”அந்த மனசு தான்” சென்னையில் மழை நீரில் பழுதாகி நின்ற ஆட்டோ! பஸ் டிரைவர் செய்த காரியம்.. நெகிழ்ச்சி
சென்னை: ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் சென்னையில் இன்று கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ள நிலையில், தி.நகர் பனகல் சாலையில் ஆட்டோ ஒன்று பழுதாகி நின்றது. இதைக் கவனித்த மாநகர பஸ் டிரைவர், பஸ்சை வைத்தே ஆட்டோவை தள்ளி சென்று மேடான பகுதியில் விட்டார். இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. அரசு பஸ் டிரைவரின் செயலை நெட்டிசன்கள் பாராட்டி வருகிறார்கள்.
வங்க கடலில் வலுப்பெற்றுள்ள ஃபெஞ்சல் புயல் மணிக்கு 10 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. காரைக்கால் - மாமல்லபுரம் இடையே இன்று மாலை புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக நேற்று இரவு முதல் சென்னையில் மழை பெய்ய தொடங்கியது. நள்ளிரவில் மிதமாக மழை பெய்த நிலையில், அதிகாலையில் கனமழை கொட்டியது.

காற்றுடன் இடைவிடாமல் பெய்த மழையால் சென்னையில் இயல்பு வாழ்க்கை முடங்கியது. ஜிஎஸ்டி சாலை உள்பட நகரின் முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மிதந்தன. புரசைவாக்கம், பட்டாளம், ஓஎம் ஆர் சாலை, பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் முட்டளவுக்கு மேல் தேங்கியதால் மக்கள் தவிப்புக்கு உள்ளாகினர். மதியத்திற்கு மேல் மழை சற்று சென்னையில் விட்டுள்ளது. இதனால், மாநகராட்சி பணியாளர் ஜெட் வேகத்தில் மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. மாலையில் புயல் கரையைக் கடக்கும் போது மிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 24 மணிநேரத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, பெரம்பலூர், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, கனமழை நீரில் ஆங்காங்கே வாகனங்களும் பழுதாகி நிற்பதையும் காண முடிகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் மழை நீரில் பழுதான வண்டியை தள்ளி செல்வதையும் காண முடிந்தது. அந்த வகையில் சென்னை தி.நகரில் உள்ள பனகல் பார்க் சாலையில் மழை நீரில் ஆட்டோ ஒன்று பழதாகி நின்றது. அப்போது அந்த வழியாக மாநகர அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது.
ஆட்டோ பழுதாகி நின்றதை கவனித்த அரசு பஸ் டிரைவர், ஆட்டோவை பின்புறத்தில் இருந்து பஸ்சை வைத்து தள்ளிவிட்டார். சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு இப்படி தள்ளி சென்றார். ஆட்டோ மேடான பகுதிக்கு வந்து சேரும் வரை பஸ்சானது அரை கிலோ மீட்டர் தூரம் தள்ளி சென்றது. இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நெருக்கடியான நேரத்தில் அரசு பஸ் டிரைவர் செய்த செயலை நெட்டிசன்கள் பாராட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications