சென்னை மயிலாப்பூரில் சாலையில் தடுமாறி விழுந்து மயங்கிய பெண்.. உடனே ஓடிச்சென்று உதவிய போலீஸ்
சென்னை: சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பின் படியே நேற்று இரவு தொடங்கி, விட்டு விட்டு சென்னையில் கனமழை பெய்து வருகிறது.சென்னை மயிலாப்பூரில் வயதான பெண், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் தண்ணீர் தேங்கியிருந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் தடுமாறி, மழை நீரில் விழுந்தார். சாலை விழுந்த உடன் மயங்கிய அவரை போலீசார் உடனடியாக மீட்டனர்.
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று அதிகாலை 5.30 மணிக்கு உருவாகி இருக்கிறது. இந்த தாழ்வு பகுதியானது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலவும். இது 2 நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம், அதையொட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதி மற்றும் புதுச்சேரியை நோக்கி நகரும்.

அதேபோல், தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. மேலும், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக இன்று டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அந்த வகையில், 15 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும். வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை வடதமிழகத்தில் அனேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் கூறியிருந்தது.
சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பின்படியே நேற்று இரவு தொடங்கி, விட்டு விட்டு சென்னையில் கனமழை பெய்து வருகிறது.
மழை இரவு முழுவதும் பரவலாக பெய்தது. காலை வரை விட்டு விட்டு பெய்து வந்தது. காலை 8 மணிக்கு மேல் மழை மீண்டும் மெதுவாக ஆரம்பித்தது. தற்போது பல இடங்களில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக சென்னையில் தாழ்வான சாலை பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. சில சாலைகளில் பள்ளங்கள் இருப்பதால், தண்ணீர் அங்குமே அதிகமாக தேங்கி உள்ளது. மழை பாதிப்பு அதிகமாக உள்ளதால் மக்கள் தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். அதேபோல் சாலைகளில் இருசக்கர வாகனத்தில் செல்லும் மக்கள் கவனமாக பயணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். அதேநேரம் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் சென்று வருகிறார்கள்.
அப்படித்தான் சென்னை மயிலாப்பூர் வயதான பெண், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவர் சாலையில் சென்று கொண்டிருந்த போது, மழை பெய்து கொண்டிருந்தது. அத்துடன் சாலையில் தண்ணீரும் தேங்கி காணப்பட்டது. அப்போது இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் தடுமாறி, மழை நீரில் விழுந்தார். இதைகண்ட போலீசார் உடனடியாக விரைந்து சென்று அவரை தூக்கி சென்று முதல் உதவி அளித்தனர். அவர் மயக்கம் தெளிந்த நிலையில் தண்ணீர் கொடுத்து, பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications