Cyclone fengal: சென்னையில் வெளுத்து வாங்கும் மழை.. 6 சுரங்க பாதைகள் மூடல்.. போக்குவரத்து துண்டிப்பு
சென்னை: சென்னைக்கு 150 கிலோ மீட்டர் தொலைவில் ஃபெஞ்சல் புயல் மையம் கொண்டுள்ள நிலையில், பல மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை இரவு முதல் கன மழை பெய்து வெளுத்து வாங்கி வரும் நிலையில் சென்னையில் 6 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன.
சென்னைக்கு 150 கிமீ தொலைவில் ஃபெஞ்சல் புயல் மையம் கொண்டுள்ளது. தற்போது மணிக்கு 13 கிமீ வேகத்தில் பெஞ்சல் புயல் கரையை நோக்கி நகருகிறது. இதனால் பெஞ்சல் புயல் இன்று மாலையே கரையைக் கடக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.

கனமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தொடர் ஆய்வுகளை நடத்தி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்துள்ளது. கட்டுப்பாட்டு அறையில் இருந்து அனைத்து நிலவரங்களையும் கண்காணித்து வருகிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புயல் எச்சரிக்கை மற்றும் பலத்த மழை காரணமாக, வேளச்சேரி மேம்பாலத்தில் பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி வைத்து வருகின்றனர். இந்தப் புயல் சனிக்கிழமை இரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை காலை கரையைக் கடக்கும் என்று கூறப்படுகிறது. இந்தப் புயல் கொங்கு மண்டலம் வழியாகப் பயணிக்க வாய்ப்புள்ளதால் அப்பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
புயல் கரையைக் கடப்பதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பிற்பகல் ஒரு மணி வரை கன மழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை காரணமாக வெறிச்சோடிக் காணப்பட்டு வருகிறது.
புயல் எச்சரிக்கை மற்றும் பலத்த மழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து இயக்கப்பட வேண்டிய 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆந்திர பேரிடர் மீட்புக் குழுவினர் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளனர். கன மழை காரணமாக 9 சுரங்கப் பாதைகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
சென்னையில் உள்ள 21 சுரங்கப் பாதைகளில் 12 சுரங்கப் பாதைகளில் மழைநீர் தேங்கவில்லை என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை நீர் தேங்கியுள்ள சுரங்கப் பாதைகளான கெங்கு ரெட்டி, ரங்கராஜபுரம் - வீலர், பழவந்தாங்கல், ஆர்பிஐ சுரங்கப்பாதை, பெரம்பூர் அஜாக்ஸ் ஆகிய சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் இதன் காரணமாக சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications