தென்தமிழகத்தில் இன்று மழை கொட்டும்.. அப்போ சென்னையில் என்ன கிளைமேட்! சிஎஸ்கே மேட்ச் வேற இருக்கே
சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் வெப்பம் சுட்டெரிக்கும் நிலையில், இன்று தென்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த பருவமழை சமயத்தில் நல்ல மழை கிடைத்தது. இதனால் மாநிலத்தில் உள்ள முக்கிய நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பின. இருப்பினும், அதன் பிறகு மாநிலத்தில் பெரியளவில் மழை இல்லை. பருவமழை முடிந்த உடனேயே மாநிலத்தில் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியது.

வழக்கமாக மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் மாதம் தான் வெப்பம் சுட்டெரிக்கும். ஆனால், இந்த முறை பிப். மாதமே வெப்பம் அதிகரிக்க ஆரம்பித்து. கடந்த மாதமே ஈரோடு, கரூர் பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் வெப்பம் சதமடித்தது. இதனால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
கோடை மழை: இதனால் கோடைக் காலத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. நேற்றைய தினம் அதிகபட்சமாக ஈரோட்டில் 100.7 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இதற்கிடையே இன்று மாநிலத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த பல நாட்களாகவே கோடை வெயில் படாய் படுத்தி வரும் நிலையில், நிம்மதி தருவதாக இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமா இன்று மார்ச் 22ஆம் தேதி தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் மார்ச் 23ஆம் தேதி முதல் மார்ச் 28ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்த போதிலும் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாலுமுக்கில் (திருநெல்வேலியில்) 40 மிமீ மழை பெய்துள்ளது., புலிப்பட்டி (மதுரை), ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), நாகுடி (புதுக்கோட்டை), பழைய தாலுகா அலுவலகம் ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி) ஆகிய இடங்களில் தலா 20 மிமீ மழை பெய்துள்ளது. மேலும், வரும் நாட்களில் மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை என கூறப்பட்டுள்ளது.
சென்னை கிளைமேட் என்ன: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, "அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டின் முதல் ஐபிஎல் போட்டி சென்னையில் இன்று ஆரம்பிக்கிறது. இதில் முதல் போட்டியில் சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் மோதுகின்றனர். தல தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி உள்ள நிலையில், சிஎஸ்கே அணியை ருத்துராஜ் முதல்முறையாக வழிநடத்த இருக்கிறார். அவரது கேப்டன்சி எப்படி இருக்கும் என்று மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், மழை காரணமாகப் போட்டியில் பாதிப்பு ஏற்படாது என்பது வானிலை மைய அறிக்கையில் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications