வங்கக்கடலில் வரும் புயல்? சென்னை உள்பட 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் கூண்டு ஏற்றம்! அர்த்தம் என்ன?
சென்னை: வடகிழக்கு வங்ககடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கதேச கடற்கரை பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வடகிழக்கு வங்கடல் மற்றும் அதனையொட்டி தென்கிழக்கு வங்கதேச கடற்கரை பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வந்தது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி என்பது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

இந்நிலையில் தான் சென்னை,கடலூர், நாகை, எண்ணூர், காட்டப்பாள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் ,தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
பொதுவாக ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு என்பது கடலில் புயல் உருவாகக்கூடிய வானிலைக்கான சூழல் நிலவுவதை குறிக்கும் வகையில் ஏற்படும். அதன்படி தற்போது 9 துறைமுகங்களில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு என்பது ஏற்றப்பட்டுள்ளது. 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு என்பது புயல் உருவாகி உள்ளது என்பதை குறிக்கும் வகையில் இருக்கும்.
அந்த வகையில் தற்போது உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயல் உருவாகும் பட்சத்தில் இரண்டாம் கட்ட புயல் கூண்டு ஏற்படும். இப்படியாக மொத்தம் 11ம் எண் வரை புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றி மீனவர்களுக்கு எச்சரிக்கை என்பது விடுக்கப்படும். இருப்பினும் தற்போது வடகிழக்கு வங்கடல் மற்றும் அதனையொட்டி தென்கிழக்கு வங்கதேச கடற்கரை பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி என்பது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றாலும் அது புயலாக மாறுமா? என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக கடலோர பகுதிகளில் செப்டம்பர் 15 வரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். செப். 16, 17 தேதிகளில் மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 50 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேலும் தமிழகத்தை பொறுத்தவரை மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் செப். 15 முதல் 19 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications