செம்பரம்பாக்கம் கிடுகிடு.. 5 மணி நேரத்தில் 10 மடங்கு உயர்ந்த நீர்வரத்து! அச்சத்தில் சென்னை மக்கள்!
சென்னை: செம்பரம்பாக்கம் ஏரி 24 அடியில், 19 அடியை எட்டியுள்ளது. இன்று காலை 449 கன அடியாக இருந்த நீர் வரத்து தற்போது 4,764 கன அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து சென்னை சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் கடந்த 5 மணி நேரத்தில் நீர் வரத்து 10 மடங்கு அதிகரித்துள்ளது சென்னை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'ஃபெஞ்சல்' புயலாக (ஃபெங்கல்) வலுப்பெற்றுள்ளது. இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரிக்கு கிழக்கே 120 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 110 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் தற்போது மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.

'ஃபெஞ்சல்' புயல் இன்று பிற்பகல் கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தற்போது இன்று மாலை கரையைக் கடக்கும் என்று கணித்துள்ளது. பெஞ்ஜல் புயல், காரைக்கால் மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், ஃபெஞ்சல் புயல் நாளை அதிகாலை தான் கரையைக் கடக்கும் எனக் கணித்துள்ளார். இந்தப் புயல் புதுச்சேரி - மரக்காணம் இடையே இன்று இரவுக்கு மேல் கரையைக் கடக்கும் என வெதர்மேன் தெரிவித்து உள்ளார்.
ஃபெஞ்சல் புயலின் தாக்கம் காரணமாக கடந்த 2 நாட்களாக சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு பெய்ய தொடங்கிய மழை இன்னமும் ஓயவில்லை. தொடர்ந்து விடாது பெய்து வரும் மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். தாழ்வான குடியிருப்புகளுக்கு உள்ளேயும் மழைநீர் புகுந்துள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது கனமழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை வட்டாரத்தில் மழை விடாது பெய்து வருவதால் நீர்நிலைகளில் நீர் வரத்து உயரத் தொடங்கி உள்ளது. குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர் வரத்து வேகமாக அதிகரித்து வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் நேற்று 385 கனஅடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை 449 கனஅடியாக அதிகரித்தது. இந்நிலையில், அடுத்த 5 மணி நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 4,764 கன அடியாக உயர்ந்ததுள்ளது. அதாவது 5 மணி நேரத்தில் 10 மடங்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடியில் தற்போது 2,368 மில்லியன் கன அடிக்கு நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், செம்பரம்பாக்கம் ஏரி விரைவில் நிரம்பக்கூடும். செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பினால் சென்னையில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதால் சென்னை வாழ் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications