Rain Alert: சென்னை + 16 மாவட்டங்களில் இன்று இரவு மழை கொட்டப்போகுது.. வானிலை மையம் அலர்ட்
சென்னை: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, ஈரோடு உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
இந்த நிலையில் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, ஈரோடு, கோவை, தென்காசி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை முன்னெச்சரிக்கை
மேலும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் குமரி கடலை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை முதல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை பெரும்பாலான இடங்களிலும், 7, 8 தேதிகளில் ஒருசில இடங்களிலும், 9 ஆம் தேதி ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
செவ்வாய்க்கிழமை
5 ஆம் தேதி நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் அதிகனமழையும், தேனி, தென்காசி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
6 ஆம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களிலும், 7-ம் தேதி கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை முதல் 6-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
அதிகபட்ச மழை
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக புதுக்கோட்டையில் 14 செமீ, புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் 12 செமீ, குடிமியான்மலை, காரையூர், கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் தலா 11 செமீ, புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல், பெருங்களூர், திருச்சி மாவட்டம் துவாக்குடி, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஆகிய இடங்களில் தலா 8 செமீ மழை பதிவாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications