ஆஹா! 73 ஆண்டுகளில் இல்லாத மழை.. ஜூனில் மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம் செய்த சாதனை.. வானிலை மையம் தகவல்
சென்னை: சென்னையில் ஜூன் மாதம் பெய்த மழைகளில் மீனம்பாக்கத்தில் 73 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது முறையாக அதிகபட்ச மழை தற்போது பெய்ததாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெப்பத்தால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது.

இந்த மழையால் வெயிலின் தாக்கம் நேற்று அந்த அளவுக்கு இல்லை. மாலைக்கு மேல் லேசான மழை பெய்தது. ஆனால் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது.
இந்த மழையால் 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது 27 ஆண்டுகளுக்கு பிறகு இன்றுதான் என்கிறார்கள். சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறுகையில் தமிழகம், புதுவையில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. தென் பகுதியில் இருந்தும் வட பகுதியிலிருந்தும் காற்று வேகமாக வீசி வருகிறது. இவை இரண்டும் ஒரு இடத்தில் சந்தித்துக் கொண்டதால் மழை பெய்து வருகிறது.
இன்னும் 3 நாட்களுக்கு மழை பெய்யும். குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், கள்ளக்குறிச்சியில் மழை தொடரும். 1996 ஆம் ஆண்டுக்கு பிறகு ஜூன் மாதத்தில் சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. தற்போது இது இரண்டாவது அதிகபட்ச மழையாகும்.
1996 ஆம் ஆண்டு 282.2 மி,மீ, மழை பதிவாகியிருந்தது. அது போல் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 158.2 மி.மீ. மழை பெய்துள்ளது. அது போல் நுங்கம்பாக்கத்தில் 1991 ஆம் ஆண்டு 191.9 மி.மீ. மழையும் 1996- 347.9 மி.மீ. மழையும் 2023- 84.7 மி.மீ. மழையும் பெய்துள்ளது. எனவே இன்று பெய்த மழை ஜூன் மாதத்தில் நுங்கம்பாக்கத்தில் பெய்த 3ஆவது மிகப்பெரிய மழையாகும். இவ்வாறு வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
தரமணி, ஆலந்தூர் ஆகிய இடங்களில் தலா 14செ.மீ. மழையும் செம்பரம்பாக்கத்தில் 13 செ.மீ. மழையும் அண்ணா பல்கலைக்கழகத்தில் 10 செ.மீ. மழையும் குன்றத்தூரில் 9 செ.மீ மழையும் பெய்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications