சென்னைவாசிகளுக்கு குட்நியூஸ்.. கமிஷனர் ஆபீஸ்ல 7வது மாடியில கவனிச்சீங்களா? நிம்மதியில் சென்னை
சென்னை: பருவமழை தீவிரமாகப்போவதால், சென்னை மக்களுக்கு, முக்கிய வசதிகளை போலீசார் ஏற்படுத்தி தந்துள்ளார்கள்.

கடந்த 2 மாத காலமாகவே, பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு செய்து வருகிறது. அதிலும், இந்த முறை, வடகிழக்கு பருவமழை தாமதமாக துவங்கும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தபோதே, மழைநீர் வடிகால் பணிகள் குறித்த ஆய்வினை, தமிழக தலைமைச் செயலாளர் முன்னெடுத்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, சென்னையின் மழைநீர் தேங்கும் பகுதிகளில் நேரடி ஆய்வுகளும் நடத்தப்பட்டு, அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
பருவமழை: அதேபோல, பருவமழையை முன்னிட்டு சென்னை காவல்துறை, சில தினங்களுக்கு முன்பு, தன்னுடைய முகநூல் பக்கத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பதிவு ஒன்றினை பதிவிட்டிருந்தது.
குறிப்பாக, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும், சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை கண்டு நம்ப வேண்டாம். அவசர நிலைகளுக்கு 100ஐ அழைக்கவும், மாவட்ட பேரிடர் மீட்புப் படை (DDRF) குழு எந்த ஒரு துயரச் சூழலையும் கையாள தயாராக உள்ளது, காவல்துறை ரோந்து மற்றும் அதிகாரிகள் மற்றும் ஆட்கள் உங்களுக்கு சேவை செய்ய 24 மணி நேரமும் தயாராக உள்ளது" சென்னை பெருநகர காவல்துறை நம்பிக்கை தெரிவித்திருந்தது.
ஸ்பெஷல் ரூம்: இந்நிலையில், சென்னையில் மழைநீர் தேங்காமல் கண்காணிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கமிஷனர் அலுவலகத்திலேயே, ஸ்பெஷல் கன்ட்ரோல் ரூம் திறக்கப்பட்டிருக்கிறது.
விரைவில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் என எதிர்பார்க்கப்படும்நிலையில், இந்த மழையை எதிர்கொள்ளவும், சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து தடைபடுவதைத் தடுக்கவும் வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தின் 7-வது மாடியில் சிறப்புக் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
சென்னை காவல் துறை, தீயணைப்புத் துறை, மாநகராட்சி ஆகியவை ஒருங்கிணைந்து இந்த கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்துள்ளன.. பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க, 044-23452437 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவசர எண்: சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டாலோ, குடியிருப்புக்குள் மழைநீர் புகுந்தாலோ, மழைநீர் சூழ்ந்தாலோ பொதுமக்கள் இந்த சிறப்புக் கட்டுப்பாட்டு அறைக்கு, 044-23452437 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவித்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பணியாளர்கள் விரைந்து மழை நீரை அகற்றி தேவையான உதவிகளை செய்வார்கள் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் சொல்லும்போது, "சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கினாலும் உடனடியாக அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் முக்கியமான 14 சுரங்கப் பாதைகள் உள்ளன.
அவற்றிலும் தண்ணீர் தேங்காமல் இருக்கநடவடிக்கை எடுத்து வருகிறோம்.. ஒருவேளை, மழைப்பொழிவு அதிகமாகி அங்கு தண்ணீர் தேங்கினாலும்கூட, அதை மின்சார மோட்டார் பம்ப் மூலம் அகற்றநடவடிக்கை எடுக்கப்படும்..
சென்னைவாசிகள்: மொத்தத்தில், மழைநீர்தேங்கி எந்தவித பிரச்சினையும் மக்களுக்கு ஏற்படாதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்... அப்படி எந்த தொந்தரவு ஏற்பட்டாலும், இந்த சிறப்புக்கட்டுப்பாட்டு அறையை பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம்'' என்றனர். போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையானது, சென்னைவாசிகளுக்கு பெருத்த மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications