்கள் தங்கி உள்ள விடுதிக்கு கொண்டு போய் விடப்பட்டனர். இந்த சம்பவம் கொடைக்கானலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications