மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் பின்புறம் வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள்! உடனே கவனிக்குமா நிர்வாகம்?
சென்னை: மிக்ஜாம் புயல் சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.
டிசம்பர் நான்காம் தேதி கொட்டித்தீர்த்த பேய் மழையால், குடியிருக்கும் பகுதியில் மழை நீர் சூழ்ந்ததால் மாங்காடு பகுதிவாசிகள் மிகவும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலை சுற்றி உள்ள பகுதிகளில், மழை நீர் சூழ்ந்து இருந்ததால், அம்மன் கோவில் இரண்டு தினங்களாக இருளில் மூழ்கி இருந்தது.
மிக்ஜாம் புயல்: 2015ம் ஆண்டு மிகப்பெரிய பாதிப்பை சந்தித்த மாங்காடு பகுதி வாசிகள், மிக்ஜாம் புயலை சிரமமின்றி கடந்து விடலாம் என்று சற்று மேம்போக்காக இருந்தனர். ஆனால், மிக்ஜாம் புயலோ 2015 என்ன.. அதைவிட ஸ்பெஷல் ஐட்டம் இது என்று ஒரு காட்டுகாட்டி விட்டது. மழை நீரே இங்கு தேங்காது என்று பெருமைப்பட்டுக்கொண்டவர்களின் வீட்டுக்குள் கனுக்கால் வரை மழை நீர் புகுந்தது தான் வேதனை.

சிரமத்தில் மக்கள்: மாங்காடு அம்மன் கோவிலை சுற்றி உள்ள சாதிக் நகர், எத்திராஜ் நகர், கீழ் ரகுநாத புரம், மேல் ரகுநாதபுரம், திருப்பதி நகர் போன்ற பகுதிகளில் இடுப்பளவு தண்ணீரில் மக்கள் தவித்துவந்தனர். மின்சாரம் இல்லை, அத்தியாவசிய தேவைக்கு தண்ணீர் இல்லை, தொலைத்தொடர்பு வசதி இல்லை என இரண்டு நாட்களாக மக்கள் மிகவும் சிரமத்தை சந்தித்தனர்.

சீரான மின் விநியோகம்: இதையடுத்து நேற்று இரவு ஒலிபெருக்கி மூலம் மாங்காடு பகுதி வாசிகளுக்கு மின்விநியோகம் படிப்படியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இரவு 9 மணி அளவில் மாங்காட்டில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டது.
பொதுமக்கள் வேதனை: மாங்காட்டின் பிரதான சாலைகளான குமணன்சாவடி, பட்டூர் கூட்டு ரோடு, குன்றத்தூர் மெயின் ரோடு போன்ற பகுதிகளில், மோட்டார் மூலம் மழை நீர் அகற்றப்பட்டு வருகிறது. ஆனால், மாங்காட்டின் உட்பகுதியில் இருக்கும் எத்திராஜ் நகர், கணபதி நகர், சாதிக் நகர் பகுதியில் மழை நீர் அகற்றப்படவில்லை.

இந்த பகுதி மக்களுக்கு எந்த ஒரு நிவாரணமும் வரவில்லை, ஒருவரும் வந்து எட்டிக்கூட பார்க்கவில்லை என்று அப்பகுதி வாசிகள் புகார் தெரிவித்துள்ளனர். நிவாரணம் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, தேங்கி இருக்கும் மழை நீரையாவது எடுங்கள் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications