பாட்டாசை சீக்கிரம் காலி பண்ணுங்க.. 18 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்!
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று மாலை 4 மணிக்குள் 18 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு இயல்பை விட அதிக அளவு பருவமழை பொழிந்திருக்கிறது. குறிப்பாக கடந்த ஜூலை மாதம் தொடங்கி, செப்டம்பர் இறுதியில் முடிவடைந்த தென்மேற்கு பருவமழையானது, கேவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் போதுமான அளவுக்கு பெய்திருந்தது. ஆனால், சென்னை தொடங்கி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை போதுமான அளவுக்கு பெய்யவில்லை.

இப்படி இருக்கையில் அக்.1ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இந்த மழை வட மற்றும் டெல்டா மாவட்டங்களில் அடித்து பெய்தது. இப்போதுவரை இயல்பை விட 28% அதிக அளவில் மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக நேற்று சென்னை அண்ணா நகரில் 10 செ.மீ வரை மழை பெய்துள்ளது. அதேபோல நியூ மணலி டவுன், கொளத்தூர், பெரம்பூர், அமைந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் 6 செ.மீ மழை (60 மி.மீ) பதிவாகியுள்ளது.
இப்படி இருக்கையில் மாலை 4 மணிவரை நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
முன்னதாக இன்று வெளியான வானிலை அறிவிப்பில், "மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு ஆந்திராவை ஒட்டிய தென்மேற்கு வங்ககக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திண்டுக்கல், மதுரை, திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நவ.2 தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications