தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் ஜில்லென்று வரும் மழை.. ஈரமாகப்போகும் ஈரோடு.. மகிழ்ச்சியான செய்தி
சென்னை: கடந்த சில நாட்களாக ஈரோடு, கரூர், சேலத்தில் வெயில் உக்கிரமாக சுட்டெரித்து வரும் நிலையில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் போன்ற மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த இரண்டு மாதங்களாக அதிகமாக இருக்கிறது. இந்த ஆண்டு வேலூரைவிடவும் அதிகபட்ச வெப்பநிலை ஈரோடு கரூர் சேலம் பகுதியில் இருந்தது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுமே வெயிலின் கோரப்பிடியில் இருந்து தப்பிக்க முடியவில்லை.. கத்திரி வெயில் தொடங்கும் முன்பே கடுமையான வெயில் இருந்தது. பொதுவாக கத்திரி வெயிலுக்கு முன்பு வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யும். ஆனால் இந்த முறை மழை கைவிட்டது. இதனால் மக்கள் புழுக்கத்தில் தவித்தனர்.

இந்நிலையில் மழை என்பது கடந்த 3 நாட்களாகத்தான் ஆட்டத்தை தொடங்கி உள்ளது. மிக தாமதமாகவே கோடை மழை பெய்ய தொடங்கி உள்ளது. கடந்த மே 6-ந் தேதி தென் மாவட்டங்கள், உள்மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசான மழை பெய்தது. அதனை தொடர்ந்து வரிசையாக கனமழை மற்றும் மிதமான மழை பெய்ய தொடங்கியது. அண்மையில் பெய்த மழையில் அதிகபட்ச மழை என்றால் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை, கீழ்பென்னாத்தூரில் பெய்த மழை தான்.. அங்கு தலா 9 செ.மீ. மழை பதிவாகியிருந்தது.
சென்னை வானிலை ஆய்வு மையம் மழை குறித்து தற்போது வெளியிடும் அறிவிப்புகளை மக்கள் ஆர்வமுடன் பார்க்கிறார்கள். மழை குறித்து தினமும் தகவல்களை வெளியிடுவதே இதற்கு காரணம் ஆகும். நேற்று சென்னை வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (வியாழக்கிழமை) தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் 30 கி.மீ. முதல் 40 கி.மீ. வரையில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும்.
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும்" என்று கூறியுள்ளது.
கடந்த சில நாட்களாக ஈரோடு, கரூர், சேலம் கடுமையான வெயிலை சந்தித்து வரும் நிலையில் தற்போது பெய்யப்போகும் கோடை மழை அங்கு குளிர்ந்த கால நிலையை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. கோடை மழையை பொறுத்தவரை நாளையும் (வெள்ளிக்கிழமை), நாளை மறுதினமும் (சனிக்கிழமை) சில இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
நாளையும், நாளை மறுதினமும் தமிழ்நாட்டில் சில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், நீலகிரி, கோவை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, திருப்பூரில் ஓரிரு இடங்களில் நாளையும், கோவை மாவட்ட மலைப் பகுதிகள், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, விருதுநகர், மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை மறுதினமும் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில், 'கேஆர்பி அணை, கீழ்பென்னாத்தூர் தலா 9 செ.மீ., மேலாலத்தூர் (வேலூர்), செங்கம் (திருவண்ணாமலை) தலா 7 செ.மீ., கஞ்சனூர் (விழுப்புரம்), நெடுங்கல் (கிருஷ்ணகிரி), மேட்டூர், கெடார் (விழுப்புரம்), அவலூர்பேட்டை (விழுப்புரம்), நேமூர் (விழுப்புரம்) தலா 5 செ.மீ., நாட்றாம்பள்ளி, சூரப்பட்டு (விழுப்புரம்), ஒகேனக்கல், வேலூர், குடியாத்தம், காட்பாடி தலா 4 செ.மீ., ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), விரிஞ்சிபுரம் (வேலூர்), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை), கிருஷ்ணகிரி, போளூர், ராயக்கோட்டை, பரங்கிப்பேட்டை, திருக்கோவிலூர் தலா 3 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பெய்திருக்கிறது.
கோடை வெயிலுக்கு இதமாக, மழை பெய்யத் தொடங்கி இருப்பதால், ஓரளவுக்கு வெப்பத்தின் தாக்கம் தமிழகத்தில் குறையத் தொடங்கி இருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications