அதிகனமழை எச்சரிக்கை.. மக்கள் அச்சமடைய வேண்டாம்! பாலச்சந்திரன் விளக்கம்
சென்னை: தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இது குறித்து விளக்கமளித்த வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், இது வழக்கமான நிகழ்வுதான், எனவே பதற்றமடைய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து அடுத்த நான்கு தினங்களில் விலகக்கூடிய நிலையில், கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் நிலையில், 16 17ம் தேதி வாக்கில், வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் துவங்கக்கூடும்.

எனவே தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில், வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரனிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தனர். குறிப்பாக, தமிழ்நாட்டில் அசாதாரண வானிலை சூழல் நிலவுவதாக கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்கு பதிலளித்திருந்த பாலச்சந்திரன், "இது இயற்கையான நிகழ்வுதான். வழக்கமான மழை காலத்தை எப்படி எதிர்கொள்வோமா, அதேபோல இதையும் எதிர்கொள்ளவேண்டும். சென்னைக்கு ரெட் அலர்ட் எனில், சென்னை முழுவதும் கனமழை பெய்யாது. ஓரிடத்தில் கனமழை எனில், மற்றொரு இடத்தில் இதைவிட அதிகமாகவோ, குறைவாகவோ மழை பெய்யும். அக்.16ம் தேதியை பொறுத்தவரை அனைத்து இடங்களிலும் 22செ.மீ அளவுக்கு மழை பெய்யும் என்று அர்த்தம் கிடையாது.
நேற்று நுங்கம்பாக்கத்தில் 7 மி.மீ. மழையும், கோடம்பாக்கம் பகுதியில் 50 மி.மீ. மழையும் பெய்துள்ளது. எனவே சராசரியாகத்தான் சொல்ல முடியும். கனமழையும் தமிழகம் முழுவதும் கனமழை பெய்யும் என்று அர்த்தமல்ல, ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்பதுதான் தகவல்" என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் கனமழை எச்சரிக்கை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாலச்சந்திரனின் பேட்டி ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக மழை குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், இன்று தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், திருவள்ளூர், இராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications