எவ்ளோ பெருசு?.. பல்லாவரம் அருகே கார் ஷெட்டில் புகுந்த பயங்கர மலைப்பாம்பு.. பீதியான மக்கள்
சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூரில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு குடியிருப்பு பகுதியில் பதுங்கியிருந்த 10 அடி நீள மலைப் பாம்பை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கில் இருந்து வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடலில் மத்தியப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து சென்னை அருகே வியாழக்கிழமை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, திருவள்ளூா், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னையில் கடந்த இரு நாட்களாக பெய்த பலத்த மழை நேற்று இரவு முதலே படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வந்ததால் பல்வேறு சாலைகளில் மழை நீர் தேங்கியது.
தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து கடல்போலக் காட்சியளித்தது. பல பகுதிகளில் வீடுகளுக்கு மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகாக பொதுமக்கள் தங்கள் உடைமைகளுடன் பாதுகாப்பான பகுதிகளுக்குச் சென்றனர். பலர் முதல் தளத்திற்கு இடம்பெயர்ந்தனர். பல்வேறு பகுதிகளில் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாத அளவிற்கு மழை நீர் தேங்கியது.
தற்பதோது சென்னையில் மழையின் தீவிரம் குறைந்துள்ளது. சாலைகளில் தேங்கியிருந்த மழை நீர் வடியத் தொடங்கியுள்ளதால் ஒரு சில இடங்களைத் தவிர போக்குவரத்து மீண்டும் சீரடைந்து வருகிறது. சுரங்கப் பாதைகளில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரத்தை அடுத்துள்ள பொழிச்சலூர் பகுதியிலும் நல்ல மழை பெய்தது. இந்நிலையில், பொழிச்சலூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை பின்புறம் உள்ள ஞானமணி நகரில் உள்ள தெருவில் மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பெரிய மலைப் பாம்பு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ளது. கார்ஷெட்டுக்குள் இருந்த அந்த மலைப் பாம்பைக் கண்டு பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்தனர்.
இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 10 அடி நீளத்துக்கு இருந்த அந்த மலைப் பாம்பு காண்போருக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, உடனடியாக அப்பகுதி குடியிருப்பு மக்கள் தாம்பரம் தீயணைப்பு துறை மற்றும் கிண்டி வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து தாம்பரம் தீயணைப்பு துறையினர் மற்றும் கிண்டி வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
தொடர்ந்து, குடியிருப்பு பகுதிக்குள் புகுந்திருந்த 10 அடி நீள மலைப் பாம்பை அரை மணி நேரம் போராடி மீட்டுச் சென்றனர். மழை நீரில் அடித்து வரப்பட்டுள்ள பாம்பால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications