அடுத்த 2 மணி நேரம்.. குடையை ரெடியா வச்சுக்கோங்க! சென்னை டூ குமரி வரை 15 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்டும், சென்னை, திருவள்ளூர், கடலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. தொடர்ந்து கோவை, திருப்பூர், தஞ்சை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. நேற்று இரவு மதுரையில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக மாறியது. பல இடங்களில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. பல இடங்களில் இன்னும் தண்ணீர் வற்றவில்லை. குறிப்பாக 15 நிமிடங்களில் மதுரையில் 45 மிமீட்டர் மழை பதிவானதாக வானிலை மையமும் தெரிவித்து இருந்தது.
இதனை தொடர்ந்து தற்போது நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக நேற்று குமரி மற்றும் தென்காசி மாவட்டத்தில் கனமழை பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்று குமரி ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கான ஆரஞ்சு நிற அலர்ட் விடப்பட்டுள்ளது. இதேபோன்று இன்று இரவு 7 மணி வரை தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், கடலூர், பெரம்பலூர், நாமக்கல், தேனி, திண்டுக்கல், கோவை, விருதுநகர், மதுரை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட ஒருவாரத்திற்கான மழை அப்டேடில் கூறியிருப்பதாவது:- தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை முதல் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 31 மற்றும் 1ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications