ஜில்லா.. ஹீட்டா.. தமிழகத்தில் இன்று கிளைமேட் எப்படி? வானிலை மையம் கொடுத்த அப்டேட்
சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் வெப்பநிலையை பொறுத்தவரை இயல்பை விட 2 -3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கலாம் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ளது. எனினும் கடந்த ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. கோவை, விருதுநகர், தேனி, தென்காசி, நீலகிரி, குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நேற்றும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது.

நேற்று மழை பெய்த இடங்கள்
குறிப்பாக மதியத்திற்கு பிறகு மழை பல்வேறு மாவட்டங்களில் வெளுக்க தொடங்கியது. பெரம்பலூர், கோவை, விருதுநகர், திருச்சி மாவட்டங்களில் நேற்று இரவு கனமழை பெய்தது. சேலம், தஞ்சை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, நாமக்கல், திருப்பூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு லேசானது முதல் மிதமான மழை பெய்தது. சென்னை வானிலை ஆய்வு மையமும் 19 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கணிப்பின் படியே, அவ்வப்போது தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. வெயில் ஒருபுறம் சுட்டெரிக்க மழையும் ஒருபுறம் பெய்து ஆறுதல் படுத்தி வருகிறது. எனினும் தமிழகத்தின் வட கிழக்கு மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. வட கிழக்கு மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என்றும் வானிலை மையம் கூறியிருந்தது.
இன்று தமிழகத்தில் கிளைமேட் எப்படி
இந்த நிலையில் தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் வெப்பநிலையும் ஒரு சில இடங்களில் இயல்பை விட இரண்டு முதல் 3 டிகிரி வரை உயர வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் கூறியிருப்பதாவது:-
கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று 14 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் இன்று எப்படி
நாளை முதல் வரும் 19 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்தவரை இன்று முதல் 17 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை சற்று உயரக்கூடும். இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். இன்று மற்றும் நாளை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: 14-04-2025 முதல் 17-04-2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை. * வங்கக்கடல் பகுதிகள் & அரபிக்கடல் பகுதிகள்: 14-04-2025 முதல் 17-04-2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications