ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள்.. இரவு முழுக்க 13 மாவட்டங்களில் கொட்டும் நான்-ஸ்டாப் மழை!
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கோவை உட்பட 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. வங்கக்கடலில் அடுத்தடுத்து இரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் உருவாகும் சூழலில், வரும் நாட்களில் மழை மேலும் அதிகரிக்கும் என்றே தெரிகிறது. இது தொடர்பாக வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கையை நாம் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் கடந்த பல நாட்களாகவே பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. பருவமழை சீசன் ஆரம்பித்தது முதலே நல்ல மழை பெய்து வருவதால், பெரும்பாலான நீர்நிலைகளில் தண்ணீர் அளவு தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. மேலும், மாலை நேரங்களில் சென்னை உட்பட பல பகுதிகளில் நல்ல மழை பெய்வதால் கிளைமேட்டும் குளிர்ச்சியாக இருக்கிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

13 மாவட்டங்களில் மழை
இதற்கிடையே அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. அடுத்த 3 மணி நேரத்தில் கோவையில் மழை பகுதிகள், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், தருமபுரி, சேலம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர், அரியலூர், விருதுநகர் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. மேலும், இந்த மழையால் சாலைகளில் நீர் தேங்கலாம் என்றும் இதனால் டிராபிக் பாதிப்பும் ஏற்படலாம் என வானிலை மையம் கூறியுள்ளது.
அடுத்தடுத்து காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள்
வங்கக்கடலில் வரும் நாட்களில் அடுத்தடுத்து இரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் உருவாவதால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் வரும் நாட்களில் மழை மேலும் அதிகரிக்கும் என்றே வானிலை மையம் கூறியிருக்கிறது.. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இன்று (22-09-2025) காலை 0530 மணி அளவில் வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி, காலை 0830 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, மேற்கு-வடமேற்கு திசையில், வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளை நோக்கி அடுத்த 24 மணி நேரத்தில் நகரக்கூடும்.
மழை கொட்டும்
வருகின்ற 25-ஆம் தேதி வாக்கில் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 26-ஆம் தேதி வாக்கில், தெற்கு ஒரிசா - வடக்கு ஆந்திரக் கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 27-ஆம் தேதி வாக்கில் தெற்கு ஒரிசா - வடக்கு ஆந்திரக் கடலோரப்பகுதிகளில் கரையைக் கடக்கக்கூடும்.
இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை கிளைமேட்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று (22-09-2025): வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" எனக் கூறப்பட்டு இருந்தது.












Click it and Unblock the Notifications