அடுத்த 3 மணி நேரத்தில்.. இந்த 10 மாவட்டங்களில் மழை கொட்ட போகுது.. கோடை வெப்பத்திற்கு குட்டி பிரேக்
சென்னை: தமிழ்நாட்டில் இப்போது பல்வேறு பகுதிகளிலும் வெப்பம் படுத்தி எடுத்து வருகிறது. இதனால் மக்களால் வெளியே கூட செல்ல முடியாத சூழலே நிலவி வருகிறது. இந்த வெப்பத்தைக் குறைக்கும் வகையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல பகுதிகளில் வெப்பம் அசால்டாக 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டுகிறது. இதனால் வெளியே கூட செல்ல முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் வெப்பம் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், மே மாதம் எப்படி இருக்குமோ என மக்கள் இப்போதே அஞ்சுகிறார்கள்.

10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
அதேநேரம் அதீத வெப்பத்தைச் சற்று குறைக்கும் வகையில் அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாகச் சில இடங்களில் திடீர் மழையும் பெய்தே வருகிறது. இதற்கிடையே அடுத்த 3 மணி நேரத்திற்குத் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதாவது இரவு 7 மணி வரை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய நகரங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கலாம் என்றும் டிராபிக் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம்
முன்னதாக வானிலை மையம் வெளியிட்டிருந்த தினசரி செய்திக்குறிப்பில், "மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.. தென்னிந்தியப் பகுதிகளின் மேல், வளிமண்டலக் கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்குத் திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
தமிழகத்தில் இன்று ஏப்ரல் 14ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை ஏப்ரல் 15ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கைப் பொறுத்தவரை இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாகப் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதேநேரம் ஏப்ரல் 16 முதல் 18ம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாகப் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் .
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு
இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். வரும் ஏப்ரல் 16 முதல் 18 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை கிளைமேட்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று (14-04-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications