சென்னையில் இன்னும் மழை இருக்கு.. அடுத்த 3 மணி நேரத்திற்கு.. 19 மாவட்டங்களுக்கு வானிலை மையம் அலர்ட்!
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி முதல் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

தமிழ்நாட்டில் 'மிக்ஜாம்' புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு, அதாவது 7 மணி வரை தமிழ்நாட்டின் 19 மாவட்டங்களில், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக இப்பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுபுரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications