Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

52 வருடத்துக்கு பிறகு, தென்பெண்ணையில் 2 லட்சம் கன அடி தண்ணீர் பெருக்கெடுப்பு..கடலூரை சூழ்ந்த மழைநீர்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: பெஞ்சல் புயலால் கொட்டித் தீர்த்த கனமழையால், தென்பெண்ணையில் 52 வருடங்களுக்கு பிறகு 2 லட்சம் கன அடிக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மேலும், பல்வேறு மாவட்டங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், அந்தந்த பகுதியிலுள்ள மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகிறார்கள்.

பெஞ்சல் புயல் காரணமாக கடும் மழை கடலோர மாவட்டங்களை புரட்டிப்போட்டது.. இதனால், பிரதான அணைகள், ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.. அந்தவகையில், விழுப்புரம் மாவட்டம் வெள்ளக்காடாக மாறியது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கியவர்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.

cuddalore thenpennai dharmapuri

விழுப்புரம்: விழுப்புரம் அருகே திருப்பாச்சனூர், மேட்டுப்பாளையம், பில்லூர், காணை, மரக்காணம், செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் 20 இடங்களில் தரைப்பாலம் மூழ்கியதால் 150 கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

தென்பெண்ணை ஆற்றில் இருந்து வெள்ள நீர் கடலூர் மாநகரப் பகுதிகளான குறிஞ்சி நகர், நடேசன் நகர், குமரப்பா நகர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நகர் பகுதிகளை சூழ்ந்துள்ளது. இதுபோன்று கங்கணாங்குப்பம் உள்ளிட்ட கிராம பகுதிகளிலும் சூழ்ந்துள்ளது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்ததால் அதிகாலை வேளையில் பதறி அடித்து மக்கள் வெளியேறினர்.

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையால், ஏரியில் இருந்து வெளியேறிய வெள்ள நீர், அழகாபுரி பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கடந்த 3 நாட்களாக பெய்த மழையால், மலைப்பாதையில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து சாலையில் விழுந்தது. பல பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டு, ராட்சத பாறைகள் சாலையில் உருண்டு விழுந்தன. திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 40 கால்நடைகள் வெள்ளத்தில் சிக்கி பலியாகின.

ஊத்தங்கரை பஸ் நிலையம் அருகில் பரசனேரி கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட சுற்றுலா வேன்கள் மற்றும் கார்கள், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. கரை ஒதுங்கிய வாகனங்களை பொக்லைன் மூலம் நேற்று மீட்டனர். சின்னப்பனேரியில் அதிக நீர்வரத்து காரணமாக, சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஊத்தங்கரை: தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்ததை தொடர்ந்து கடலூர் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஊத்தங்கரையில் அதிகபட்சமாக 50 செமீ மழை பெய்துள்ளது. இதனால் தாழ்வான பகுதியில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. ஏரிகள் நிரம்பி, உபரி நீர் பரசனேரியை அடைந்தது. பரசனேரி நிரம்பி வழிந்ததால், ஊத்தங்கரை அண்ணா நகர் குடியிருப்புகள் அனைத்தும் வெள்ள நீரில் மூழ்கியது.

வீடுகளை இழந்த மக்கள் மீட்கப்பட்டு, ஊத்தங்கரை பேரூராட்சி திருமண மண்டபம் மற்றும் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏரிகள் நிரம்பியதால் திருப்பத்தூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை, கிருஷ்ணகிரி- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் சூழ்ந்து, போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கு: கொட்டித் தீர்த்த கனமழையால், தென்பெண்ணையில் 52 வருடங்களுக்கு பிறகு 2 லட்சம் கன அடிக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. தென்பெண்ணையாற்றின் நீர் பிடிப்பு பகுதிகளான கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் விடாது பெய்த அடை மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால், சாத்தனூர் அணையில் இருந்து நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு வினாடிக்கு 5,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. படிப்படியாக நீர்வரத்து அதிகரித்தது. நீர் திறப்பு நேற்று அதிகாலை 3:00 மணிக்கு வினாடிக்கு 1.68 லட்ச கன அடியாக உயர்த்தப்பட்டது.

தென்பெண்ணை: திருவண்ணாமலை மற்றும் தென்பெண்ணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை நீர் மற்றும் துரிஞ்சலாற்று நீரும் சேர்ந்து திருக்கோவிலூர் அணைக்கட்டில் 2 லட்சம் கன அடிக்கும் அதிகமாக வெள்ளம் பாய்ந்தோடியது.. அந்தவகையில், 1972ம் ஆண்டு தென்பெண்ணையில் அதிகபட்சமாக 2 லட்சம் கன அடி நீர் பெருக்கெடுத்தது.

கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 30 முகாம்களில் 22,207 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 25 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 12 மணி நேரத்திற்கு மேலாக இந்த மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தொடர்ந்து மக்கள் மீட்கப்பட்டு முகாம்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்த வெள்ளம் காரணமாக கடலூர் - புதுச்சேரி - சென்னை சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

அதிகமான தண்ணீர் பெரிய கங்கணாங்குப்பம் என்ற இடத்தில் ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு சாலையில் செல்வதால் ஆல்பேட்டை மற்றும் சின்ன கங்கனாங்குப்பம் பகுதியில் போலீசார் வாகனத்தைத் தடுத்து நிறுத்தி வருகிறார்கள்.

வேண்டுகோள்: தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கடலூரில் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்துவிட்டது... வெள்ளப்பெருக்கு காரணமாக திருக்கோவிலூர் - விழுப்புரம் இடையேயான சாலையில் தண்ணீர் செல்வதால் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.. இதனால், திருக்கோவிலூர், அரகண்டநல்லூர் உள்ளிட்ட கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது

ஆற்றின் கரையோரம் இருக்கும் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால், மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருந்த நிலையில், தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+