அடுத்த 3 மணி நேரம்! திருவள்ளூர் டூ குமரி வரை.. 19 மாவட்டங்களில் வெளுக்கப் போகுது மழை.. ஆரஞ்சு அலர்ட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர் முதல் குமரி வரை 19 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் தற்போதே மழை கொட்டத் தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கோடைக்கால சீசன் ஆரம்பித்துள்ளதால் வெயில் கொளுத்தி எடுக்கிறது. சென்னை, வேலூர் மாவட்டங்களில் வெயில் அதிகமாக இருந்தாலும் மற்ற மாவட்டங்களில் வெயிலுக்கு பிரேக் விடும் வகையில் மழை கொட்டி வருகிறது.

19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட நாட்களாக வெயிலும் மழையும் என மாறி மாறி கிளைமேட் இருந்து வருகிறது. இன்றும் கூட காலை நேரங்களில் வெயில் அடித்த நிலையில் தற்போது குளிர்ந்த சூழல் நிலவுகிறது.
குறிப்பாக மாலை 4 மணியளவில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை கொட்ட ஆரம்பித்துவிட்டது. மேகங்கள் திரண்டு குளிர்ச்சியான சூழல் நிலவியது. தொடர்ந்து லேசான மழை ஒருசில இடங்களில் பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று இரவு 7 மணி வரை தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
ஆரஞ்சு நிற எச்சரிக்கை
வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- "தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இன்று இரவு 7 மணி வரை 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கரூர், நாமக்கல், திருச்சி, திருவாரூர், நாகைப்பட்டிணம், கோவை, திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் என 19 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சில இடங்களில் தண்ணீர் தேங்க வாய்ப்பு உள்ளது என்றும், தாழ்வான சாலைகளில் தண்ணீர் தேங்கவும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. முன்னதாக அடுத்த ஒரு வாரத்திற்கான மழை அப்டேட்டில் வானிலை மைய கூறியிருப்பதாவது:-
3 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
"தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. எனவே 27-04-2025 மற்றும் 28-04-2025ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
29-04-2025 முதல் 02-05-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 03-05-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் நிலவரம் என்ன
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (27-04-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (28-04-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
* அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்த அளவில், 27-04-2025 மற்றும் 28-04-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. 29-04-2025 முதல் 01-05-2025 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3° செல்சியஸ் வரை உயரக்கூடும்.
* இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு: 27-04-2025 மற்றும் 28-04-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருக்கக்கூடும். 29-04-2025 முதல் 01-05-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
* 27-04-2025 முதல் 01-05-2025: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
மழை அளவு (செமீ):
* குழித்துறை (கன்னியாகுமரி), ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), நெய்யூர் AWS (கன்னியாகுமரி) தலா 4 செமீ மழை பெய்துள்ளது.
* பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), பேச்சிப்பாறை AWS (கன்னியாகுமரி), சிவகங்கை (சிவகங்கை), சிற்றாறு-) (கன்னியாகுமரி), குளச்சல் (கன்னியாகுமரி) தலா 3 செமீ மழை பெய்துள்ளது.
* சேரன்மகாதேவி (திருநெல்வேலி), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), பாண்டவரடி (திருவாரூர்), பழைய தாலுகா அலுவலகம் ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி), பாலமோர் (கன்னியாகுமரி), திருச்சுழி (விருதுநகர்). வால்பாறை PTO (கோயம்புத்தூர்), அதிராமப்பட்டினம் (தஞ்சாவூர்), சுருளக்கோடு (கன்னியாகுமரி), உபாசி TRE AWS (நீலகிரி) தலா 2 செமீ மழை பெய்தள்ளது.
* நாகர்கோயில் (கன்னியாகுமரி), களியல் (கன்னியாகுமரி), நாகர்கோயில் ARG (கன்னியாகுமரி), மேலூர் (மதுரை), பெரியாறு (தேனி), தக்கலை (கன்னியாகுமரி), கமுதி ARG (ராமநாதபுரம்), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), ஓரத்தநாடு (தஞ்சாவூர்), சோலையார் (கோயம்புத்தூர்), கமுதி (ராமநாதபுரம்), ராதாபுரம் (திருநெல்வேலி), பேராவூரணி (தஞ்சாவூர்), சிவலோகம்(சிற்றாறு-II) (கன்னியாகுமரி), சின்கோனா (கோயம்புத்தூர்), விளாத்திகுளம் (தூத்துக்குடி), இரணியல் (கன்னியாகுமரி), காரியாப்பட்டி (விருதுநகர்) தலா 1 என மழை பதிவாகியிருக்கிறது.
வெப்பநிலை நிலவரம்:
* அதிகபட்ச வெப்பநிலையாக சேலம் மாவட்டத்தில் 39.1° செல்சியஸ் பதிவாகியிருக்கிறது.
* குறைந்தபட்ச வெப்பநிலையாக (சமவெளிப்பகுதிகளில்) அதிராமபட்டினத்தில் 22.9° செல்சியஸ் வெயில் பதிவாகியிருக்கிறது.
* கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் குறைந்துள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை.
* அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது. தமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 36 39" செல்சியஸ், வடதமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34 37° செல்சியஸ், தென் தமிழக கடலோரப் பகுதிகளில் 34° செல்சியஸ், மலைப்பகுதிகளில் 21 28° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள் / அரபிக்கடல் பகுதிகள் / வங்கக்கடல் பகுதிகள்: 27-04-2025 முதல் 01-05-2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications